ஸ்லோ அண்ட் ஸ்டெடி வின் தி ரேஸ் என்று கூறுவர். பொன்னியின் செல்வனுக்கு போட்டியாக ஸ்லோவாகவும், சற்று ஸ்டெடி ஆகவும் சென்றுள்ள நானே வருவேன் திரைப்படம் ரேஸில் வெற்றி பெற்றதா? இல்லையா?
கதிர், பிரபு என இரட்டை சகோதரர்களாக வருகிறார் தனுஷ். ஆளவந்தான் படத்தை போல் ஒரு தனுஷ் சைக்கோபாத் ஆகவும், இன்னொரு தனுஷ் மிகவும் நல்லவராகவும் இருக்கிறார். தன் அப்பா அம்மாவின் கண்டிப்பு அதிகமாக இருப்பதால் சிறு வயது சைக்கோபாத் தனுஷ் தன் தந்தை சரவண சுப்பையாவை கொன்றுவிட்டு தன் தம்பியை கொல்ல முயற்சிக்கிறார். இதை கண்டுபிடித்த தனுஷின் தாய் சைக்கோ தனுஷை அதே ஊரிலேயே விட்டுவிட்டு மற்றொரு தனுஷை கூட்டிக்கொண்டு ஊரை விட்டு சென்று விடுகிறார். இதையடுத்து நல்ல தனுஷ் வளர்ந்து பெரியவனாகி தனக்கென்று ஒரு குடும்பம் குழந்தை என வாழ்ந்து வரும் வேளையில், அவரது மகள் ஹியா துவேவுக்கு பேய் பிடிக்கிறது. நல்ல தனுஷ், சைக்கோபாத் தனுஷை கொன்றால் மட்டுமே குழந்தையை விட்டு செல்வேன் என பேய் கண்டிஷன் போடுகிறது. இதையடுத்து தன் மகளைக் காப்பாற்ற நல்ல தனுஷ் சைக்கோபாத் தனுஷை தேடி செல்கிறார். இறுதியில் சைக்கோபாத் தனுஷை நல்ல தனுஷ் கொன்றாரா? இல்லையா? அந்தப் பேய்க்கும் சைக்கோபாத் தனுசுக்கும் என்ன சம்பந்தம்? மகள் ஹியா துவே பேயிடம் இருந்து மீட்கப்பட்டாரா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
வழக்கமான செல்வராகவன் படங்களுக்கான ட்ரேட் மார்க் விஷயங்கள் அத்தனையும் இந்தப் படத்திலும் இருக்கிறது. ஆனால் அவை ரசிக்கும்படி இருந்ததா என்றால்? கொஞ்சம் சந்தேகமே..! படம் ஆரம்பித்து சற்று ஸ்லோவாக நகர்ந்து சிறிது நேரம் கழித்து எங்கேஜிங்காக சென்று கிரிப்பிங்கான இடைவேளை காட்சி மூலம் இருக்கையில் ரசிகர்களை நிமிர்ந்து உட்கார வைக்கிறது. இதே கிரிப்பிங்கோடு ஆரம்பித்த இரண்டாம் பாதி போக போக திருப்பங்கள் இல்லாத ஃப்ளாட்டான திரைக்கதையாக பயணித்து வழக்கமான கிளைமாக்ஸ் காட்சியோடு நிறைவு பெற்று பார்ப்பவர்களுக்கு ஏமாற்றத்தையும், அயற்சியையும் கொடுத்துள்ளது. படத்தின் ஸ்டேஜிங்குகாக அதிகம் மெனக்கெட்டுள்ள இயக்குனர் செல்வராகவன், திரைக்கதையில் இன்னமும் கூட சுவாரசியத்தை கூட்டி இருக்கலாம். கதை, திரைக்கதை தனுஷ் எழுதியிருந்தாலும் அதை பல இடங்களில் பட்டி டிங்கரிங் பார்த்த செல்வராகவன் அதில் இன்னமும் பல சுவாரஸ்யமான எலமெண்ட்களை சேர்த்து இருந்தால் இப்படம் கண்டிப்பாக பேசப்பட்டு இருக்கும்.
அதேபோல் கதாபாத்திரத் தேர்வு சிறப்பாக அமைக்கப்பட்டு அவர்களிடம் நன்றாக வேலை வாங்கி சரியான கலவைகளில் காட்சிகளை கோர்வையாக அமைத்த இயக்குனர் செல்வராகவன், அழுத்தமான சில காட்சிகளில் ஏனோ சற்று கோட்டை விட்டுள்ளார். பொதுவாக செல்வராகவன் படங்கள் என்றாலே எமோஷனலான காட்சிகளும், சென்டிமென்ட்டான காட்சிகளும் மிகவும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருந்து ரசிகர்களை ரசிக்க வைக்கும். ஆனால் இந்தப் படத்திலோ அது எதுவும் சரியாக ஒர்க் அவுட் ஆகாதது படத்திற்கு பெரிய மைனஸ் ஆக அமைந்துள்ளது. இருந்தும் படத்தின் பிளஸ்ஸாக ஒரு சைகோ திரில்லர் படத்தில் ஹாரரை கனக்கச்சிதமாக சேர்த்து கிளிஷேவான பேய் காட்சிகள் எதுவும் இல்லாமல் புத்திசாலித்தனமாக காட்சிகள் அமைத்து அதில் நடித்த நடிகர்களை அளவாகவும், அழகாகவும் நடிக்க வைத்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை தான் ஒரு தேர்ந்த இயக்குனர் என்பதை நிரூபித்துள்ளார் செல்வராகவன். இருந்தும் இதே போல் சற்று திரை கதையிலும் கவனம் செலுத்தியிருக்கலாம். குறிப்பாக பல இடங்களில் தேவையில்லாத லாஜிக் ஓட்டைகள் படம் முழுவதும் நிரம்பி வழிவது படத்திற்கு பாதகமாக அமைந்திருக்கிறது.
நடிப்பு அசுரன் தனுஷ் கதிர், பிரபு என இரு வேடங்களில் இருவருக்கான குணாதிசயங்களையும், தன்மைகளையும், உணர்ச்சிகளையும், பாடி லாங்வேஜையும் நன்றாக வேறுபடுத்தி காட்டி அதை சிறப்பாகவும் செய்து மீண்டும் ஒருமுறை ரசிகர்களை வாய்ப்பிளக்க செய்துள்ளார். குறிப்பாக கதிராக நடித்திருக்கும் தனுஷ் தனது வசீகரிக்கும் முகத்தோற்றத்துடனும், கதிகலங்க வைக்கும் மேனரிசத்துடனும் ஜஸ்ட் லைக் தட் நடித்து மாஸ் காட்டியுள்ளார். நாயகியாக நடித்திருக்கும் இந்துஜா அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து விட்டு சென்றுள்ளார். மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் எல்லி அவரம் வார்த்தைகள் இல்லாமல் முகபாவனைகள் மூலம் அழகான நடிப்பை கனக்கச்சிதமாக வெளிப்படுத்தி ரசிகர்களிடையே கவனம் பெற்று இருக்கிறார். சிறிய குணச்சித்தர வேடமே என்றாலும் மனதில் பதியும்படி நடித்துவிட்டு சென்றிருக்கிறார் யோகி பாபு. அதேபோல் சரவண சுப்பையா, பிரபு, சிறுவர்கள் பிரணவ், பிரபவ் மற்றும் சிறப்பு தோற்றத்தில் வரும் செல்வராகவன் ஆகியோர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்துள்ளனர்.
பாடல்களை காட்டிலும் பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. குறிப்பாக கதிர் தனுஷ் சம்பந்தப்பட்ட காட்சிகளில் கூஸ்பம்ஸ் வரும்படியான இசையை வெளிப்படுத்தி ரசிகர்களிடம் கைத்தட்டல் பெற்றிருக்கிறார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவில் இரவு நேரம் மற்றும் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் லைட்டிங் மற்றும் ஃப்ரேமிங்களில் ஹாலிவுட் தரம்.
மயக்கம் என்ன படத்துக்கு பிறகு தனுஷ், செல்வராகவன் இப்படத்தில் இணைந்துள்ளதால் நானே வருவேன் படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வந்தது. அந்த எதிர்பார்ப்பை இப்படம் பூர்த்தி செய்ததா என்றால் சற்று சந்தேகமே!! இருந்தும் தனுஷின் பெர்பார்மன்ஸ் காக வேண்டுமானால் நானே வருவேனுக்கு சென்று வரலாம்.
நானே வருவேன் - இன்னும் சிறப்பாக வந்திருக்கலாம்...