Skip to main content

இது மிஷ்கின் படம்தான், ஆனா...  சைக்கோ - விமர்சனம்

Published on 24/01/2020 | Edited on 24/01/2020

மிஷ்கின் - தனக்கென ஒரு திரைமொழியை உருவாக்கி வைத்திருக்கும் படைப்பாளி. தேர்ந்தெடுக்கும் கதை, அதைச் சுற்றி பின்னப்படும் திரைக்கதை, அதை காட்சிப்படுத்தும் வித்தை இவற்றின் வாயிலாக கடந்த பத்தாண்டுகளில் தமிழ் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த மாற்றத்தை ஏற்படுத்திய இயக்குனர். மிஷ்கின் படங்களுக்கென தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. அதே சமயம் கடைசியாக வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தின் மிஷ்கின் முத்திரை இல்லை என்ற விமர்சனமும் இருக்கிறது. இந்நிலையில் முதலில் சாந்தனு நடிப்பதாய் அறிவிக்கப்பட்டு இப்போது உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்திருக்கிறது சைக்கோ.

 

psycho udhayanidhi



பல க்ரைம் படங்களை மிஷ்கின் கொடுத்திருந்தாலும் ஒரு சைக்கோ கொலைகாரன் களத்தை அவர் கையாள்வது இதுவே முதல் முறை. பெயரில், டீசரில் தெரியும் ஒற்றை வரிதான் கதை. இளம்பெண்களை கடத்தி அவர்கள் தலையை வெட்டி எடுத்து, உடலை மட்டும் பொது இடங்களில் போடும் ஒரு சைக்கோ கொலைகாரன். இவனிடம் மாட்டிக் கொண்ட தன் காதலியை மீட்கப் போராடும் கண் தெரியாத ஒரு இளைஞன். கொலைகாரனை பிடிக்க முயற்சி செய்யும் காவல்துறை. இவர்களை சுற்றியே கட்டமைக்கப்பட்டுள்ளது சைக்கோ.


ஒரு கொலையில் துவங்குகிறது படம். கொலை - போலீஸ் - காதல் என துண்டுத் துண்டாய் சின்ன சின்ன காட்சிகள் வரத்துவங்குகின்றன. இப்படிப்பட்ட காட்சிக் கோர்வைகள் மிஷ்கின் படத்தில் பெரும்பாலும் இடம்பெறாது. ஆனால் சைக்கோவில் முதல் பதினைந்து நிமிடங்கள் இதுபோன்ற காட்சியாலேயே நிறைந்திருக்கிறதே என்ற யோசனை எழும்போதே படத்தின் திருப்பம் நிகழ்கிறது. நாயகியை கடத்துகிறான் சைக்கோ கொலைகாரன். அதன் பின் மற்ற மிஷ்கின் படங்களைப் போல் நேர்கோட்டில் நகர்கிறது படம். சைக்கோ நாயகியை கொன்றானா, அவனை போலீஸ் பிடித்ததா இல்லை கண் தெரியாத நாயகன் பிடித்தானா என்பதை அடுத்த இரண்டு மணி நேரத்தில் சொல்கிறது சைக்கோ. (இது குழந்தைகள் பார்க்கக்கூடிய படமல்ல. பலவீனமான மனம் கொண்டவர்களுக்கும் உகந்ததல்ல.)

 

 

aditi rao



படத்தில் முதன்மையானதாகக் குறிப்பிடப்படவேண்டியது இளையராஜாவின் இசை. அது படத்தின் ஆகப்பெரும் சிறப்பம்சம். ட்ரெய்லரில் பீத்தோவனின் சிம்பனியை ஒலிக்க விட்டு, அதே காட்சிக்கு ராஜாவின் இசையை படத்தில் பார்க்கையில் எழும் உணர்வு அட்டகாசமான ஒன்று. அத்தகைய இசைமேதை எங்களிடமும் இருக்கிறான் என்பதுதான் மிஷ்கின் சொல்ல வருவதோ என்று தோன்றியது. 'நீங்க முடியுமா' பாடலின் சூழலில் உள்ள செயற்கைத்தனங்களையும் அந்த இசை மறக்கடித்து அதனோடு பயணிக்க செய்துவிடுகிறது. மிஷ்கினின் மற்ற படங்களில் இருக்கும் செய்நேர்த்தியும் தொழில்நுட்பத் தரமும் சைக்கோவிலும் தொடர்கிறது. குலுங்கி அழவேண்டிய காட்சியில் முகத்தை மூடி சமாளித்திருந்தாலும் கூட மற்ற எமோஷனலான காட்சிகளில் உதயநிதி சற்றே தவிக்கிறார். ஆனாலும் அவரது கேரியரில் சைக்கோ முக்கியமான படம். அதிதி, நித்யா மேனன் இருவரும் மிஷ்கினின் பாத்திரங்களாக உலவுகின்றனர். தன்வீரின் கேமரா மிஷ்கினின் பார்வையாக இருக்கிறது. இப்படி எல்லா அம்சங்களும் பிரித்துப்பார்க்க முடியாத அளவுக்கு இயக்குனரின் பெயரை சொல்வது பலமென்றால் பலவீனமும் அதுவாகத்தான் இருக்கிறது.

மிஷ்கினின் துப்பறியும் படங்களின் சாயலில் நகரும் அந்த பகுதிகள் தான் படத்தின் முதல் பாதியை விறுவிறுப்பாக்குகின்றன. நாயகன் தன்னை நெருங்குகிறான் என்பதை வில்லன் உணரத் துவங்கும் தருணத்தில் வரும் இடைவேளையும் அந்த காட்சியும் இரண்டாம் பாதியின் மேல் முழு ஆர்வத்தையும் ஏற்றிவிடுகின்றன. நம்மை மீண்டும் மீண்டும் ஆச்சரியப்படவைப்பதும் ரசிக்கவைப்பதும் மிஷ்கினின் காட்சிமொழிதான். ஆனால் அது மட்டும் போதுமா? படத்தின் ஆதார மையமே நாயகன் நாயகிக்கு இடையேயான காதல்தான். அந்தக் காதல்தான் அடுத்தடுத்த சம்பவங்களை அரங்கேற்றுகிறது. சைக்கோ - நாயகி - நாயகன் மூவருக்கும் இடையே நிற்பதும் அந்த காதல்தான். இப்படி படத்தின் மிக மையச் சரடான அந்த காதல் எத்தனை ஆழமாக காட்டப்பட்டிருக்க வேண்டும்? ஆனால் படத்தில் அது மிகமிக மேலோட்டமாகவே காட்டப்பட்டுள்ளது. அந்த காதலின் அடர்த்தியை காட்ட ஒரே ஒரு பாடல் மட்டும் போதுமென்று மிஷ்கின் நினைத்து விட்டாரோ என்னவோ? அற்புதமான பாடலாகவே இருந்தாலும் கூட படத்தில் அது ஏற்படுத்தும் தாக்கம் என்பது கொஞ்சம் சிறியதே.

nitya menon



பொதுவாக மிஷ்கின் படங்களில் காவல்துறையின் செயல்பாடுகள் மிடுக்காக, புத்திசாலித்தனமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கொலை நடந்த இடத்தை பார்வையிடுவதும், கொலையை பற்றி பேசுவதையும் தவிர்த்து காவல்துறைக்கு பெரிதாக வேலையில்லை. நாயகன் போலீஸ் இல்லை என்பதற்காக காவல்துறையை இத்தனை முக்கியமற்றா காட்ட வேண்டும்? வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டராக வரும் இயக்குனர் ராம் மிடுக்காக, கூர்மையான பார்வையுடன் வலம் வருகிறார். ஆனால் அவரும் மேலே சொன்ன அதே வேலையைத்தான் ஒவ்வொரு கொலை நடந்தபின்னும் செய்கிறார். நுணுக்கமான கண்டுபிடிப்புகள் கூட வேண்டாம். எளிதாக புலனாயக்கூடிய சாத்தியங்கள் நிரம்பிய ஒரு கொலையை, அதுவும் ஒரு காவல்துறை ஆய்வாளரின் கொலையைக் கூட துப்பு துலக்க முடியாத நிலையில் காவல்துறை சித்தரிக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு முடிச்சையும் நாயகனேதான் அவிழ்க்கிறான். இப்படியே படம் முடிந்துவிடுமோ என்று நினைக்கும் போதுதான் படத்தின் வேறொரு பரிமாணம் காட்டப்படுகிறது.


கொடூர கொலைகாரனாக காட்டப்பட்ட சைக்கோவின் கதை, அவனது இன்னொரு பக்கம் மெல்ல மெல்ல சொல்லப்படுகிறது. உண்மையில் மிஷ்கின் முத்திரை பரவுவது இந்தப் பகுதியில் இருந்துதான். ஒரு மனிதனுக்கு அன்பு மறுக்கப்படும் போதே அவன் மனிதத்தன்மையை இழக்கிறான் என்பதும் மிருகத்தன்மை நிரம்பிய நிலையிலும் அவன் மேல் காட்டப்படும் அன்பு அவனை மீண்டும் மனிதமாக்கும் என்பதுமே சைக்கோ சொல்லும் அன்பின் கதை. ஆனால் இந்த கரிசனம், மற்ற உயிர்களுக்கு அவன் ஆபத்தை விளைவிப்பான் என்று தெரிந்த நிலையிலும் அவன் மேல் காட்டப்பட வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது.

குழப்பமான நேரங்களில் பாட்டு பாடும் இன்ஸ்பெக்டர், வீல்சேரில் சுற்றும் காவல்துறை அதிகாரி, கண் தெரியாத இசைக் கலைஞன் போன்று வித்தியாசப்படுத்திக் காட்டி ரசிக்கவைக்கும்  அம்சங்களுடன் பாத்திரங்கள் வெரைட்டியாக உருவாக்கப்பட்ட அளவிற்கு ஆழமாக உருவாக்கப்படவில்லை. இத்தனை குழப்பங்கள் இருந்தாலும் மிஷ்கினின் மேதமை படத்தில் பல இடங்களில் பளிச்சிடுகின்றது. குறிப்பாக அந்த சைக்கோவின் கதையில், அவனுக்கான முடிவில். மிஷ்கினின் திரைமொழி கேள்விகளுக்கு அப்பாற்பட்டு தலைசிறந்த ஒன்று. ஆனால் அவரது மிகச்சிறந்த எழுத்துக்களை அவரது திரைமொழியில் காண்பதுவே அட்டகாசமான அனுபவம். அஞ்சாதே, யுத்தம் செய், பிசாசு என பல படங்களை முன்வைக்கலாம். அவரது மற்ற படங்களிலும் இந்த திரைமொழி இன்னும் கூட செழுமையாக இருந்தாலும், அதன் மூலம் சொல்லப்படும் திரை எழுத்து நிறைவாக இல்லாத போது, ஒரு முழுமையற்ற அனுபவமே நமக்கு எஞ்சுகிறது. சைக்கோவும் அத்தகைய ஒரு அனுபவமே!

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பசி என்கிற தேசிய நோய்’ - டாக்கு டிராமா விமர்சனம்

Published on 13/04/2024 | Edited on 15/04/2024
Lockdown docu drama review

வரலாற்று ஆவணப்பட நாடகம் என்கிற விளக்கத்தோடு யூடியூப்பில் ‘பசி என்கிற தேசிய நோய்’ லாக்டவுன் டாக்கு டிராமா வெளி வந்திருக்கிறது. சக்திவேல் தங்கமணி இயக்கியிருக்கிறார். கொரோனா கால ஊரடங்கு சமயத்தில் ஏற்பட்ட மனித மன முரண்கள் பலவற்றை வசனங்கள் வழியாகவும், அதில் காட்சி அமைப்புகளை ஆங்காங்கே கோர்வையாகவும் கோர்த்து தந்திருக்கிறார்கள்.

ஊரடங்கு சமயத்தில் ஒரு வாடகை அறையில் தங்கியிருக்கும் இந்துத்துவா மனநிலையிலுள்ள சினிமாவில் துணை நடிகராக இருக்கும் நண்பனுக்கும், அதே அறையில் தங்கியிருக்கும் சமூகநீதி அரசியல் பேசும் ஊடகத்துறை நண்பனுக்கும் இடையே நடக்கும் உரையாடல் தான் படத்தின் முக்கியமான பாகமாக இருக்கிறது. அத்தோடு ஊடகத்துறை நண்பன் ஊரடங்கு சமயத்தில் சென்னையில் உள்ள பல இடங்களுக்கு பயணப்பட்டு ஊரடங்கால் அவதிப்படுகிற பல்வேறு மக்களுடைய குரல்களை கருத்து கணிப்பின் வழியாக பதிவு செய்கிறார். பல்வேறு அரசியல் நிலைப்பாடு, வர்க்க முரண்கள், சாதிய சிக்கல்கள், அடிப்படை வாழ்வாதார பின்னணியில் உள்ள மக்கள் எனப் பலரும் தங்களுடைய கருத்துக்களைச் சொல்கிறார்கள். இவை அனைத்தும் ஊடக நண்பனால் ஆவணப்படுத்தப்படுகிறது.

அறையில் தங்கியிருக்கும் சுயநலமான நண்பனோ தன்னுடைய உணவிற்கும், வாழ்வாதாரத்திற்கும் மட்டுமே முக்கியத்துவம் தருகிறவனாகவும், அவனை கேள்விக்கு உள்ளாக்குகிறவர்களை தேசதுரோகி, ஆண்டி இண்டியன் என்று சர்வ சாதாரணமாக முத்திரை குத்தி பதிலளிக்காமல் திரும்புகிறவனாக இருக்கிறான்.

ஒரு மணி நேரம் 12 நிமிடம் ஓடுகிற படத்தில், காட்சி அமைப்புகளின் வழியே விசயங்களை நகர்த்துவது குறைந்து முழுக்க முழுக்க வசனங்களாலேயே படத்தினை நகர்த்துகிறார்கள். இதற்கு ஏன் ஆவணப்படம் வேண்டும், விசுவலாக ஏன் இருக்க வேண்டும், ஆடியோ  மட்டுமே இருந்து விட்டால் போதுமானதாக இருக்குமல்லவா?. ஆவணப்படுத்துகிற விசயத்தையும் நமது இடது சாரி சிந்தனைகளையும் சுவாரசியமாக காட்சி மொழியாக எளிய மக்களுக்கு கொடுக்க வேண்டும் தானே தவிர, பிரச்சார நெடியாகவே படம் முழுவதும் இருப்பது அயற்சியைத் தருகிறது. அது ஒரு சிந்தனையாளனை மெருகேற்றிக் கொள்ள பயன்படுமே தவிர, மற்ற அனைத்து தரப்பு பார்வையாளனை எப்படி சென்று சேரும் என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

படத்தினை பின்னணி இசையும், ஒளிப்பதிவும் தாங்கிப் பிடிக்கிறது. அதுவே தொழில்நுட்ப ரீதியாக இந்தப் படத்தை பார்க்கவும் வைக்கிறது. சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விஷம் பரவட்டும் என்று டாக்டர் அம்பேத்கர் சொன்னதாக படம் தொடங்கும் முன் வருகிறது. அது டாக்டர் அம்பேத்கர் சொல்லவில்லை. கவிஞர் பழனிபாரதியின் கவிதை என்பதை படக்குழுவினருக்கு தெரியப்படுத்த வேண்டியிருக்கிறது.

ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஏதோ ஒரு வகையில் பங்கெடுத்த போராளிகள் சிறையில் இருக்கிறார்கள் என்றும் இன்னும் ஏழு பேர் விடுதலை ஆகவில்லை என்றும் படத்தில் வசனம் வருகிறது. ஒருவேளை இந்த ஆவணப்படம் 2020-க்கு பிறகு அப்டேட் செய்யப்படவில்லை போல, ஏனெனில் ஏழுபேரும் விடுதலை ஆகிவிட்டார்கள். அதில் ஒருவர் இலங்கை செல்ல வேண்டிய நிலையில் இறந்தும் போய்விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இறுதியாய் சமூகநீதி நண்பன் பேச்சைக் கேட்டு இந்துத்துவா மனநிலை நண்பன் திருந்துவதாக காட்டப்படுகிறது. பலர் இப்படி திருந்தினால் நல்லது தான் என்று பார்வையாளர்களுக்கு கூட ஆசைதான். ஆனால் மாற்றம் அவ்வளவு சாத்தியமாக தெரியவில்லை. அந்த அளவிற்கு சிலர் மூளைச்சலவை செய்யப்பட்டு சமதர்மமற்ற மனநிலையிலேயே இருக்கிறார்கள். பிரச்சார நெடி அதிகம் வீசுகிற இப்படத்தில் வசனங்கள் வழியாக கடத்த முயன்ற மன உணர்வுகளை காட்சி மொழிக்கு முக்கியத்துவம் தந்திருந்து கடத்தியிருந்தால் இன்னமும் சுவாரசியம் பெற்றிருக்கும். இப்படத்தின் முயற்சிக்கு, படக்குழுவிற்கு வாழ்த்துகள்! 

Next Story

“ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான்” – மிஷ்கின்

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
mysskin speech in  Double Tuckerr Press Meet

ஏர் ஃபிளிக் தயாரிப்பில் மீரா மஹதி இயக்கத்தில் வித்யாசாகர் இசையில் இந்தியாவிலேயே முதல்முறையாக புதுமையாக வடிவமைக்கப்பட்டுள்ள அனிமேஷன் பாத்திரங்களுடன் தீரஜ், ஸ்மிருதி வெங்கட், கோவை சரளா எம்.எஸ். பாஸ்கர் மற்றும் பலர் நடித்திருக்கும் படம் 'டபுள் டக்கர்'. இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோருடன் இயக்குநரும் நடிகருமான மிஷ்கின் கலந்து கொண்டார்.

மிஷ்கின் பேசுகையில், “தீரஜ்ஜை எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏன் பிடிக்கும் என்று கேட்டால், அவன் இதுவரை குறைந்தது ஒரு 500 உயிரையாவது காப்பாற்றி இருப்பான். அவன் ஒரு இதய சிகிச்சை நிபுணர். குறைவாக சொல்கிறேன் என்று நினைக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் ஆயிரத்திற்கும் அதிகமான உயிர்களை காப்பாற்றிய மருத்துவர் அவன். உதய்க்கு நெருங்கிய நண்பன், நம் முதல்வரை சூழ்ந்திருக்கும் முக்கிய மருத்துவர்களில் தீரஜ்ஜும் ஒருவன். அவன் கூப்பிட்டதும், அவன் இந்த உலகத்திற்குச் செய்த சேவைக்காக என் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு நான் வந்துவிட்டேன்.

ஒரு மருத்துவராக அவன் அவனுக்கான உயரத்தினை எப்போதோ அடைந்துவிட்டான். ஆனால் அதையும் மீறி அவன் ஒரு ஆக்டர் ஆக வேண்டும் என்று விரும்புகிறான். எல்லோரும் டாக்டர் ஆக விரும்புவார்கள். ஒரு டாக்டர் ஆக்டர் ஆக விரும்புகிறான். என்னைப் பொறுத்தவரை ஒரு டாக்டர், நடிகன், இயக்குநர் மூவரும் ஒன்று தான். எல்லோரும் அறிந்தபடி டாக்டர் இதயத்தை அப்படியே திறந்து அதில் இருக்கும் பிரச்சினைகளை சரி செய்கிறார். அதுபோல் தான் கதை சொல்லியாகிய இயக்குநரும் ஒரு இதயத்தை திறக்காமல் திறந்து ரசிகனின் ரணத்தை ஆற்றி அவனை சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கிறான். ஆக மூன்று பேரும் ஒன்றுதான். என் திரைப்படங்களில் மருத்துவ தொழில்நுட்பம் சார்ந்த காட்சிகள் இடம்பெறும் போது அதில் ஏற்படும் குழப்பங்களை தீரஜ்ஜிடம் தான் கேட்பேன். அவன் தான் அதைத் தீர்த்து வைப்பான்.

சந்துரு விமானத்தில் பணியாற்றியவர். ஒரு முறை என்னுடைய விமானப் பயணத்தின் போது அறிமுகப்படுத்திக் கொண்டு சார் உங்களோட பெரிய ரசிகன், உங்கள் படங்கள் மிகவும் பிடிக்கும் என்றார். என் தொலைபேசி எண்ணை வாங்கிக் கொண்டார். இரண்டு மாதங்கள் கழித்து எனக்குப் போன் செய்து, சார் உங்களை சந்திக்க முடியுமா என்று கேட்டார். நான் வரச் சொன்னேன். வந்ததில் இருந்து சினிமாவைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் ஆறு மாதங்கள் கழித்து என்னைப் பார்க்க வந்தார். சார் நான் படம் எடுக்கப் போகிறேன் என்றார். நான் அவனிடம் நீ உயரே பறந்து கொண்டிருக்கிறாய். ஏன் கீழே பறக்க ஆசைப்படுகிறாய் என்று கேட்டேன். அவன் இயக்கிய குறும்படத்தைப் பார்த்தேன். நல்ல மேக்கிங். ஏனோ மக்களிடம் பெரிதாக சென்று சேரவில்லை. பின்னர் ஒரு வருடம் கழித்து வந்து நான் இந்தப் படத்தில் இணை தயாரிப்பாளர் என்று கூறினார். சினிமா என்பது எவ்வளவு உயரத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அவர்களைத் தன்பால் ஈர்க்கிறது.

இயக்குநர் மீரா மஹதி இந்த நிகழ்ச்சியில் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். அழுகை அழகு. அதிலும் ஆண்கள் அழுவது அழகோ அழகு. என்னுடைய உதவி இயக்குநர்களுடன் நான் எப்போதுமே சினிமா பற்றி மட்டும் தான் பேசிக்கொண்டே இருப்பேன். ஒரு 50 எம்.எம் லென்ஸுக்கும் ஒரு 35 எம்.எம் லென்ஸுக்கும் 15 டிகிரி தான் வித்தியாசம். ஆனால் அந்த பதினைந்து டிகிரி வித்தியாசத்தை தெரிந்துகொள்ள 5 அல்லது 6 வருடங்கள் தேவை. தமிழ் சினிமாவில் லென்ஸைப் பற்றித் தெரிந்த ஒரு சில இயக்குநர்களில் நானும் ஒருவன்” என்றார்.