Skip to main content

ராசியில்லாத நடிகர் என முத்திரை குத்திய சினிமா... மீண்டு வந்த விக்ரம்!

Published on 15/05/2021 | Edited on 15/05/2021

 

vikram

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நடிகர் விக்ரம் குறித்து அவர் பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...

 

"வாழ்க்கையில் வெற்றிபெறுவது என்பது எளிதானதல்ல. பல போராட்டங்கள், வீழ்ச்சிகள், சோதனைகள் ஆகியவற்றைத் தாண்டித்தான் வெற்றிபெற முடியும். இன்று வெற்றிபெற்றுள்ள மனிதர்கள் அனைவருமே இதைக் கடந்துதான் வெற்றி பெற்றுள்ளார்கள். குறிப்பாக சினிமாத்துறையில் வெற்றி பெற்றவர்கள் அனைவருமே பல தோல்விகளைக் கடந்து வெற்றிபெற்றவர்கள்தான். அவர்கள் வெற்றிபெற்று இன்று உயர்ந்த நிலையில் இருப்பதைத்தான் நாம் பார்க்கிறோம். இந்த வெற்றியை அடைய கடந்து வந்த பாதையில் எவ்வளவு சோதனைகளை சந்தித்தார்கள் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரியும். உதாரணமாக நடிகர் விக்ரம் கடந்துவந்த பாதையை பற்றி உங்களுக்கு கூறுகிறேன். 

 

35 ஆண்டுகளுக்கு முன்பு, வங்கியில் வேலை பார்த்த என் நண்பர் ஒருவர் அவருடன் பணியாற்றும் நண்பர்கள் அனைவரும் இணைந்து ஒரு படம் தயாரிக்க இருப்பதாகக் கூறினார். காமெடியும் காதலும் கலந்த 'the man who quit smoking' என்ற சுவீடன் நாட்டு படத்தைப் போல ஒரு படத்தை எடுக்க திட்டமிட்டிருந்தனர். இப்போது உள்ளதுபோல நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் எல்லாம் அப்போது கிடையாது. அந்த படத்தை பார்ப்பதற்காக பூனாவில் இருந்த ஆவண காப்பகத்திற்கு செல்கின்றனர். அங்கு டீஜே ஜாய் என்று ஒருவர் இன்சார்ஜாக இருந்தார். அவர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது தெரியவந்ததும் தாங்கள் தயாரிக்கும் படத்திற்கு அவரையே இயக்குநராக ஒப்பந்தம் செய்கின்றனர். அப்படி உருவான படம்தான் என் காதல் கண்மணி. அந்த படத்தில் ஹீரோவாக நடிகர் விக்ரமை ஒப்பந்தம் செய்தனர். அந்த சமயத்தில் அவர் சில விளம்பரப்படங்களில் நடித்திருந்தார். நான் அந்தப்படத்தில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்ததால் அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு போவேன். அங்குதான் விக்ரமுடன் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. பாதிப்படம் முடிந்திருந்த நிலையில், ஒருநாள் நிதி பிரச்சனை காரணமாக படம் திடீரென நின்றுவிட்டது. நீண்ட நாட்களாகியும் அந்தப்படம் தொடங்கவேயில்லை.

 

writer sura

 

இந்த இடைப்பட்ட காலத்தில், 'தந்துவிட்டேன் என்னை' என்ற படத்தில் நடிக்க விக்ரமிற்கு வாய்ப்பு கிடைக்கிறது. படத்தில் ஒப்பந்தம் செய்வதற்குமுன், வேறு ஏதாவது படத்தில் நடித்துள்ளீர்களா என விக்ரமிடம் கேட்கின்றனர். ஏற்கனவே நடித்து பாதியில் நின்றுபோன படம் மீண்டும் தொடங்குவதற்கான எந்த அறிகுறியும் தெரியாததால், இதுதான் என்னுடைய முதல்படம் என்று கூறி அந்தப் படத்தில் நடிக்கிறார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு பாதி நிறைவடைந்திருந்த நிலையில், விக்ரம் முதலில் நடித்த படம் விரைவில் வெளியாகும் என பத்திரிகையில் விளம்பரம் வந்திருந்தது. அதை பார்த்த இந்தப்படத்தின் இயக்குநர் ஸ்ரீதர் விக்ரமிடம் அழைத்து விசாரிக்கிறார். விக்ரம் அனைத்தையும் விளக்கிக்கூற, ஒரு படம் தொடங்கி பாதியில் நிற்பதும், பின்னர் மீண்டும் தொடங்குவதும் சகஜம் என்பதை புரிந்துகொண்டு இயக்குநர் ஸ்ரீதரும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. 

 

இருப்பினும், 'தந்துவிட்டேன் என்னை' படம்தான் முதலில் வெளியானது. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு பெறாமல் தோல்வியடைந்தது. அதன் பிறகு, பி.சி.ஸ்ரீராம் எடுத்த மீரா, விக்ரமன் எடுத்த புதிய மன்னர்கள், விக்ரம் நடித்த முதல் படமான என் காதல் கண்மணி என வரிசையாக ஒவ்வொரு படமாக வெளியாகி தோல்வியடைந்தன. ஆரம்பக்காலகட்டங்களில் விக்ரம் கதாநாயகனாக நடித்த எந்தப்படமும் வெற்றிபெறவில்லை. இப்படி பல தோல்விகளுக்கு பிறகு விக்ரம் கமிட்டான படம்தான் சேது. பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய பாலா அந்தப் படத்தை இயக்கினார். அந்த படத்தின் படப்பிடிப்பே ஒரு வருடத்திற்கு மேலாக நடந்தது. வர்த்தக ரீதியாக அவர் படங்கள் பெற்ற தோல்விகள், அது தந்த சோதனைகள், சறுக்கல்கள் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு சேது படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார் விக்ரம். மதுரையைச் சேர்ந்த கந்தசாமி என்பவர்தான் சேது படத்தை தயாரித்திருந்தார்.

 

படம் தயாரான பிறகு வாங்குவதற்கு ஆட்கள் இல்லை. மொத்தம் 65 முறை விநியோகஸ்தர்களுக்கு படம் போட்டு காண்பித்தார்கள். அவர்களுக்கு படத்தின் மீது நம்பிக்கையே வரவில்லை. படம் நல்லாத்தான் இருக்கு... ஆனால், ஒரு வெற்றிப்படம்கூட கொடுக்காத கதாநாயகன் நடித்திருக்கிறாரே... நாங்கள் எப்படி நம்பி வாங்கமுடியும் என்றுள்ளனர். கிட்டத்தட்ட விக்ரமிற்கு ராசியில்லாத நடிகர் என்ற முத்திரை குத்திவிட்டனர். நீண்ட நாட்களாக பொறுத்திருந்து தயாரிப்பாளர், ஒரு கட்டத்தில் நாமே படத்தை வெளியிடுவோம் என்ற முடிவுக்கு வருகிறார். குறிப்பிட்ட அளவிலான திரையரங்கில் மட்டும் சேது வெளியாகிறது. பத்திரிகைகள் எல்லாம் படத்தை கொண்டாடித் தீர்த்துவிட்டன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிஞ்சி மலர் பூப்பது போல இது ஒர் அபூர்வமான திரைப்படம் என பத்திரிகைகள் எழுதியது இன்றும் எனக்கு நினைவில் உள்ளது. இது மாதிரியான விமர்சனங்கள் வெளியானதும் படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது. ஒரு வாரத்திற்கு பிறகு திரையரங்குகள் ஹவுஸ் புல்லாகிவிட்டன. திரையரங்குகள் எண்ணிக்கை அதிகரித்தன. திரையிட்ட எல்லா இடங்களிலும் நூறு நாட்கள் ஓடி சூப்பர் டூப்பர் ஹிட் படமானது சேது. நான் மேலே கூறிய அத்தனை பிரச்சனைகளையும் தாண்டி வந்துதான் விக்ரம் மிகப்பெரிய கதாநாயகனாக வேண்டும் என்பது எழுதப்பட்ட விதி. பின்னர், சாமி, ஜெமினி மாதிரியான வர்த்தக ரீதியான படங்களில் அவர் எப்படி நடித்தார், பிதாமகன், தெய்வத் திருமகன் மாதிரியான வித்தியாசமான படங்களில் அவர் எப்படி நடித்து ஆழமான நடிகராக முத்திரை பதித்தார் என்பதெல்லாம் நாமறிந்ததே".

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வீர தீர சூரனாக மாறிய விக்ரம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vikram 62 title as Veera Dheera Sooran

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. மேலும் சித்தா பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கிறார். இந்தச் சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. 

இதனைத் தொடர்ந்து தற்போது அருண் குமார் படக்குழு தற்போது படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளது. ரியா ஷிபு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். படத்தின் அறிவிப்பு ஒரு ப்ரோமோ வீடியோவுடன் கடந்த அக்டோபரில் வெளியானது. மேலும் துஷாரா விஜயன், எஸ்.ஜே சூர்யா, சுராஜ் வெஞ்சாரமூடு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

இப்படத்திற்கு ‘வீர தீர சூரன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் டைட்டில் டீசர், படத்தின் ஒரு காட்ச்சியை கட் செய்து வைத்துள்ளனர். விக்ரமை கொலை செய்ய ஒரு கும்பல், திட்டமிட்டு அவர் வேலை பார்க்கும் மளிகை கடைக்கு செல்கிறது. ஆனால் அக்கும்பலை விக்ரம் துப்பாக்கியால் தாக்குகிறார். இந்த டீசர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. 

Next Story

சர்ப்ரைஸ் கொடுத்த தங்கலான் படக்குழு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

தமிழ் சினிமா ஹீரோவில், ஹேட்டர்ஸே இல்லாத எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்தமான நடிகராக வலம் வருபவர் விக்ரம். தான் ஏற்றுக்கொண்ட கதாபாத்திரத்திற்கு உயிரூட்டும் வகையில் தனது அர்ப்பணிப்பை கொடுக்கும் முன்னணி நடிகர்களில் இவரும் ஒருவர். முன்னணி நடிகர் என்ற அந்தஸ்து பெற்றாலும் தொடர்ச்சியாக வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகிறார். அவர் நடித்த காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத்திருமகள், ஐ உள்ளிட்ட படங்கள் அவரது அர்ப்பணிப்பிற்கு எடுத்துக்காட்டாக இருக்கின்றன. 

அந்த வரிசையில் தற்போது தங்கலான் படம் உருவாகி வருகிறது. இந்த சூழலில் இன்று பிறந்தநாள் காண்கிறார் விக்ரம். அதனால் ரசிகர்கள் முதல் திரைப் பிரபலங்கள் வரை அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தங்கலான் படக்குழு, விக்ரமிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு ஸ்பெஷல் வீடியோவை சர்பிரைஸாக வெளியிட்டுள்ளது. அதில் அவரது கதாபாத்திரத்திற்காக அவர் தயாராகும் முறையை மற்றும் அவரது அர்ப்பணிப்பை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. இந்த வீடியோ தற்போது படத்திற்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது. 

pa.ranjith Thangalaan Vikram Birthday Tribute Video

இப்படத்தை பா. ரஞ்சித் இயக்கி வரும் நிலையில், விக்ரமோடு பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். கோலார் தங்க வயலை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ள நிலையில் கடந்த ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தினத்தன்று தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் தள்ளி போய் இம்மாதம் வெளியாவதாக பின்பு அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் ரிலீஸ் தேதி அறிவித்தபாடில்லை. இந்த சூழலில் தற்போது வெளியாகியுள்ள ஸ்பெஷல் வீடியோவில் விரைவில் இப்படம் வெளியாகவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே விரைவில் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.