Skip to main content

ஆக்‌ஷன் இருக்கு; எமோஷன் இருக்கா? - ‘தேவரா’ விமர்சனம்!

Published on 28/09/2024 | Edited on 28/09/2024
junior ntr devaraa movie review

பாகுபலி, கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர் படங்களுக்குப் பிறகு அதே போன்ற பிரம்மாண்டமான பான் இந்தியா படம் கொடுக்கும் முயற்சியில் தேவரா மூலம் களம் இறங்கி இருக்கிறார் ஜூனியர் என்.டிஆர். இதற்கு முன்பு பான் இந்தியா படங்கள் கொடுத்த மாபெரும் வெற்றியை இந்த தேவரா கொடுத்ததா, இல்லையா? என்பதை பார்ப்போம்...

செங்கடல் என்ற கடல் பகுதிக்கு அருகில் இருக்கும் மிகப்பெரிய மலையில் 3 கிராமங்கள் இருக்கின்றன. ரத்தனகிரி என்ற அந்த கிராமங்களில் இருந்து அந்த காலத்தில் சுதந்திரத்திற்காக போராடிய வீரர்கள் நிறைய பேர் இருந்தனர். சுதந்திரத்திற்கு பின்னர் அந்த வீரர்களை பலரும் மறந்து விட அதற்கு பின்னால் வரும் சந்ததிகள் ஏழ்மை நிலையால் கடலில் கொள்ளையடிக்கும் கொள்ளையர்களுக்கு உதவி செய்து அவர்களுடைய வயிற்றை கழுவி வருகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர் தேவரா தலைமையில் சைப் அலிக்கான், ஸ்ரீகாந்த், கலையரசன் உள்ளிட்ட குழு கடலில் எப்பேர்பட்ட சூழ்நிலையிலும் கப்பலில் இருக்கும் பொருட்களை அசால்டாக கடத்திவிட்டு வருகின்றனர்.

கடத்திய பொருளால் ஏற்படும் விபரீதங்கள் ஏதும் அறியாமல் உரிய கொள்ளைக்காரர்களிடம் அதை ஒப்படைக்கின்றனர். இப்படியே நாட்கள் செல்ல செல்ல இவர்கள் கடத்திய ஒரு பொருளால் அவரது கிராமத்தில் இருக்கும் நன்றாக படிக்கும் சிறுவன் இறந்து விடுகிறார். இதனால் மிகுந்த குற்ற உணர்ச்சிக்கு ஆளாகும் தேவரா நாமும் நம் முன்னோர்கள் போல மாற வேண்டும் என எண்ணி இனி கொள்ளை சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என முடிவு எடுக்கிறார். இவருடன் இருக்கும் மற்ற கூட்டாளிகள் எவருமே இந்த முடிவை ஏற்கவில்லை. இதனால் அனைவரும் சேர்ந்து கொண்டு ஜூனியர் என்.டி.ஆரை கொலை செய்ய முடிவெடுக்கின்றனர். அந்த முயற்சியில் இருந்து தப்பித்த தேவரா இனி யார் கடலுக்கு சென்று கொள்ளையடிக்க முயற்சி செய்தாலும் அவர்களை கரைக்கு திரும்ப விட மாட்டேன் என்று எழுதி வைத்துவிட்டு மறைந்து விடுகிறார். அதன் பின் கடலுக்கு செல்பவர்களுக்கு மரணமே மிஞ்சியது. இதை எப்படியாவது தடுத்த நிறுத்த வேண்டும் என எண்ணிய சைஃப் அலிகான் குழு தேவராவின் மகன் வரவை பிரைன் வாஷ் செய்து கடலுக்கு அனுப்புகின்றனர். போன இடத்தில் மீண்டும் கொள்ளை சம்பவம் அரங்கேறியதா? மறைந்திருந்து தாக்கும் தேவரா என்னவானார்? என்பதே தேவரா முதல் பாகம் படத்தின் மீதி கதை.

junior ntr devaraa movie review

கிட்டத்தட்ட பாகுபலி படத்தை போல் அதில் இருக்கும் சம்பவங்களை வேறு ஒரு வடிவில் உல்ட்டா செய்து வேறு ஒரு தளத்தில் கதைக்களமாக உருவாக்கி அதே போன்ற திரைக்கதையில் ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து ஒரு பான் இந்தியா படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் கொரட்டலா சிவா. பாகுபலி படத்தை போல் இதிலும் ஒரு பிளாஷ்பேக் சொல்லும் நபர் அவர் வழியே மொத்த கதையும் திறக்கிறது. கதையில் ஊர் மக்கள், அந்த ஊர் மக்களுக்காக சேவை செய்யும் நாயகன், அவருக்கு ஏற்படும் பகை, அந்த பகையிலிருந்து அவர் எப்படி அந்த ஊரை காப்பாற்றினார், அதற்காக அவர் எந்த அளவு தன் வாழ்க்கையை இழந்தார், இறுதியில் அவரை முதுகில் குத்தியது யார்? என்ற செய்தியோடு முதல் பாகம் படம் முடிகிறது.

கதை களத்தையும் கதை சொல்லும் மாந்தர்களையும் மட்டும் மாற்றிவிட்டு மற்றபடி ஏற்கனவே வந்த பான் இந்தியா படங்களின் திரைக்கதையை உல்டா செய்து படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் கொரட்டல சிவா திரைக்கதையில் இன்னும் கூட சிறப்பான கவனத்தை செலுத்தி இருக்கலாம். முதல் பாதி ஆரம்பித்து சற்றே வேகமாக நகர்ந்து போக போக இரண்டாம் பாதியில் அப்படியே ஸ்பீட் பிரேக் போட்டு அயர்ச்சியையும் கொடுத்து முடிவில் யாரும் எதிர்பாராத ஒரு ட்விஸ்டோடு முடிகிறது. முழுக்க முழுக்க தெலுங்கு ரசிகர்களை மட்டுமே மையப்படுத்தி உருவாகியிருக்கும் இத்திரைப்படம் ஏனோ பான் இந்தியா படம் எனக் கூறிக் கொள்கின்றனர். ஒரு பான் இந்தியா படம் என்றால் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்கும்படி இருக்க வேண்டும். அப்படியான விஷயம் இப்படத்தில் இல்லை. மற்றபடி தெலுங்கு ரசிகர்களை மகிழ்விக்குமான அத்தனை அம்சங்களும் அளவான முறையில் சிறப்பாக இப்படத்தில் பயன்படுத்தப்பட்டு ஒரு மினிமம் கேரன்டி திரைப்படமாக அமைந்திருக்கிறது.

junior ntr devaraa movie review

மேன் ஆஃப் மாசஸ் என அழைக்கப்படும் தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் வழக்கம்போல் அமைதியான முகத்தை வைத்துக்கொண்டு அதிரடியில் பட்டையை கிளப்புகிறார். தேவரா கதாபாத்திரத்தில் ஊர் மக்களுக்கு மிகப்பெரிய ஹீரோவாக திகழ்கிறார். பாகுபலி, கே.ஜி.எஃப் போன்ற படங்களில் நாயகர்கள் எந்த அளவு ஆக்ஷனில் மக்களை ரசிக்க வைத்து கவர்ந்தனரோ அதே அளவு ஜூனியர் என்டிஆர் கவர முயற்சி செய்திருக்கிறார். இவரது உடல் மொழியும் நடிப்பும் தெலுங்கு வாடைக்கு ஏற்ப அமைந்து அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து சென்று இருக்கிறார் ஜான்வி கபூர். அவர் படத்தில் இருக்கிறாரே என்ற ஒரே காரணத்திற்காக படு கிளாமராக ஒரு சாங் இடம்பெறுகிறது. மற்றபடி ஜான்விக்கு பெரிதாக வேலை இல்லை. இரண்டு ஜூனியர் என்டிஆர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர். இவருடன் நடிக்கும் விடா கொண்டன் சைஃப் அலிகான் ஜூனியர் என்டிஆர் க்கு ஈக்குவலாக போட்டி போட்டு நடிப்பிலும் ஆக்சனிலும் பட்டையை கிளப்பி இருக்கிறார். 

இவருக்கு அதிகமான வசன உச்சரிப்பு கிடையாது முகபாவனைகளிலே பயங்கரமான வில்லத்தனம் காட்டி பயமுறுத்துகிறார். அப்பா ஜூனியர் என்டிஆரிடம் சரணடைந்து விடும் சைஃப் அலிகான் அவரை பழிவாங்க நினைக்கும் அளவுக்கு மிகவும் கொடூரக்கார வில்லனாக நம்மை மிரட்டுகிறார். இவருடன் கலையரசன் ஸ்ரீகாந்த் ஆகியோர் அவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். மிகவும் துடுக்கான இளைஞனாக நடித்திருக்கும் கலையரசன் சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கிறார். கே ஜி எஃப் போல் கதை சொல்லும் கதாபாத்திரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். தமிழ் பதிப்புக்கான உச்சரிப்பில் மட்டும் ஏனோ சற்றே தடுமாறி இருக்கிறார். அவருடைய உச்சரிப்பு இன்னும் கூட சிறப்பாக இருந்திருக்கலாம். மற்றபடி உடனடித்த அனைத்து கதாபாத்திரங்களும் அவரவர் வேலையை மிக மிக சிறப்பாக செய்திருக்கின்றனர். தெலுங்குக்கே உரித்தான நடிகர்கள் பட்டாலம் இப்படத்திலும் இருக்கிறது. அனைத்து நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்து படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கின்றனர்.

படத்தின் மிகப்பெரிய இன்னொரு ஹீரோக்கள் என்றால் அது ஒளிப்பதிவாளர் ரத்னகுமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்கள்தான். ஒளிப்பதிவாளர் ரேண்டி ஒவ்வொரு காட்சியையும் செதுக்கி இருக்கிறார். இப்படத்திற்கான சிறப்பான தனித்துவமான கலர் பாலட்டை தேர்வு செய்திருக்கும் அவர் மலையும் கடல் சார்ந்த காட்சிகளையும் சிறப்பாக காட்சிப்படுத்தி பிரம்மாண்டமாக உணர வைக்கிறார். அதேபோல் ‘சுட்ட மல்லே...’ பாட்டு மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கிரங்கடிக்க செய்த அனிருத்,  பின்னணி இசை மூலம் மிரட்டி இருக்கிறார். ஒரு தமிழ் படத்திற்கு அவர் எந்த அளவு உழைப்பை போட்டு படத்தை உயர்த்தி காட்டுவாரோ அதே அளவுக்கான உழைப்பை இந்த படத்திற்கும் கொடுத்து பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். காட்சிக்கு காட்சி இவரது பின்னணி இசை படத்தை வேகமாக நகர்த்த உதவி இருக்கிறது. வழக்கம்போல் இவரே இப்படத்திற்கு ஷோ ஸ்டீலராக இருக்கிறார்.

பாகுபலி, கே ஜி எஃப், ஆர்.ஆர்.ஆர் படங்களை போல் ஒரு பான் இந்தியா படமாக உருவாகி இருக்கும் இத்திரைப்படம் அவைகள் கொடுத்த தாக்கத்தை சற்றே மிஸ் செய்திருக்கிறது. மேற்கூறிய படங்களில் என்னதான் ஆக்சன் காட்சிகளும் பிரம்மாண்டமும் சிறப்பாக அமைந்திருந்தாலும் அதையும் தாண்டி செண்டிமெண்ட் காட்சிகள் நமக்கு கனெக்ட் செய்யும்படியாக அமைந்திருந்ததால் அந்தப் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. ஆனால் இந்த படத்தில் மற்ற அனைத்து விஷயங்களும் சிறப்பாக அமைக்கப்பட்டு சென்டிமென்ட் விஷயம் மட்டும் சற்றே கனெக்ட் ஆகாமல் இருப்பது படத்தை நம்மிடமிருந்து சற்றே தள்ளி வைத்திருக்கிறது. அதை தவிர்த்து மற்றபடி சிறப்பான விஷயங்கள் மேற்கூறிய படங்களில் என்னென்ன இருந்ததோ அவை அனைத்தும் தேவராவிலும் இருந்து கொண்டு ரசிகர்களை ரசிக்க வைக்க தவறவில்லை. 


தேவரா - பிரம்மாண்டம் ஓகே! சென்டிமென்ட் குறைவு!

சார்ந்த செய்திகள்