'காட்மேன்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இணையத் தொடர், தற்போது பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. இந்த இணையத் தொடரை பாபு யோகேஸ்வரன் இயக்க, இளங்கோ தயாரித்துள்ளார். வருகின்ற 12ஆம் தேதி ஜீ நிறுவனத்தின் ஓ.டி.டி. பிளாட்ஃபார்மில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது.
இந்தத் தொடரில் டேனியல் பாலாஜி உள்ளிட்ட சில பிரபலங்களும் நடித்திருக்கின்றனர். அண்மையில் இத்தொடரின் ட்ரைலர் வெளியானது. அதில் குறிப்பிட்ட சமூகத்தையும், மதத்தையும் இழிவுபடுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து இந்தத் தொடரைத் தடை செய்ய வேண்டும், இயக்குனர், தயாரிப்பாளர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகாரளித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்த சென்னை, மத்திய குற்றப்பிரிவு போலீஸாருக்கு காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி, போலீஸார் விசாரணையைத் தொடங்கினர். முதல்கட்டமாக ‘காட்மேன்’ தொடரின் இயக்குனர் பாபு யோகேஸ்வரன், தயாரிப்பாளர் இளங்கோ மீது கலவரத்தை ஏற்படுத்துதல், பகையை ஊக்குவித்தல், வதந்தியைப் பரப்புதல் உட்பட 7 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அவர்கள் நேரில் ஆஜராக சம்மனும் அனுப்பி உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
இதனிடையே இந்தத் தொடரை வெளியிடப்போவதில்லை என்று ஜீ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிஜிட்டல் களத்தில் பொறுப்புள்ள முன்னணி தளமாக ஜீ குழுமம் செயல்படுகிறது. உள்ளடக்கங்களின் சுய தணிக்கைகளில் கடுமையான வழிகாட்டு முறைகளை இந்தத் தளம் பின்பற்றி வருகிறது. இந்த விஷயத்தில் முன்னெச்சரிக்கையாகப் பல அம்சங்களைக் கண்டிப்பாகச் செயல்படுத்தி வருகிறது. முற்றிலுமாகத் தன் பார்வையாளர்களின் நலனுக்காக, ஆன்லைன் உள்ளடக்கங்களின் சுய தணிக்கை சட்டத்தில் முதலில் கையெழுத்திட்டவர்களில் ஜீ குழுமமும் ஒன்று.
எங்கள் சமீபத்திய தமிழ் தொடராக 'காட்மேன்' தொடர்பாக வந்த கருத்துகள் அடிப்படையில் அந்தத் தொடரின் வெளியீட்டை இந்தத் தருணத்தில் நிறுத்தி வைக்க முடிவு செய்துள்ளோம். இந்தத் தொடருக்கோ, தயாரிப்பாளர்களுக்கோ, ஜீ குழுமத்துக்கோ எந்த ஒரு மதத்தின் நம்பிக்கையையோ, சமூகத்தையே, தனி நபரின் நம்பிக்கையையோ காயப்படுத்தும் எண்ணமில்லை. தன் பார்வையாளர்களின் பொழுதுபோக்குக்காகப் பல மொழிகளில் சமூகத்தின் சிறப்பான அம்சங்களைப் பிரதிபலிக்கும் 100க்கும் அதிகமான நிகழ்ச்சிகளை ஜீ குழுமம் வழங்கி வருகிறது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.