Skip to main content

"எதுக்கு என் படத்தை ஒட்டியிருக்காங்க?"... சிவாஜி பட போஸ்டரைப் பார்த்துக் குழம்பிய காஞ்சி பெரியவர்!

Published on 31/05/2021 | Edited on 31/05/2021

 

writer sura

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூ-ட்யூப் சேனலில் பகிர்ந்துவருகிறார். அந்த வகையில், 'திரைக்குப் பின்னால்' நிகழ்ச்சியில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 'திருவருட்செல்வர்' படம் குறித்துப் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

வாழ்க்கையில் சாதனை படைக்கவேண்டுமென்று பலருக்கும் ஆசை இருக்கும். சாதனை என்றால் என்ன? புதுமையான ஒன்றைச் செய்தால் அது சாதனை. எந்த ஒரு செயலைச் செய்வதாக இருந்தாலும் அதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். அவ்வாறு முழு ஈடுபாட்டுடன் ஒரு செயலைச் செய்யும்போது பெரிய அளவில் முத்திரைப் பதிக்கக்கூடிய செயலாக அது மாறிவிடும். இது அனைத்து துறைகளுக்கும் பொருந்தும். கலைத்துறையில் இருந்து உங்களுக்கு ஓர் உதாரணத்தைக் கூறுகிறேன். 

 

நடிகர் சிவாஜிகணேசன் கதாநாயகனாக நடித்து வெளியான ‘திருவருட்செல்வர்’ என்ற திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட்டது. இன்றும்கூட அந்தத் திரைப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அப்படத்தில் 80 வயது நிரம்பிய அப்பர் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த நேரத்தில் சிவாஜி கணேசனின் வயது நாற்பதுதான் இருக்கும். புராணப் படங்களை இயக்குவதிலும் தயாரிப்பதிலும் மன்னராக இருந்த ஏ.பி. நாகராஜன் அந்தப் படத்தை இயக்கியிருந்தார். படங்களில் நடிக்கிறோம்... கதாநாயகியோடு டூயட் பாடுகிறோம்... சண்டைக் காட்சியில் நடிக்கிறோம் என்றெல்லாம் வெறுமனே இல்லாமல், நடித்த அத்தனை படங்களிலும் கதாபாத்திரமாகவே வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அந்த அளவிற்கு அர்ப்பணிப்புடனும் முழு ஈடுபாட்டுடனும் அவர் இருந்ததினால்தான் காலங்கடந்தும் அவர் படங்கள் பேசப்படுகின்றன. 

 

80 வயதுள்ள அப்பராக நடிக்க வேண்டுமென்றால் முதுகு கூன்விழுந்து, நடக்க தடுமாறுபவராக, முகமெல்லாம் சுருக்கம் உடையவராக நடிக்க வேண்டும். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்றைய காலத்தில் இதைச் செய்வது மிகவும் எளிது. வெளிநாடுகளில் இருந்து மேக்கப் கலைஞர்களை வரவழைத்து நாம் நினைத்தபடி எல்லா சித்து வேலைகளும் செய்ய முடியும். எந்த வசதிகளும் இல்லாத அந்தக் காலத்தில் முதியவராக நடிக்க வேண்டுமானால், அதை தன்னுடைய நடிப்பால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். ‘திருவருட்செல்வர்’ படத்தை இன்று பார்க்கும்போது சிவாஜி கணேசன் அதைச் செய்தது வியப்பாகத் தோன்றும். கூன்விழுந்த வயதான முதியவராக புருவத்துக்கு மேலே கைவைத்துக்கொண்டு சிவாஜி கணேசன் நடித்தது மிக அற்புதமாக இருக்கும். வெயில் அதிகம் இருந்தால் கண் கூசாமல் இருக்க புருவத்திற்கு மேலே கைவைத்துக்கொண்டு நாம் பார்ப்போம். ஆனால், வயது அதிகமான முதியவர்கள் பார்வைத்திறன் குறைவு காரணமாக இயல்பாகவே அவ்வாறுதான் பார்ப்பார்கள். இதை சிவாஜி கணேசன் எங்கோ உற்றுக் கவனித்திருந்தால் மட்டுமே அப்பர் கதாபாத்திரத்தில் அப்படிப்பட்ட ஒரு நடிப்பை வெளிப்படுத்த முடியும். அதற்கான இன்ஸ்பிரேஷன் சிவாஜி கணேசனுக்கு எங்கிருந்து வந்தது?

 

பின்னாட்களில் தூர்தர்ஷன் தொலைக்காட்சியினர் நடிகர் சிவாஜி கணேசனிடம் பேட்டி எடுக்கையில், இதுபற்றி கேட்டனர். அதற்கு அவர், ‘காஞ்சி பெரியவர் என அழைக்கப்படுகிற சந்திரசேகர சரஸ்வதி அவர்கள்தான் இந்தக் கதாபாத்திரத்திற்கு இன்ஸ்பிரேஷன்’ எனக் கூறினார். ஒருமுறை அவரைச் சந்திக்க சங்கர மடத்திற்கு சிவாஜி கணேசன் சென்றுள்ளார். சிவாஜி கணேசன் உள்நுழைகையில், காஞ்சி பெரியவர் சுருங்கிய கண்களுடன் புருவத்திற்கு மேலே கைவைத்துக்கொண்டு சிவாஜி கணேசனைப் பார்த்துள்ளார். அந்தக் காட்சி சிவாஜி கணேசனின் மனதிற்குள் ஆழமாகப் பதிந்துவிட்டது. பின்பு, அப்பர் கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்ற நிலை வந்தபோது அதைப் பயன்படுத்திக்கொண்டார். சிவாஜி கணேசன் வெறும் கலைஞன் மட்டுமல்ல; அவர் ஒரு பிறவிக்கலைஞன்.

 

சில ஆண்டுகள் கழிந்தன. ஒருநாள் வடபழனி கமலா திரையரங்க உரிமையாளர் வி.என். சிதம்பரத்துடன் பேசிக்கொண்டிருந்தேன். அவர் எனக்கு நெருங்கிய நண்பர். சிவாஜி கணேசன் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் பலருடன் அவர் நெருக்கமாக இருந்ததால், சினிமா பற்றி அவரிடம் அதிகம் உரையாடுவேன். அவர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தர்க்கராகவும் எட்டு வருடங்கள் இருந்தார். அன்று பேசிக்கொண்டிருக்கையில், ‘திருவருட்செல்வர்’ படம் பற்றிய ஒரு தகவலை வி.என். சிதம்பரம் எனக்குக் கூறினார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தர்க்கராக இருந்த காரணத்தினால் காஞ்சி பெரியவருக்கும் இவருக்கும் இடையே நல்ல பழக்கம் இருந்தது. ஆன்மிக நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள காஞ்சி பெரியவரை வி.என். சிதம்பரம் காரில் அழைத்துச் செல்கிறார். கார் செங்கல்பட்டு தாண்டி சென்றுகொண்டிருக்கையில் நிறைய போஸ்டர்கள் வழிநெடுக ஒட்டப்பட்டிருந்தன. அதைக் கவனித்துக்கொண்டே வந்த பெரியவர், வழியெங்கும் போஸ்டரில் என்னுடைய படங்கள் இருக்கிறதே... என்ன காரணம் எனக் கேட்டுள்ளார். தூரத்திலிருந்து போஸ்டரிலுள்ள உருவத்தை அவரால் அடையாளங்காண முடிந்தபோதிலும், வயதுமூப்பு காரணமாக அதை தெளிவாகப் பார்க்க முடியவில்லை. உடனே வி.என். சிதம்பரம், ஐயா தப்பா எடுத்துக்காதீங்க... அது உங்க படம் இல்லை. நடிகர் சிவாஜி கணேசனுடைய படம்... ‘திருவருட்செல்வர்’ என்ற படத்தில் அப்பராக அவர் நடித்துள்ளார் என அவரிடம் கூறியுள்ளார். காஞ்சி சங்கராச்சாரியாரைப் பார்த்துத்தான் அப்பர் கதாபாத்திரத்தில் சிவாஜி கணேசன் நடித்தார். சிவாஜி கணேசன் பட போஸ்டரைப் பார்த்து அது நாம்தான் என காஞ்சி சங்கராச்சாரியாரே நினைத்தார் என்றால் அந்தக் கதாபாத்திரத்தில் நடிகர் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்புடன்கூடிய நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என யோசித்துப் பாருங்கள்.

 

 

சார்ந்த செய்திகள்