எல்லா பெரிய ஹீரோக்களும் வாழ்நாளில் ஒரு முறையாவது போலீஸ் வேடத்தில் நடித்து விட வேண்டும் என்பது சினிமாத்துறையில் எழுதப்படாத விதி. ஆனால், நடிகர் பிரபுதேவாவுக்கு ஏனோ இதுவரை அப்படி ஒரு வாய்ப்பு அமையாமலேயே இருந்து வந்தது. இப்படி பல ஆண்டுகளாக விதிவிலக்காக இருந்துவந்த பிரபு தேவாவை, பொன் மாணிக்கவேல் படம் மூலம் விடாமல் பிடித்துக்கொண்டுள்ளது விதி. பிரபுதேவாவின் முதல் போலீஸ் படம் என்ற எதிர்பார்ப்புடன் வெளியான பொன் மாணிக்கவேல் திருப்திகரமாக இருந்ததா...?
ஒரு மூத்த நீதிபதி மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். கொலையாளியைக் கண்டுபிடிக்க போலீஸார் திணறுகின்றனர். இதனால் கொலையாளியைக் கண்டுபிடிக்க விருப்ப ஓய்வு பெற்ற ஸ்பெஷல் போலீஸ் அதிகாரி பிரபுதேவாவை நியமிக்கின்றனர். ஐபிஎஸ் அதிகாரியான பிரபுதேவா கொலையாளியைக் கண்டுபிடித்தாரா, இல்லையா? அவர் ஏன் ஓய்வு பெற்றார்? என்பதே பொன் மாணிக்கவேல் படத்தின் மீதி கதை.
பிரபு தேவாவை மட்டும் வைத்துக்கொண்டு ஒரு அரதப்பழசான போலீஸ் கதையை பழைய பாணியில் கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்துள்ளார் இயக்குநர் முகில் செல்லப்பன். படத்தின் ஆரம்பம் முதலே அலட்டல் இல்லாத போலீஸ் அதிகாரியாக வரும் பிரபு தேவா, கொலையாளியைக் கண்டுபிடிக்க துப்பு துலக்கும் காட்சிகளில் வித்தியாசம் காட்ட போக்கிரி விஜய் பாணியைக் கையாண்டுள்ளார். எந்த சலனமும் இன்றி அதிரடியான காட்சிகளில் கூட அமைதியான போக்கையே பிரபுதேவா கடைபிடிப்பதால் கதையில் சற்று சுவாரஸ்யம் கூடுகிறது. ஆனால் படத்தில் இருந்த கொஞ்சநஞ்ச சுவாரஸ்யமும் கொலையாளியைக் கண்டுபிடித்தவுடன் சுத்தமாக மறைந்து விடுகிறது. அதன் பின் படம் முழுவதும் அயற்சியுடனேயே பயணித்து முடிவடைகிறது.
மிடுக்கான தோற்றத்தில் வரும் பிரபு தேவா இப்போதும் இளைமையாகவே தெரிகிறார். எந்த ஒரு காட்சிக்கும் அதிகமான மெனக்கெடல் இல்லாமல் ஈசியாகவே நடித்துள்ளார். இருந்தும் இவரது கதாபாத்திரத்தில் போலீஸுக்கான கம்பீரம் சற்று குறைவாகவே தென்படுகிறது. வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நிவேதா பெத்துராஜ் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி டூயட் பாடிவிட்டுச் சென்றுள்ளார். வழக்கமான கார்பரேட் வில்லன்களாக வரும் சுதன்சு பாண்டே மற்றும் சுரேஷ் மேனன் வழக்கமான வில்லத்தனம் காட்டிவிட்டு மறைந்துள்ளனர்.
போலீஸாக வரும் பாகுபலி பிரபாகர் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி மனதில் பதிகிறார். சிறிது நேரமே வந்து சென்றுள்ளார் இயக்குநர், நடிகர் மகேந்திரன். இமான் இசையில் உதிரா பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசை படத்துக்கு வேகம் கூட்ட முயற்சி செய்துள்ளது. கே.ஜி வெங்கடேஷ் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் அனல் பறந்துள்ளது.
இப்போது உள்ள காலகட்டத்தில் உண்மைக்கு மிக நெருக்கமாகவும், ராவான கதைக்களத்துடன் கூடிய பல்வேறு போலீஸ் படங்கள் வெளியாகி ஹிட்டுக்கான ரேஸில் முந்திக்கொண்டு ஓட முயற்சிக்கும் போது, அவற்றிற்கு நடுவே பழைய ட்ரெண்டில் உருவாகி ஓடிடியில் ரிலீஸாகியுள்ள பொன் மாணிக்கவேல் படமும் ஓட முயற்சித்து தடுக்கியிருக்கிறது.
பொன் மாணிக்கவேல் - கம்பீரம்! (பெயரில் மட்டும்)