தீபாவளி ரேஸில் அண்ணாத்த படத்துக்கு போட்டியாக வெளியாகியுள்ளது விஷால், ஆர்யாவின் எனிமி படம். பெரும்பாலும் பண்டிகைகளில் பெரிய நடிகர்களின் படங்களுக்கு இடையே வெளியாகும் விஷால் படங்கள் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. அந்த நம்பிக்கையில் தைரியமாக தீபாவளி ரேஸில் கலந்துகொண்டுள்ள விஷால், ஆர்யாவின் எனிமி படம் முந்தைய படங்களை போல் வரவேற்பை பெற்றதா..? இல்லையா..?
வாழ்க்கையில் எந்த சூழ்நிலையிலும் ரிஸ்க் எடுக்க தயங்கும் தம்பி ராமையாவின் மகன் விஷாலும், ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகன் ஆர்யாவும் சிறு வயது நண்பர்கள். இவர்கள் இருவருக்கும் துப்பறியும் தொழில்நுட்ப பயிற்சி கொடுக்கிறார் பிரகாஷ் ராஜ். இருவரும் ஒரு போலீசை போல் துப்பறிவதில் கைதேர்ந்தவர்களாக மாறுகிறார்கள். அப்போது திடீரென ஒருநாள் பிரகாஷ் ராஜ் கொலை செய்யப்படுகிறார். இதனால் நண்பர்கள் இருவரும் சிறு வயதிலேயே பிரிய நேர்கிறது. இதையடுத்து இருவரும் வளர்ந்த பின் விஷால் சிங்கப்பூரில் தன் அப்பாவுடன் சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அப்போது சிங்கப்பூர் வரும் இந்திய வெளியுறவு துறை அமைச்சரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. இதை விஷால் தடுக்கிறார். ஒருகட்டத்தில் இந்த கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா என்று விஷாலுக்கு தெரிய வர அவர் அதிர்ச்சியாகிறார். பின்னர் ஆர்யா ஏன் அவரை கொலை செய்ய முயற்சிக்கிறார்? ஆர்யாவுக்கும், விஷாலுக்குமான நட்பு என்னவானது? என்பதே எனிமி படத்தின் மீதி கதை.
அரிமா நம்பி, இருமுகன் போன்ற டீசண்டான கிரைம் திரில்லர் படங்களை கொடுத்த இயக்குனர் ஆனந்த் ஷங்கர் மற்றுமொரு டீசண்டான கிரைம் திரில்லர் படத்தை கொடுத்துள்ளார். படத்தில் நாயகன் விஷால், வில்லன் ஆர்யா இருவருக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனாலேயே படம் முழுவதும் வரும் இருவருக்குமான காட்சிகள் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. குறிப்பாக இவர்களின் துப்பறியும் காட்சிகள் திரைக்கதைக்கு வேகம் கூட்டி அயர்ச்சியை தவிர்த்துள்ளது. அதேபோல் படத்தின் முதல் இருபது நிமிடங்கள் ஓடக்கூடிய விஷால் ஆரியாவின் சிறுவயது கதாபாத்திரங்கள் நடித்திருக்கும் காட்சிகள் சுவாரஸ்யமாக அமைந்து திரைக்கதை வேகத்துக்கு அடித்தளம் அமைத்துள்ளது. இருந்தும் கதாநாயகி சம்பந்தப்பட்ட க்ளிஷேவான காட்சிகள் அயர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
விஷால், ஆர்யா இருவரும் போட்டிபோட்டுக்கொண்டு நடித்துள்ளனர். இருவரும் சமமான உடலுழைப்பை கொடுத்து நடித்துள்ளதால் ஆக்சன் காட்சிகள் அனல் பறக்கின்றன. அதேபோல் செண்டிமெண்ட் காட்சிகளிலும் நன்றாக ஸ்கோர் செய்துள்ளனர். நாயகி மிர்னாலினி ரவி கடமைக்கு வந்து டூயட் பாடிவிட்டு சென்றுள்ளார். இன்னொரு நாயகி மம்தா மோகன்தாஸ் சில காட்சிகளே வந்தாலும் மனதில் பதிகிறார்.
விஷால் அப்பாவாக தம்பி ராமையா, ஆர்யா அப்பாவாக பிரகாஷ் ராஜ் இருவரும் தங்கள் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி ரசிக்கவைத்துள்ளனர். குறிப்பாக தம்பி ராமையா செண்டிமெண்ட் காட்சிகளில் நெகிழவைத்துள்ளார். விஷால், ஆர்யா சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவர்கள் நன்றாக நடித்து கவனம் பெற்றுள்ளனர். அவர்கள் இருவருக்கும் எதிர்காலத்திற்கான கதவு பிரகாசமாக திறந்துள்ளது.
விஷால் நண்பராக வரும் கருணாகரன் எப்போதும் போல் வழக்கமான காமெடி கதாபாத்திரத்தில் வந்து சிரிப்பு மூட்ட முயற்சி செய்து கடந்து சென்றுள்ளார். மற்றபடி சிறிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் மாரிமுத்து, ஜார்ஜ் மரியான், கலை இயக்குனர் ராமலிங்கம், சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோர் அவரவர் வேலையை நிறைவாக செய்துள்ளனர்.
தமன் இசையில் 'டும் டும்' பாடல் மட்டும் கேட்கும் ராகம். சாம் சி எஸ் பின்னணி இசை கிரைம் காட்சிகளில் வேகத்தை கூட்டியுள்ளது. ஆர்.டி ராஜசேகர் ஒளிப்பதிவில் ஆக்சன் காட்சிகள் உலகத்தரம்.
இரு நண்பர்களுக்குள் இருக்கும் ஈகோ போட்டியை டீசண்டான திரில்லர் படமாக கொடுத்துள்ளார் இயக்குனர் ஆனந்த் ஷங்கர். துப்பறியும் காட்சிகள் மற்றும் ஆக்சன் காட்சிகளுக்காக ஒரு முறை பார்க்கலாம்.
எனிமி - டீசண்டான ஈகோ சண்டை!