அந்தாதுன் படம் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப் பார்க்க வைத்த ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் திரைப்படம் மெரி கிறிஸ்துமஸ். இந்த முறை ஹிந்தி மட்டும் அல்லாமல் தமிழிலும் கால் பதித்திருக்கிறார். அதுவும் தமிழ் ரசிகர்களுக்காக விஜய் சேதுபதியும், ஹிந்தி ரசிகர்களுக்காக கத்திரினா கைஃபும் இணைத்து அவர்களோடு கூட்டணி சேர்ந்து மீண்டும் ஒரு திரில்லர் படம் மூலம் பொங்கல் ரேசில் களம் கண்டுள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றிக்கனியை பறித்தாரா இல்லையா?
ஒரு கொலை குற்றத்திற்காக ஏழு ஆண்டுகள் ஜெயிலில் தண்டனையை அனுபவித்து விட்டு மீண்டும் மும்பைக்கு திரும்புகிறார் விஜய் சேதுபதி. வந்த இடத்தில் அவருக்கென்று யாரும் இல்லை. இருந்த அவரது தாயும் ஏற்கனவே இறந்து விடுகிறார். இதனால் மனம் நொந்து போன அவர் சற்று இளைப்பாற ஒரு ரெஸ்ட்டோபாருக்கு செல்கிறார். போன இடத்தில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான கத்ரீனா கைஃப் தன் மகளோடு அதே ரெஸ்ட்ரோபாரில் இருக்கிறார். அங்கு விஜய் சேதுபதிக்கும், கத்ரீனா கைப்புக்கும் எடுத்த எடுப்பிலேயே பார்த்த மாத்திரத்தில் நட்பு ஏற்படுகிறது. இருவரும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு மது அருந்த செல்கின்றனர். போன இடத்தில் கத்ரீனா கைஃப் கணவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடைக்கிறார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த விஜய் சேதுபதி, போலீசுக்கு பயந்து அங்கிருந்து எஸ்கேப் ஆகி விடுகிறார். இருந்தும் விதி அவரை மீண்டும் கத்ரீனா கைஃப் வீட்டிற்கு கொண்டு செல்கின்றது. இதையடுத்து அந்த கொலையை செய்தது யார்? இந்தக் கொலையை துப்புத் துலக்க வரும் போலீஸிடம் இருந்து விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் தப்பித்தார்களா இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.
எப்பொழுதும் போல் தன் வழக்கமான திரைக்கதை பாணியை இந்தப் படத்திலும் சரியான திருப்பங்களுடன் கொடுத்து மீண்டும் வரவேற்பைப் பெறும் வகையிலான ஒரு ஃபீல் குட் திரில்லர் படம் கொடுத்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். படம் ஆரம்பித்து ஸ்டேஜிங்கிற்கு வெகு நேரம் எடுத்துக் கொண்டாலும் போகப் போக அழுத்தமான திருப்பங்கள் நிறைந்த காட்சி அமைப்புகள் படத்தோடு நம்மை ஒன்ற வைத்து அடுத்தது என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எகிறச் செய்து அதற்கு ஏற்றவாறு பல்வேறு டிவிஸ்டுகள் நிறைந்த திரைக்கதை அமைத்து படத்தையும் கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன். முதல் பாதி சற்றே மெதுவாக ஆரம்பித்தாலும் போகப்போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி நல்ல கிரிப்பிங்காக அமைந்து இறுதியில் எதிர்பாராத வகையில் டிவிஸ்டுகள் நிறைந்த கிளைமாக்ஸோடு முடிந்து பொங்கல் ரேசில் வெற்றிக்கனியை பறித்திருக்கிறது.
பொதுவாக எப்போதும் நடிப்பால் கைத்தட்டல் பெறும் வகையில் நடிக்கும் விஜய் சேதுபதி, திரில்லர் படங்கள் என்றாலே இன்னும் ஒரு படி மேலே போய் ஜஸ்ட் லைக் தட் நடித்து ரசிகர்களை எளிதாக கவர்ந்து விடுவார். அந்த வகையில் இந்த திரில்லர் படத்திற்கும் அதை அவர் செய்யத் தவறவில்லை. படத்தில் அவருக்கு பெரிதாக வேலை இல்லை. இருந்தும் கிடைக்கின்ற சின்ன சின்ன கேப்புகளில் எல்லாம் அழகான வசன உச்சரிப்புகள், முகபாவனைகள் மூலம் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றிருக்கிறார். இவருக்கு சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை தன் அனுபவ நடிப்பால் வெளிப்படுத்தி கைத்தட்டல் பெற்றுள்ளார் நாயகி கத்ரீனா கைப். நாய்களுடன் காட்டும் கெமிஸ்ட்ரி ஆகட்டும், தன் பெண் குழந்தை மேல் பாசம் காட்டும் தாயாகவும் ஒரு சேர சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமல்லாமல் உடல் மொழி ஆகியவையும் கவரும்படி இருக்கச் செய்து கைத்தட்டல் பெற்றிருக்கிறார். படம் முழுவதும் இவர்கள் இருவருமே ஆக்கிரமித்திருப்பதால் மற்றவர்களுக்கு அதிக வேலை இல்லை. இருந்தும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் போலீஸ் அதிகாரிகள் ராதிகா சரத்குமார், சண்முகராஜன், மூத்த நடிகர் ராஜேஷ், கவின்ஜே பாபு, வாய் பேச முடியாத சிறுமி உட்பட பலர் அவரவருக்கு கொடுக்கப்பட்ட ஸ்பேசில் புகுந்து விளையாடுகின்றனர். குறிப்பாக போலீசார் துப்பறியும் காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் ராதிகா அண்ட் கோ.
மது நீலகண்டன் ஒளிப்பதிவில் கத்ரீனா கைஃப் சம்பந்தப்பட்ட வீடு, அதனுள் நடக்கும் காட்சிகள் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இரவு நேர காட்சிகளில் இன்டீரியர் சம்பந்தப்பட்ட காட்சிகளை மிக கலர்ஃபுல்லாகவும் அதேசமயம் திரில்லருக்கான எலிமெண்ட்ஸ்களையும் சரியான கலவையில் கொடுத்து படத்தை ஹாலிவுட் தரத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். இவருடன் இணைந்து சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் டேனியல் பி ஜார்ஜ். இவரது பின்னணி இசை படத்திற்கு மிக சிறப்பாக உயிரூட்டி உள்ளது.
ஒரே ஒரு வீட்டுக்குள் நடக்கும் ஒரு கொலை சம்பவத்தை வைத்துக்கொண்டு திரில்லர் பாணியில் சிறப்பான அதிரடி திருப்பங்களுடன் கூடிய திரைக்கதையுடன் கொடுத்து பார்ப்பவர்களுக்கு பரவசத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது இந்த மெரி கிறிஸ்துமஸ் திரைப்படம்.
மெரி கிறிஸ்துமஸ் - நிறைவான திரில்லர்!