devil tamil movie review

சவரக்கத்தி படத்திற்குப் பிறகு டைரக்டர் மிஷ்கினும் அவரது தம்பி ஆதித்யாவும் இணைந்து உள்ள மற்றொரு திரைப்படம் டெவில். பார்ப்பதற்கு பேய் படம் போல் ரிலீஸ் ஆகி இருக்கும் இத்திரைப்படம் உண்மையில் பேய் படமா? அல்லது வேறு ஒரு படமா?

விதாரத்துக்கும் பூர்ணாவுக்கும் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடைபெறுகிறது. திருமணத்திற்குப் பிறகு இருவருக்குள்ளும் ஒரு புரிதலே ஏற்படவில்லை. நெருங்கி நெருங்கி வரும் பூர்ணாவை விலகி விலகி செல்கிறார் விதார்த். இதனால் விரக்தியடைந்த பூர்ணா ஒரு விபத்தில் இன்னொரு நாயகன் திரிகுன்னை சந்திக்க நேர்கிறது. இருவருக்குள்ளும் ஒரு இனம் புரியாத உறவு மேம்படுகிறது. அது நாளடைவில் காதலாக மாறுகிறது. இதற்கிடையே விதார்த் இன்னொரு நாயகி சுபஸ்ரீ உடன் காதல் தொடர்பில் இருக்கிறார். ஒரு நாள் விதார்த் தன் காதலியுடன் இருக்கும் பொழுது பூர்ணாவிடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இன்னொரு புறம் பூர்ணா தன் காதலன் உடன் இருக்கும் பொழுது விதார்த்திடம் கையும் களவுமாக மாட்டிக் கொள்கிறார். இதையடுத்து இருவருக்குள்ளும் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன? என்பதை டெவில் படத்தின் மீதி கதை.

ஒரு சிறிய கதையை வைத்துக்கொண்டு முழு படத்தையும் சற்று விறுவிறுப்புடன் கூடிய காதல் கதையாக கொடுத்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆதித்யா. முதல் பாதி முழுவதும் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் விறுவிறுப்பாக படத்தை நகர்த்திய இயக்குநர், இரண்டாம் பாதியில் விதார்த் சம்பந்தப்பட்ட காட்சிகள் மூலம் படம் விரிந்து போக போக பூர்ணா விதார்த் இடையிலான பிரச்சனைகளை விரிவாக பேசி இறுதியில் எதிர்பாராத கிளைமாக்ஸில்படம் முடிகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் சற்று வேகம் குறைவாக இருப்பது படத்திற்கு அயர்ச்சியை கொடுத்திருக்கிறது. ஒரு சிறிய கதையை முழு படமாக எடுக்கும் பட்சத்தில் அதில் திரைக்கதைக்கு பல்வேறு ஸ்கோப்புகள் இல்லாமல் ட்ரை ஆக இருப்பது படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. படத்தில் மொத்தம் நான்கு கதாபாத்திரங்கள் இவர்களை சுற்றி படம் முழுவதும் நகர்கிறது. இதனால் முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாம் பாதியில் சற்றே மிஸ்ஸிங். இருந்தும் கதை சொன்ன விதத்திலும் திரைக்கதை அமைத்த விதத்திலும் ஆங்காங்கே திருப்பங்கள் நிறைந்த காட்சிகள் மூலம் சுவாரசியத்தை கூட்டி இருப்பது படத்தைக்கரை சேர்க்க உதவி இருக்கிறது.

Advertisment

devil tamil movie review

படத்தின் நாயகன் விதார்த் ஒரு யதார்த்த வக்கீலாக நடித்திருக்கிறார். சுபஸ்ரீ இடம் இவர் மாட்டிக் கொண்டு தவிக்கும் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் பூர்ணாவிடம் மண்டியிட்டு அழும் காட்சிகள் நடிப்பில் சிகரம் தொட்டிருக்கிறார். இவருக்கும் சுபஸ்ரீக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. இன்னொரு நாயகன் திரிகுன் சிறப்பான நடிப்பை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் பூர்ணாவுக்கும் ஆன கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. குறிப்பாக நெருக்கமான காட்சிகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகி பூர்ணாவுக்கு நல்ல நடிப்பதற்கான ஸ்கோப் இருக்கும் திரைப்படம். அதை சரியாக பயன்படுத்திக் கொண்டு சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறது. பிரேமில் அழகாக தெரிகிறார், அழகாக நடிக்கிறார், அளவாக பேசி மனதை கொள்ளை அடிக்கிறார். இன்னொரு நாயகி சுபஸ்ரீ கவர்ச்சியில் கலங்கடித்து இருக்கிறார்.

மிஷ்கின் இசையில் பாடல்கள் மெலடி ரகம். பின்னணி இசையில் மிரட்டி இருக்கிறார். இசையமைப்பாளராக அறிமுகமான முதல் படத்தில் பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார். கார்த்திக் முத்துக்குமார் ஒளிப்பதிவில் பூர்ணா திரிகுன் சம்பந்தப்பட்ட காதல் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதே போல் இன்டீரியர் காட்சிகளும் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

Advertisment

நம் மனதில் இருக்கும் நெகட்டிவான எண்ணங்களை ஒரு டெவில் போல் சித்தரித்து காட்டியிருக்கும் இத்திரைப்படம், அதை இன்னும் கூட விறுவிறுப்பாக காட்டி இருக்கலாம்.

டெவில் - பேய் படம் இல்லை!