நமது நக்கீரன் மூலமாக நாம் ஏற்கெனவே வெளி உலகுக்கு கொண்டு வந்த கள்ளக்குறிச்சி மாணவியின் மர்ம மரணம் மற்றும் அதேபோன்று சென்னையை அடுத்து மகாபலிபுரத்தில் இருக்கும் தனியார் பள்ளியில் நடந்தேறிய பாலியல் துன்புறுத்தல்களால் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா என இரண்டு முக்கியமான சம்பவங்களை ஒருசேர மையப்படுத்தி உருவாகி இருக்கும் திரைப்படம் பி.டி சார். மாணவிக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளால் அவர்கள் எப்படி பாதிக்கப்பட்டார்கள்? அதிலிருந்து அவர்களுக்கு விடிவு காலம் கிடைக்க ஒரு பி.டி வாத்தியார் எப்படி எல்லாம் போராடுகிறார் என்பதை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் ரசிகர்களை எந்த அளவு ஈர்த்துள்ளது? என்பதைப் பார்ப்போம்.
ஈரோட்டில் ஜிபி இன்ஸ்டிட்யூட் ஆஃப் எஜுகேஷன் எனும் பெரிய கல்லூரி மற்றும் பள்ளியை நடத்திக் கொண்டிருப்பவர் அப்பகுதியில் பெரும்புள்ளியான மூத்த நடிகர் தியாகராஜன். அதே இன்ஸ்டிடியூஷனில் பி.டி வாத்தியாராகப் பணிபுரிகிறார் பயந்த சுபாவம் கொண்ட ஹிப் ஹாப் ஆதி. அங்கு அவருக்கும் மாணவர்களுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட்டான காரணத்தினால் , மாணவர்களுக்குள் இருக்கும் மன அழுத்தத்தை போக்க மேஜிக் வால் என்ற சுவற்றில் அவர்களுக்குள் இருக்கும் குறை நிறைகளை எழுதும் படி தூண்டுகிறார். இதனால் மாணவர்களுக்குள் ஒரு நல்லொழுக்கம் ஏற்படுகிறது. இதற்கிடையே அதே கல்லூரியில் படிக்கும் மாணவி அனிகா கல்லூரியின் கரஸ்பாண்டன்ட் தியாகராஜன் மூலமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி தற்கொலை செய்து கொள்கிறார். இதற்கு நீதி கேட்டு போராடும் ஹிப் ஹாப் ஆதி தோல்வியடைகிறார். இதனால் வெகுண்டெழுந்து, அடுத்தடுத்து அதிரடி முடிவுகள் எடுத்து சில தகிடதத்தம் வேலைகள் செய்கிறார். இதற்குப் பிறகு அனிகா அனுபவித்த பாலியல் துன்புறுத்தலுக்கு நீதி கிடைத்ததா? இல்லையா? ஹிப் பாப் ஆதி செய்த தகிடதத்தம் வேலைகள் என்ன? என்பதே இப்படத்தின் மீதி கதை.
தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களால் மாணவிகள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் நாட்டில் பல்வேறு இடங்களில் அரங்கேறி அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த சூழலில் இதை மையமாக வைத்து ஒரு படத்தை கொடுத்து அதை ரசிக்கும்படி எடுத்து கரை சேர்த்திருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை சட்டத்திற்கு முன் கொண்டு வந்து நிறுத்தி அவர்களுக்கு தண்டனை வாங்கித் தர வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்டவர்களும் வெளியே வந்து தனக்கு நேர்ந்த கொடுமையை பொதுவெளியில் தைரியமாக கூறி, மற்ற மாணவிகளுக்கு விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும். இதைத் தான் பி.டி.சார் படம் சொல்கிறது.
எந்த ஒரு சூழலிலும் நமக்கு என்ன என்று ஒதுங்கிப் போகாமல் பிரச்சனையை நேருக்கு நேர் நின்று எதிர்கொண்டு போராடும் பட்சத்தில் வெற்றி நிச்சயம் என பாசிட்டிவான விஷயத்தை மிக எதார்த்தமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமாகவும் கமர்சியல் கலந்த ஒரு படமாக கொடுத்து இருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன். பி.டி. சார் என டைட்டில் வைத்து விட்டு அதற்கு ஏற்றார் போல் விளையாட்டு சம்பந்தமான படமாக எடுக்காமல் சமூகத்தில் மாணவிகளுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களை மையமாக வைத்து ஜனரஞ்சகமாக குடும்பங்கள் கொண்டாடும் படமாக கொடுத்து, அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் வேணுகோபாலன். முதல் பாதி ஸ்லோ அன் ஸ்டெடியாக ஆரம்பித்து போகப் போக வேகம் எடுத்து இரண்டாம் பாதி கோர்ட் ரூம் டிராமாவாக நீண்டு ரசிக்கும்படியான படமாக இந்தப் படம் அமைந்திருக்கிறது. ஆங்காங்கே அவ்வப்போது சில அயற்சியான காட்சிகள் மற்றும் பாடல்கள் படத்தில் தென்பட்டாலும் அவை படத்தின் கதை கருவும், திரைக்கதையும் மறக்கடிக்கின்றன. படம் முழுவதும் ஆங்காங்கே வரும் க்ளிஷேவான காட்சிகளை மட்டும் சற்று தவிர்த்து இருக்கலாம். மற்றபடி சமூகத்துக்கு தேவையான ஒரு படமாக இந்தப் படம் மாறி இருக்கிறது.
வழக்கம்போல் தனது இளமையான ஈர்க்கும் நடிப்பை இப்படத்திலும் வெளிப்படுத்தி இருக்கிறார் நாயகன் ஹிப் ஹாப் ஆதி. எந்தெந்த காட்சிகளுக்கு எந்தெந்த அளவு எக்ஸ்பிரஷன்ஸ் தேவையோ அதைச் சரியான முறையில் வெளிப்படுத்தி கதைக்கு என்ன தேவையோ அதைக் கொடுத்திருக்கிறார். குறிப்பாக அவர் கொங்கு பெல்ட்டை சேர்ந்தவராக இருப்பதால் அதே ஸ்லாங்கை இந்த படத்திலும் பயன்படுத்தி நடித்து இருக்கிறார். அது படத்திற்கு ப்ளஸ்ஸாக அமைந்திருக்கிறது. படம் ஈரோட்டில் நடப்பதால் படத்தில் ஆங்காங்கே கோயம்புத்தூர் தமிழ் சற்று மேலோங்கி இருக்கிறது. அதை ஹிப் ஹாப் ஆதி சிறப்பாக கையாண்டு இருக்கிறார். வழக்கமான நாயகியாக வந்து செல்லும் நாயகி காஷ்மிரா பர்தேசி வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தி விட்டு சென்றிருக்கிறார். நாயகனின் அம்மாவாக வரும் தேவதர்ஷினி தன் மகனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற போராட்ட உணர்வை தன் நடிப்பின் மூலம் உணர்ச்சிபூர்வமாக நடித்த கவனம் பெற்று இருக்கிறார். இவருக்கும் ஆதிக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.
ஆதியின் தந்தையாக வரும் பட்டிமன்ற புகழ் ராஜா, காமெடி நடிப்பில் சிரிப்பு வர வைத்திருக்கிறார். மிரட்டல் வில்லனாக இல்லாமல் சைலன்ட் வில்லனாக வரும் மூத்த நடிகர் தியாகராஜன் தனது முகபாவனைகள் மூலமே மிரட்டுகிறார். பாதிக்கப்படும் மாணவியாக சில காட்சிகளில் நடித்திருக்கும் அனிகா சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்ஸ் மூலம் மிக முதிர்ச்சியான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி கவனம் பெற்று இருக்கிறார். சின்ன வசனம் உச்சரிப்பு என்றாலும் கூட மெனக்கெட்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கும் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் செய்திருக்கிறார். மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் முனீஸ் காந்த், இளவரசு, பிரபு, பாக்யராஜ், ஆர் ஜே விக்னேஷ், பாண்டியராஜன், ஒய்.ஜி.மதுவந்தி, வினோதினி வைத்தியநாதன், சுட்டி அரவிந்த் உட்பட பலர் அவரவர் கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
படத்திற்கு வழக்கம் போல் முழு இசைக்கும் பொறுப்பேற்று இருக்கிறார் ஹிப் ஹாப் ஆதி. இந்தப் படத்தில் பாடல்கள் பெரிதாக இடம்பெறவில்லை என்றாலும் பின்னணி இசையை படத்திற்கு ஏற்ப வழக்கம்போல் சிறப்பாக கொடுத்து இருக்கிறார். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவில் பள்ளி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதேபோல் கோர்ட் டிராமா காட்சிகளையும் நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார். பள்ளியில் மாணவிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்களை எப்படி துணிச்சலாக நம் நக்கீரன் வெளி உலகத்திற்கு கொண்டு வருகிறதோ, அதே போன்று பள்ளியில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல் பிரச்சனையை துணிச்சலாக படமாக்கி, அதை சற்றே ரசிக்கும்படியாக கொடுத்துள்ளது படக்குழு.
பி.டி. சார் - அவசியம்!