Skip to main content

கெத்தா...? - ‘பத்து தல’ விமர்சனம்!

Published on 30/03/2023 | Edited on 30/03/2023

 

 Pathula thala movie review

 

2017 ஆம் ஆண்டு சிவ ராஜ்குமார் நடிப்பில் கன்னடத்தில் வெளியான மஃப்டி திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக் ஆக வெளியாகி உள்ளது எஸ்.டி.ஆரின் பத்து தல. கன்னடத்தில் இப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது போல் தமிழிலும் வரவேற்பைப் பெற்றதா?

 

கன்னியாகுமரியில் மிகப்பெரிய தாதாவாக இருக்கும் ஏஜிஆர் சிம்பு தமிழ்நாட்டின் அரசியலை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். தான் தேர்ந்தெடுக்கும் நபரையே முதலமைச்சர் ஆக்கும் பவரில் இருக்கும் சிம்பு, தமிழ்நாட்டின் தற்போதைய முதலமைச்சர் சந்தோஷ் பிரதாப்பை கடத்தி விடுகிறார். இதை கண்டுபிடிக்க அண்டர் கவர் போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் சிம்புவிடம் அடியாளாக வேலை செய்கிறார். போன இடத்தில் காணாமல் போன முதலமைச்சரை போலீஸ் அதிகாரி கௌதம் கார்த்திக் கண்டுபிடித்தாரா இல்லையா? சிம்பு ஏன் முதலமைச்சரை கடத்த வேண்டும்? சிம்புவிடம் கௌதம் கார்த்திக் பிடிபட்டாரா? இல்லையா? சிம்புவின் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு விடையாக உருவாகியுள்ளது பத்து தல திரைப்படம். 

 

ஒரு அண்டர் கவர் ஆபிஸர் - மிகப்பெரிய தாதா இடையே நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டத்தை அரசியல் சடுகுடுவோடு சேர்த்து சென்டிமெண்ட் பில்டப்புகளுடன் கொடுத்து மாஸ் ஆடியன்ஸை திருப்திபடுத்த முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஒபிலி என் கிருஷ்ணா. சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற தரமான படங்களை இயக்கிய இவர் தற்போது பத்து தல படத்தை இயக்கியிருக்கிறார். இடைவேளைக்கு முந்தைய காட்சியில் தான் சிம்பு தோன்றினாலும் முதல் பாதி முழுவதும் ஏஜிஆர், ஏஜிஆர் என்று பல இடங்களில் சிம்புவை சுட்டிக்காட்டி பில்டப்புகளை கூட்டி குறைத்து அதனால் ஏற்படும் எதிர்பார்ப்புகளை வைத்தே வேகமாக கதையை நகர்த்தி இருக்கிறார்.

 

சிம்பு தோன்றுவதற்கு முன்பு வரை வேகமாக செல்லும் திரைப்படம் சிம்பு வந்ததுக்கு பிறகு ஆங்காங்கே வேகத்தடைகளுடன் பயணித்து சற்றே சில இடங்களில் அயர்ச்சியையும் கொடுத்து முடிவில் சில சென்டிமென்ட் காட்சிகளோடு சிம்பு ரசிகர்களுக்கு பிடித்தமான படமாக இப்படம் அமைந்துள்ளது. சிம்புவே படம் முழுவதும் ஆக்கிரமித்து இருக்கிறார். அவருடைய பிரசன்சிற்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு திரையில் அதிரடியாக தோன்றி பின் ஃபேமிலி சென்டிமென்ட் மற்றும் மக்கள் சென்டிமென்ட் என தன்னை ஒரு சேவகன் ஆக காண்பித்து நல்ல காரியங்கள் செய்யும் கெட்ட தாதாவாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டுள்ளார் ஏஜிஆர் சிம்பு. முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.

 

வழக்கம்போல் தன் கதாபாத்திரத்திற்கு எந்த வகையில் நியாயம் செய்ய முடியுமோ அதை இன்னமுமே சிறப்பாக செய்து இருக்கிறார் எஸ்டிஆர் சிம்பு. படம் முழுவதும் தன் ரசிகர்களுக்கு என்ன பிடிக்குமோ அதையே செவ்வன செய்து ரசிகர்களை திருப்திபடுத்தி உள்ளார். இது கௌதம் கார்த்திக் படமா இல்லை எஸ்டிஆர் படமா என்று கேள்வி கேட்கும் அளவிற்கு கதாபாத்திரமும், நடிப்பையும் சிறப்பாக செய்து கவனம் பெற்று இருக்கிறார் நடிகர் கௌதம் கார்த்திக். ஆக்சன் காட்சிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கைத்தட்டல் பெறுகிறார். இவருக்கும் நாயகி ப்ரியா பவானி சங்கருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

 

தாசில்தாராக வரும் பிரியா பவானி சங்கர் நடையில் ஒரு மிடுக்கும் நடிப்பில் சில பாவனைகளையும் சிறப்பாக கொடுத்துள்ளார். அதேபோல் கல்லூரி மாணவியாக அவர் வரும் போர்ஷனிலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். வழக்கமான அரசியல் வில்லனாக வரும் கௌதம் வாசுதேவ் மேனன் வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி சென்று இருக்கிறார். சில பல காட்சிகளே வந்தாலும் சந்தோஷ் பிரதாப், கலையரசன், சென்ராயன், ஜோ மல்லூரி, நடிகை ஆராதனா, குழந்தை நட்சத்திரம், இன்னும் பல நடிகர்கள் அவரவருக்கான வேலையை சிறப்பாக செய்து கவனம் பெற்றுள்ளனர். கௌரவத் தோற்றத்தில் வரும் சாயிஷா ஒரே ஒரு குத்து பாடலுக்கு குத்தாட்டம் போட்டு ரசிகர்களை கும்மியடிக்க வைத்து விட்டுச் சென்றுள்ளார்.

 

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கும் ஒரு படத்தில் பாடல்கள் சுமாராகவும் பின்னணி இசை ஜோராகவும் அமைந்திருக்கிறது. குறிப்பாக பாடல்களை காட்டிலும் பின்னணி இசை மிக அபாரமாக அமைந்து படத்தை இன்னும் ஒரு படி மேலே தூக்கிச் சென்றிருக்கிறது. பத்து தல தீம் சாங் படத்தின் ஆணி வேராக அமைந்திருக்கிறது. ஃபரூக் ஜே பாஷா ஒளிப்பதிவில் காட்சிகள் உலகத்தரம். குறிப்பாக இரவு நேர காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் சிறப்பாக அமைக்கப்பட்டு அதுவே படத்திற்கு பக்க பலமாகவும் அமைந்திருக்கிறது. 

 

ஒரு கதையாக பார்க்கும் பொழுது இது நாம் ஏற்கனவே பல தடவை பார்த்து பழகிய ஒரு அண்டர் கவர் ஆபீஸர் தாதாவின் கேங்கிற்குள் சென்று எப்படி சமூக விரோதிகளை போட்டுத் தள்ளுகிறார் என்ற கதையாக இருந்தாலும் விறுவிறுப்பான காட்சி அமைப்புகளும் சிம்புவின் மாஸ் பிரசன்ஸ் என இரண்டு விஷயங்கள் இப்படத்தை தனித்துக் காட்டி படத்தை தட்டுத் தடுமாறி கரை சேர்த்திருக்கிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியிலும் தொடர்ந்து இருந்து இருக்கலாம்.

 

பத்து தல - கொஞ்சம் கெத்து தல!

 

சார்ந்த செய்திகள்