Skip to main content

சிம்புவுக்கு கம்பேக் கொடுத்ததா ‘மாநாடு’.. ? - விமர்சனம்

Published on 26/11/2021 | Edited on 03/12/2021

 

maanaadu

 

காலையில் எழுந்ததில் இருந்து இரவு உறங்கப்போகும் முன்புவரைக்கும் நடந்த நிகழ்வுகள் திரும்பத் திரும்ப தொடர்ந்து ரிப்பீட்டாக நடந்துகொண்டே இருந்தால்...?

 

வெளிநாட்டிலிருந்து ஒரு திருமணத்திற்காக ஊட்டிக்கு வரும் சிம்பு, தன் நண்பனுக்குத் திருமணம் செய்ய அங்கிருந்து மணமகளைக் கடத்தி காரில் கோயம்பத்தூருக்கு விரைகிறார். போகும் வழியில் எதிர்பாராதவிதமாக ஒருவரை இடித்துத் தள்ளி ஆக்சிடென்ட் செய்துவிடுகிறார். அந்த நேரம் அங்கு வரும் போலீசான எஸ்.ஜே. சூர்யா அண்ட் கோ இவர்களை அரெஸ்ட் செய்து கூட்டிச் செல்கிறார்கள். போன இடத்தில் சிம்பு கேஸில் இருந்து தப்பிக்க, அவருக்கு முதல்வரைக் கொலை செய்யச் சொல்லி டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. சிம்பு அந்த டாஸ்கை செய்தாரா, இல்லையா என்பதே ரிப்பீட் மோடில் ஓடும் ‘மாநாடு’ படத்தின் மீதி கதை.

 

அடுத்து இந்தக் காட்சிதான் வரப்போகிறது, இந்தக் கதாபாத்திரம் இதைத்தான் செய்யப் போகிறது, அடுத்து நடக்கப் போகும் சம்பவங்கள் இப்படித்தான் இருக்கும், படத்தின் முடிவு இப்படித்தான் இருக்கும் என அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை யூகிக்கும்படியான ஒரு கதைக் களத்தை திறம்பட கையாண்டு அயர்ச்சி ஏற்படும் இடங்களை சரியாகக் கண்டுபிடித்து அந்த இடங்களில் சுவாரஸ்யத்தைக் கூட்டி தன்னுடைய ட்ரேட்மார்க் திரைக்கதை மூலம் கம்பேக் கொடுத்துள்ளார் இயக்குநர் வெங்கட் பிரபு. கொஞ்சம் அசந்தாலும் சலிப்பு தட்டிவிடும் திரைக்கதையை மிகவும் நேர்த்தியாக கையாண்டு தான் ஒரு தேர்ந்த இயக்குநர் என்பதை மற்றொருமுறை நிரூபித்துள்ளார். ஆங்காங்கே சில லாஜிக் மீறல்கள் இருந்தாலும் திரைக்கதையின் வேகம் அவை அனைத்தையும் மறக்கடிக்கச் செய்து ரசிக்க வைத்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதி ஜெட் வேகம்.

 

இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்தே தயாரிப்பாளர் பிரச்சனை, ஃபைனான்ஸ் பிரச்சனை, சிம்பு ஷூட்டிங்கிற்கு தாமதமாக வரும் பிரச்சனை, உடல் பருமன், மீண்டும் உடல் இளைத்தது என அடுத்தடுத்து பல்வேறு சர்ச்சைகள் விடாமல் துரத்தின. இவற்றாலேயே இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியது. அந்த எதிர்பார்ப்பை தன் உடல் மொழி மற்றும் நடிப்பின் மூலம் சரியாக ஈடுகட்டி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் சிம்பு. இன்ட்ரோ சாங், டூயட், பஞ்ச் வசனங்கள், பாட்டின் கடைசியில் ஆடும் வெறித்தனமான டான்ஸ் என சிம்புவுக்கு உரித்தான டிரேட்மார்க் விஷயங்கள் எதையுமே இந்தப் படத்தில் வைக்காமலேயே ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார் வெங்கட் பிரபு. அதேபோல, தன்னுடைய பலம் அறிந்து நடிப்பில் என்ன செய்ய முடியுமோ அதைச் சரியாக ரசிக்கும்படி செய்து வெற்றி கண்டுள்ளார் நடிகர் சிம்பு.

 

படத்தின் நாயகி என்று சொல்வதைவிட படத்தில் வரும் ஒரு கதாபாத்திரம் என்றே கல்யாணி பிரியதர்ஷன் கதாபாத்திரத்தை சொல்ல வேண்டும். சில சீன்கள் மட்டுமே வந்து வழக்கமான நடிப்பை வெளிப்படுத்திச் சென்றுள்ளார். பிரேம்ஜி எப்போதும்போல் நாயகனின் நண்பனாக வந்துசெல்கிறார். இவர்களுடன் நடித்துள்ள கருணாகரன், எஸ்.ஏ. சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ், டேனி, சுப்பு பஞ்சு, மனோஜ் பாரதிராஜா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலையைச் செய்துள்ளனர்.

 

படத்தின் மிகப்பெரிய சர்ப்ரைஸ் எஸ்.ஜே. சூர்யா கதாபாத்திரம். படத்தின் இன்னொரு நாயகன் என்று சொல்வதைவிட படத்தின் நாயகன் என்றே சொல்லக்கூடிய அளவிற்கு தன்னுடைய அசால்ட்டான நடிப்பை அதிரடியாக வெளிப்படுத்தி அதகளப்படுத்தியுள்ளார். இவர் வரும் காட்சிகள் படத்தை ஜெட் வேகத்தில் நகர்த்தியுள்ளன. கொஞ்சம் அசந்தாலும் அயர்ச்சி ஏற்படுத்தக்கூடிய திரைக்கதையை அனாயசமாக தன் தோளில் சுமந்து படத்தைக் கரை சேர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன்.

 

பாடலைக் காட்டிலும் படத்தின் பின்னணி இசையில் மாஸ் காட்டியுள்ளார் யுவன் ஷங்கர் ராஜா. தொய்வு ஏற்படும் இடங்களிலெல்லாம் இவரின் பின்னணி இசை ஆக்சில்லரேட் செய்து சிலிர்ப்பு ஏற்படுத்துகிறது. ரிச்சர்ட் எம். நாதன் ஒளிப்பதிவில் மாநாடு சம்பந்தப்பட்ட காட்சிகள் பிரம்மாண்டம். எந்த காட்சியும் குழப்பமில்லாமல் தெளிவாக புரியும்படி காட்சிகளை அமைப்பதற்கு பிரவீன் கே.எல்.லின் படத்தொகுப்பு உதவி புரிந்துள்ளது. குறிப்பாக, இவரது கத்தரி படத்துக்குத் தெளிவைக் கொடுத்து வேகத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.

 

இந்தப் படத்தின் மொத்த வெற்றிக்குக் காரணம் கேப்டன் ஆஃப் த ஷிப், இயக்குநர் வெங்கட் பிரபு எனலாம். சென்ற வாரம் இதே கதை அம்சத்துடன் ‘ஜாங்கோ’ என்ற படம் வெளியாகியிருந்தாலும் அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல், தன் திரைக்கதை மேல் நம்பிக்கை வைத்து இப்படத்தை கொடுத்த வெங்கட் பிரபுவுக்கு பரிசாக கிடைத்துள்ளது ஒரு சூப்பர் ஹிட் வெற்றி.

 

‘மாநாடு’ - மா(ஸ்)நாடு

 

 

சார்ந்த செய்திகள்