Skip to main content

‘தலைவி’: தாறுமாறா..? தடுமாற்றமா..? - விமர்சனம்

Published on 11/09/2021 | Edited on 11/09/2021

 

thalaivi

 

சமீபகால சினிமாவில் பயோபிக் படங்களுக்கு என தனி மவுசு கூடியுள்ளது. அதனாலேயே பல்வேறு பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளும் படமாக வந்துகொண்டிருக்கின்றன. இன்னும் பல படங்கள் ரிலீஸிற்கு அடுத்தடுத்து வரிசைகட்டி நிற்கின்றன. இதற்கு முன்னர் சச்சின் டெண்டுல்கர், எம்.எஸ். தோனி, நரேந்திர மோடி, மன்மோகன் சிங், நடிகை சாவித்ரி ஆகியோரின் வாழ்க்கை வரலாற்றுப் படங்கள் வெளியாகி வெற்றிபெற்றன. அந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படமான 'தலைவி' இந்த வெற்றி பட்டியலில் இணைந்ததா..?

 

1960களில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்துகொண்டிருக்கும் நடிகர் எம்.ஜெ.ஆர். படத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் நடிகை ஜெயா. சிறுவயதிலேயே எம்.ஜெ.ஆர். உடன் ஜோடியாக நடித்த ஜெயாவின் படங்கள் தொடர்ந்து வெற்றிபெறுகின்றன. இவர்களின் ஜோடி ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாகிறது. அந்த சமயம் ஜெயா, எம்.ஜெ.ஆர். இருவருக்குள்ளும் நட்புறவு மலர்கிறது. இது எம்.ஜெ.ஆரின் கேடயமாகச் செயல்படும் ஆர்.என்.வி.க்கு சுத்தமாகப் பிடிக்காததால், சூழ்ச்சி செய்து இருவரையும் பிரிக்க முயல்கிறார். இதையடுத்து எம்.ஜெ.ஆர். ஜெயாவை பிரிகிறார். அதன்பின் ஜெயாவிற்கும் சினிமா வாய்ப்புகள் குறைய எம்.ஜெ.ஆர் முதல்வர் ஆகிறார். காலங்கள் உருண்டோட ஒருநாள் நடன நிகழ்ச்சியில் ஜெயாவை சந்திக்கும் எம்.ஜெ.ஆர். அவரை அரசியலுக்கு வர அழைக்கிறார். ஜெயாவும் அரசியலில் குதிக்க, அவருக்கு எதிராக மீண்டும் ஆர்.என்.வி. வந்து நிற்கிறார். ஆனாலும், ஆர்.என்.வியை சமாளித்து எம்.பி. ஆகி டெல்லி வரை சென்று எம்.ஜெ.ஆரின் அன்பை இன்னும் அதிகமாகப் பெறுகிறார் ஜெயா.

 

இதையடுத்து மீண்டும் ஆர்.என்.வி. சூழ்ச்சி செய்து ஜெயாவை கட்சியிலிருந்தும், எம்.ஜெ.ஆரிடம் இருந்தும் பிரிக்கிறார். எம்.ஜெ.ஆர். மரணமடைந்ததும் அரசியலிலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெயா, மீதும் அரசியல் களத்திற்கு வந்து கட்சியைக் கைப்பற்றுகிறார். எம்.எல்.ஏவாகி எதிர்க்கட்சித் தலைவராக சட்டசபைக்குள் செல்கிறார். அப்போது அங்கு நடைபெறும் அடிதடியில் அவமானப்படுத்தப்பட்ட ஜெயா, "நான் இனி முதல்வரான பிறகுதான் இந்த சட்டசபைக்குள் நுழைவேன்" எனச் சபதம் செய்கிறார். இதையடுத்து ஜெயா முதல்வரானாரா, சட்டசபைக்குள் நுழைந்தாரா, இல்லையா..? என்பதே ‘தலைவி’ படத்தின் கிளைமாக்ஸ்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரலாற்றை இரண்டரை மணி நேர படமாகச் சுருக்க மிகவும் மெனக்கெட்டுள்ளார் இயக்குநர் ஏ.எல். விஜய். அதில் வெற்றி பெற்றாரா என்றால் சந்தேகமே..! படத்தின் மேக்கிங், நடிப்பு மற்றும் வசனங்களில் அதீத கவனம் செலுத்தியுள்ள இயக்குநர் விஜய், வாழ்க்கை கதையிலிருந்த முக்கியமான தருணங்களை சரிவர கோர்க்கத் தவறியுள்ளார். ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை, சம்பந்தப்பட்டவரின் கண்ணோட்டத்தில் இல்லாமல், அடுத்தவரின் பாயிண்ட் ஆஃப் வியூவில் உருவாக்கியுள்ளார். இது பல நேரங்களில் நிஜத்திற்கு அப்பாற்பட்டு நிற்கிறது. எங்கு ஏதாவது தவறு நேர்ந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே திரைக்கதையை அமைத்திருப்பது போல சில இடங்களில் தோன்றுகிறது. மற்றபடி ஒரு படமாகப் பார்க்கும்போது திரைக்கதை அமைத்ததிலும், நடிகர்களை உணர்ச்சிகளை வெளிப்படுத்த வைத்ததிலும், வசன உச்சரிப்புகளை வாங்கியதிலும், சரியான கலவையில் காட்சிகளை அழகாகவும், நேர்த்தியாகவும் உருவாக்கியதிலும் அப்லாஸ் வாங்குகிறார் இயக்குநர் விஜய். இயக்குநர் விஜய்யின் பிளஸ் எதுவென்று இந்தப் படத்தின் மூலம் பளிச்சிட்டுள்ளது. அதை அவர் சரியாகக் கவனிக்கும்பட்சத்தில் இனிவரும் காலங்களில் முன்னணி இயக்குநர்களின் பட்டியலில் விஜய் இணைவதற்குப் பிரகாசமான வாய்ப்புள்ளது!

 

கதை முழுவதும் எம்ஜிஆர், ஆர்.எம். வீரப்பன், ஜெயலலிதா, சசிகலா, கருணாநிதி ஆகியோரையே சுற்றிச் சுற்றி வருவதால், ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வந்த பிற நபர்களின் கதாபாத்திரங்களுக்கு இப்படத்தில் வேலை இல்லை. எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் அரவிந்த்சாமி, எம்ஜிஆர் ஆகவே மாற மிகவும் முயற்சி செய்துள்ளார். அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைத்ததா என்றால் சந்தேகமே! சில காட்சிகளில் எம்ஜிஆருடைய மேனரிசத்தில் அவர் நடிக்க முயற்சி செய்தது டூப் நடிகர்கள் செய்வது போல் இருந்தாலும், உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளில் நடிப்பை தன் ஸ்டைலில் அட்டகாசமாக வெளிப்படுத்தி சிலிர்ப்பூட்டியுள்ளார். குறிப்பாக எம்ஜிஆருக்கும், ஜெயலலிதாவுக்கும் உள்ள காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்து கைத்தட்டல் பெறுகிறார். 

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

நடிப்பு ராட்சசி என பட்டம் தரும் அளவிற்கு அசுரத்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் நடிகை கங்கனா ரனாவத். ஒரு நடிகையாக, அம்மாவுக்கு மகளாக, அரசியல்வாதியாக நடிப்பின் பல்வேறு பரிமாணங்களை அசால்ட்டாக காட்டி அமர்க்களப்படுத்தியுள்ளார் கங்கனா. குறிப்பாக எமோஷனலான காட்சிகளில் தன்னுடைய முகபாவனைகளைத் தத்ரூபமாக வெளிப்படுத்தி, பார்ப்பவர்கள் கண்களைக் குளமாக்கியுள்ளார். ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்றாற்போல் அந்தந்த வயதுக்கு உண்டான நடிப்பைச் சரிவரப் பிரதிபலித்து நடிப்பில் உச்சம் தொட்டுள்ளார். இந்தப் படத்துக்காகவும் கங்கனாவுக்கு விருதுகள் நிச்சயம்! 

 

ஆர்.என்.வியாக நடித்திருக்கும் சமுத்திரக்கனி, கங்கனாவுக்கு சரியான டஃப் கொடுத்து நடித்துள்ளார். கொஞ்சம் அசந்தாலும் கங்கனாவின் நடிப்பைத் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வில்லத்தனத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இவரும் கங்கனாவை போல் முக பாவனைகளில் சின்னச்சின்ன எக்ஸ்பிரஷன் காட்டி ஸ்கோர் செய்துவிடுகிறார். ஜெயாவின் உதவியாளராக வரும் தம்பி ராமையா, தனது அனுபவ நடிப்பால் கதைக்கு வலு சேர்த்துள்ளார். சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார். சசிகலா கதாபாத்திரத்தில் வரும் பூர்ணா பெரிதாக வசனங்கள் பேசாமலே வந்து செல்கிறார். ஜெயாவின் அம்மா சந்தியாவாக நடித்திருக்கும் பாக்யஸ்ரீ, எம்ஜிஆரின் மனைவி ஜானகியாக நடித்திருக்கும் மதுபாலா ஆகியோர் அவரவருக்கு கொடுத்த வேலைகளை நிறைவாகச் செய்துள்ளனர். கலைஞர் கருணாநிதியாக நடித்திருக்கும் நாசர் குரலில் மட்டும் கருணாநிதியை அழகாகப் பிரதிபலித்துள்ளார். நடிப்பில் ஏனோ ஒரு இறுக்கமாகவே தெரிகிறார். எம்.ஆர். ராதா வேடத்தில் வரும் ராதா ரவி திடீரென தோன்றி மறைந்துள்ளார்.

 

kangana ranaut and arvind samy starring thalaivi movie review

 

படத்தின் மிகப்பெரிய பலமாக இருப்பது மேக்கிங். அந்த மேக்கிங்கிற்கு விஷால் விட்டலின் ஒளிப்பதிவும், ராமகிருஷ்ணா மற்றும் மோனிகாவின் கலை இயக்கமும் சிறப்பாகச் செயல்பட்டு படம் பிரம்மாண்டமாக வர உதவி புரிந்துள்ளது. குறிப்பாக அந்தக் காலத்து செட் அமைப்புகள், சூழல்கள் உள்ளிட்டவற்றை சிறப்பாகக் கையாண்டு தங்களுடைய ஒளிப்பதிவு மற்றும் கலை இயக்கம் மூலம் அழகாகக் காட்சிப்படுத்தி, ஒரு பிரம்மாண்ட படத்துக்குரிய அத்தனை அம்சங்களையும் இப்படத்தின் மூலம் அழகாக வெளிப்படுத்தியுள்ளனர்.

 

ஜி.வி. பிரகாஷின் ‘கண்கள் ரெண்டும்...’ பாடல் மட்டும் மனதை வருடுகிறது. ஆனால், அவரது பின்னணி இசை படத்தை வேறு ஒரு தளத்திற்குக் கொண்டு சென்றுள்ளது. குறிப்பாக எமோஷனல் காட்சிகளில் கண்கலங்க வைத்துள்ளார்.

 

ஒரு சாதாரண படமாக இதைப் பார்த்தால், ஒரு பெண் எப்படி சினிமாவில் நடிகையாக அறிமுகமாகி அவருடைய வாழ்க்கையில் எப்படி எல்லாம் போராடி ஜெயித்து, பின் அரசியலிலும் எப்படி மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கினார் என்பதை உத்வேகம் தரும்படி சிறப்பாகக் காட்சிப்படுத்தி, அதை ஒரு பிரம்மாண்ட படமாக உருவாக்கி, சிறப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்துள்ளனர். 

 

ஆனால், இது ஜெயலலிதா பயோபிக் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புடன் பார்த்தால் சற்று ஏமாற்றமே...!!!

 

‘தலைவி’ - ஆங்காங்கே தடுமாறியிருக்கிறார்...

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கங்கனா புகைப்பட சர்ச்சை - காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராகத் தேசிய மகளிர் ஆணையம்

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
NCW demands action from Election Commission against Congress regards kangana photo issue

நடிகை கங்கனா ரணாவத் வருகின்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுகிறார். அதனால் தற்போது தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே கங்கனா ரணாவத்தின் கவர்ச்சி புகைப்படம் ஒன்று, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திடீரென பகிரப்பட்டது.

இது சர்ச்சையான நிலையில் பதிவு குறித்து பேசிய கங்கனா, “கடந்த 20 வருடங்களில் ஒரு நடிகையாக நான் அனைத்து விதமான பெண்களின் கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளேன். பாலியல் தொழிலாளிகள் வாழ்க்கையை மோசமான விமர்சனத்திற்காக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்” என அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.

இந்த சர்ச்சை குறித்து வீடியோ வெளியிட்ட சுப்ரியா ஸ்ரீனேட், அவரது ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களைப் பலர் பயன்படுத்துவதாகவும், அதில் யாரோ ஒருவர் இந்த பதிவை வெளியிட்டுவிட்டதாகவும், தற்போது அது நீக்கப்பட்டதாகவும் தெரிவித்தார். இதேபோல் கிசான் காங்கிரஸின் மாநில இணை ஒருங்கிணைப்பாளர் எச்.எஸ். ஆஹிர், கங்கனாவிற்கு எதிரான கருத்துக்களையும் தெரிவித்தார்.

இந்த நிலையில், சுப்ரியா ஸ்ரீனேட் மற்றும் எச்.எஸ். ஆஹிர் ஆகிய இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கக் கோரி தேசிய மகளிர் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும் அவர்களின் செயலைக் கண்டித்துள்ளது.

Next Story

“நடிகை என்பதில் நம்பிக்கை இல்லை” - கங்கனா ரணாவத்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
kangana ranaut speech about election

2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 அன்று நடைபெறவுள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. பிரச்சாரத்தையும் தீவிரப் படுத்தியுள்ளன. இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான 5 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க. நேற்று வெளியிட்டது. இமாச்சல பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியில் பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் பா.ஜ.க. சார்பில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று பா.ஜ.க கட்சி நிர்வாகிகளுடன் ஹோலி பண்டிகை கொண்டாடினார். பின்பு பேட்டியளித்த அவர், “இமாச்சலத்தைச் சேர்ந்த பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அனுராக் தாக்கூர் மற்றும் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வர் ஜெய் ராம் தாக்கூர் ஆகியோரும் எனக்கு நிறைய ஆதரவளித்துள்ளனர். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். பிரதமர் மோடியால் தான் இன்று நமக்கு இந்த பெரிய பொறுப்பு கிடைத்துள்ளது. 

நான் தேர்ந்தெடுக்கப்பட்டால் இமாச்சல் மற்றும் மண்டி மக்களுக்கு எப்போதும் துணையாக இருப்பேன். நான் அவர்களுக்கு சேவை செய்வேன். அவர்களுடன் சேர்ந்து நடப்பேன், வெற்றி பெறுவேன். அதற்கு நாங்கள் பெரிய அளவில் பிரச்சாரம் செய்வோம். உலகில் அதிகம் விரும்பப்படும் தலைவர்களில் பிரதமர் மோடியும் ஒருவர். அவருடைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுவோம். பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நிரல்தான் எங்களின் நிகழ்ச்சி நிரல். எங்களது பெயராலும், உழைப்பாலும் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று நான் நம்பவில்லை, ஆனால் பிரதமர் மோடி செய்த பணியால் தேர்தலில் வெற்றி பெறுவோம். 

கட்சி வெற்றிபெற்றால், நானும் வெற்றிபெறுவேன். பிரதமர் மோடி இந்த தேர்தலில் வெற்றிபெற்றால், நாங்களும்  வெற்றிபெறுவோம். நான் ஒரு சூப்பர் ஸ்டார் அல்லது நடிகை என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. நான் அவற்றையெல்லாம் விட்டுவிட்டேன். நான் கட்சியின் உத்தரவை பின்பற்றக்கூடிய ஒரு சாதாரண தொண்டர்” என்றார்.