Skip to main content

பட்டினி கிடந்து நடித்த சிவாஜி... கண் கலங்கிய இயக்குநர்!

Published on 13/09/2021 | Edited on 13/09/2021

 

 

Sivaji Ganesan

 

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான சுரா, தன்னுடைய திரையுலக அனுபவங்களையும், நாம் பார்த்து ரசித்த நடிகர்களின் அறியாத பக்கங்கள் குறித்தும் நக்கீரன் ஸ்டூடியோ யூடியூப் சேனலில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...

 

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் எந்த அளவிற்கு அர்ப்பணிப்பான நடிகர் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. தொழில் பக்தியில் அவருக்கு நிகர் அவர்தான். ஆரம்பக்காலம் தொடங்கி இறுதிக்காலம்வரை தான் செய்த தொழிலை 100 சதவிகித அர்ப்பணிப்புடன் செய்தவர். இதைப் பலர் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; சில பத்திரிகைகளிலும்கூட படித்திருக்கிறேன். ஆனால், இதை நேரடியாகக் காணும் வாய்ப்பு எனக்கு ஒருமுறை கிடைத்தது.

 

ஏறக்குறைய 35 ஆண்டுகளுக்கு முன்னர் கே.எஸ்.கோபாலகிருஷணன் இயக்கத்தில் சிவாஜி நடிப்பில் 'படிக்காத பண்ணையார்' என்ற திரைப்படம் உருவானது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு வாகினி ஸ்டூடியோவில் நடைபெற்றது. 'பணமா பாசமா', 'சித்தி' உள்ளிட்ட பல குடும்பப்படங்களை இயக்கி வெற்றிகண்டவர் இயக்குநர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன். சிவாஜி கணேசனின் நடிப்பை நேரில் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய நீண்டநாள் ஆசை. இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் என்னுடைய நெருங்கிய நண்பர் என்பதால் 'படிக்காத பண்ணையார்' படப்பிடிப்பு தளத்தில் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. சிவாஜி, அனுராதா சம்மந்தப்பட்ட ஒரு பாடல் காட்சியை அன்று படமாக்கிக் கொண்டிருந்தனர். சிவாஜி கணேசனின் எதிரிகள், கவர்ச்சி நடனம் ஆடும் அனுராதா மூலம் ஊரில் கௌரவத்தோடு வாழும் பண்ணையாரான சிவாஜி கணேசனை வீழ்த்தி, அவருடைய பெயரைக் கெடுக்க வேண்டும் எனத் திட்டமிடுகின்றனர். அதற்கான காட்சிகள் அனைத்தையும் ஒரு பாடலாக எடுக்க கே.எஸ்.கோபால கிருஷ்ணன் முடிவெடுத்திருந்தார். பாதி காட்சிகள் படமாக்கப்பட்டிருந்த நிலையில், அனைவரும் மதியவுணவு இடைவேளைக்குச் சென்றிருந்தனர். நான் அந்த நேரத்தில்தான் அங்குச் சென்றேன். 

 

அனைவரும் அங்கே சேர் போட்டு அமர்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். ஆனால், அங்குச் சிவாஜி கணேசன் இல்லை. நான் சுற்றும் முற்றும் பார்த்தேன். அங்கு எங்குமே அவர் இல்லை. நான் அப்படியே ஸ்டூடியோவிற்குள் சென்றேன். எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்டு ஒரு விளக்கு மட்டும் எரிந்துகொண்டிருந்தது. அந்த விளக்கு வெளிச்சத்தின் கீழே இருந்த ஷோபாவில் சிவாஜி கணேசன் அமர்ந்து கொண்டிருந்தார். அந்த அறையில் வேறு யாருமே கிடையாது. நான் அந்த அறைக்குள் நுழைந்த சத்தம் கேட்டவுடன் தூரத்திலிருந்து ஒரு பார்வை பார்த்தார். சிவாஜி கணேசனின் பார்வையைப் படங்களில் கூர்ந்து பார்த்தாலே ஒருவித பயம் வரும். நேரில் பார்த்தவுடன் பயத்தில் அந்த அறையிலிருந்து உடனே வெளியே வந்துவிட்டேன். என்ன சார் எல்லாரும் வெளியே உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க... சிவாஜி கணேசன் மட்டும் உள்ளே தனியா உட்கார்ந்தது இருக்கார் என்று  வெளியே இருந்த கோபாலகிருஷ்ணனிடம் சென்று கேட்டேன். நீங்க எல்லாரும் சாப்பிட்டு வாங்க... எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு உள்ளே சென்று அவர் அமர்ந்திருப்பதாகக் கோபால கிருஷ்ணன் கூறினார். என்ன காரணம் என்று அவரிடம் கேட்டேன். பண்ணையார் கதாபாத்திரத்திற்காக அடர்த்தியான மீசையை அவருக்குப் பசை போட்டு ஒட்டியிருக்கிறோம். அதை எடுத்தால் அவருக்கு எரிச்சலாக இருக்கிறதாம். சாப்பிடுவதற்காக எடுத்தால் பிறகு மறுபடியும் ஒட்ட வேண்டிவரும். அதனால் எனக்குச் சாப்பாடு வேண்டாம். நான் இரவு வீட்டில் சென்று சாப்பிட்டுக்கொள்கிறேன் எனக் கூறிவிட்டார் என கோபாலகிருஷ்ணன் கூறினார்.

 

எனக்குச் சாப்பாடு வேண்டாம் எனக் கூறிவிட்டு பட்டினியோடு இருந்து நடிக்கிறார். என்ன மனுஷன்யா இவர் என்று கோபாலகிருஷ்ணன் கூறும்போதே  கண்கள் கலங்கிவிட்டன. சிவாஜி கணேசன் அர்ப்பணிப்பு பற்றி அதுவரை செவிவழிச் செய்தியாகவும் பத்திரிகைளிலும் படித்த எனக்கு, முதன்முறையாக அந்த அர்ப்பணிப்பைக் கண்கூடாகப் பார்த்தது சிவாஜி கணேசன் மீது மிகப்பெரிய மரியாதையை ஏற்படுத்தியது. காலத்தைக் கடந்தும் திரையுலகில் சிவாஜி கணேசனின் பெயர் சாகாவரம் பெற்று நிலைத்திருக்கிறது என்றால் அதற்கு ஒரே காரணம் சிவாஜி கணேசனின் இந்த அர்ப்பணிப்புதான்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

"என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ, அன்றைக்குத் தான் என் மரணம்" - பாரதிராஜா

Published on 27/03/2023 | Edited on 27/03/2023

 

bharathiraja about muthal mariyaathai movie re release and sivaji

 

இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடிப்பில் 1985 ஆம் ஆண்டு வெளியான படம் 'முதல் மரியாதை'. ராதா, வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படம் ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று கிட்டத்தட்ட 200 நாட்கள் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. மேலும் 33வது தேசிய விருது விழாவில் சிறந்த தமிழ் படத்திற்காக பாரதிராஜாவும் சிறந்த பாடல் வரிகளுக்காக வைரமுத்துவும் விருது வாங்கினர். 

 

இந்த நிலையில் 38 ஆண்டுகள் கழித்து இப்படம் டிஜிட்டல் முறையில் ரீ-மாஸ்டர் செய்யப்பட்டு தற்போது தமிழ்நாட்டில் உள்ள 67 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இதனை முன்னிட்டு திரையரங்கிற்கு சென்ற பாரதிராஜா செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர் பேசுகையில், "சினிமாவில் நுழைந்தவர்கள் எல்லாம் ஜெயித்து விட முடியாது. சினிமா என்பது பெரிய கலை மற்றும் பொக்கிஷம். நான் சிறு குழந்தையாக இருக்கும் போது அண்ணாந்து பார்த்து வியந்து எப்படி நடிக்க வேண்டும் என்று கற்றுக் கொண்டதற்கும், தமிழை எப்படி உச்சரிக்க வேண்டும் எனக் கற்றுக் கொண்டதற்கும் காரணமானவர் ஒரே ஒரு மனிதன் நடிகர் சிவாஜி கணேசன் தான். சிவாஜி இல்லையென்றால் பாரதிராஜா இல்லை. இன்றளவும் என்னை நடிக்க அழைக்கிறார்கள் என்று சொன்னால் சிவாஜி போட்ட பிச்சை. 

 

இப்படத்திற்கு முதல் மரியாதை என தலைப்பு வைக்கப்பட்டது என பலருக்கு சந்தேகம். என் வாழ்க்கையில் சரஸ்வதி, லட்சுமி, முருகன் என யார் யாரையோ கும்பிட்டுள்ளேன். எங்க அப்பா, அம்மாவுக்கும் மரியாதை கொடுத்துள்ளேன். ஆனால் திரையுலகில் நுழைந்து என்னை வாழ வைத்த தெய்வம் சிவாஜி அவருக்கு நன்றி சொல்லும் விதமாக அதை செய்தேன். 50 ஆண்டுகள் கழித்தும் இன்றும் பசுமையாக இருக்கிறது முதல் மரியாதை.

 

இன்றைக்கும் என் முன்னால் நிறைய மைக்குகள் இருக்கின்றன. என்றைக்கு பத்திரிகையாளர்களுடன் தொடர்பில்லாமல் வெட்டப்படுகின்றேனோ அன்றைக்கு தான் என் மரணம். உங்கள் வெளிச்சத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறேன். வாழ்வேன். இன்னும் நீண்ட காலம் வாழ்வேன்" என்றார்.    

 

 

Next Story

"பராசக்தி படத்தைப் பார்த்தபோது அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது" - வெற்றிமாறன்

Published on 26/12/2022 | Edited on 26/12/2022

 

vetrimaaran speech at 70 Years of Parasakthi function

 

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வசனத்தில் சிவாஜி நடிப்பில் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில், 1952 ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் 'பராசக்தி'. இப்படம் வெளியாகி 70 வருடங்கள் நிறைவடைந்த நிலையில், இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் சிறப்பு திரையிடலோடு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  

 

நிகழ்வில் பேசிய வெற்றிமாறன், "நம்ம தமிழ் சினிமா சூழலில் அல்லது தமிழ்நாட்டுச் சூழலில் சமூகம் சார்ந்த திரைப்படங்களை எடுக்க நினைப்பவர்கள், அவர்களுக்கு சிறந்த 5 படங்கள் ஒரு இன்ஸ்பிரேஷனாக இருந்தது எனும் சொல்லும் பட்சத்தில், அதில் பராசக்தி கண்டிப்பா ஒரு படமாக இருக்கும். இப்படத்தைப் பார்த்தபோது அரசியல் அதிகாரம் இல்லாத சமூகநீதி மக்களுக்குப் பெரிய பலனைக் கொடுக்காது என்ற அம்பேத்கரின் கூற்றுதான் தோன்றியது.

 

எல்லா நிலைகளிலும் எளிய மனிதர்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். சமூகச் சூழலில் பார்த்தால் சாதிய அடிமைத்தனம், குடும்பச் சூழலில் பார்த்தால் பெண் அடிமைத்தனம் எனப் பல நிகழ்வுகளை சொல்லலாம். அவை அனைத்தும் இப்படத்தில் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தச் சமூகக் கட்டமைப்பில் ஒரு மாற்றத்தை விரும்பும் இளைஞர்களை ஒன்று சேர்ப்பதற்கான தொடக்க சினிமாவாக இப்படம் இருந்தது. அப்படி ஒரு முக்கியமான படம் பராசக்தி. 

 

இன்றளவும் இப்படம் பொருந்திப் போகுது. அதே சூழலில் நாம் வாழ்ந்து வருகிறோம். அவை அனைத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்க வேண்டும். ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என நிறைய விஷயங்கள் இருக்கு. இப்படம் இன்னும் 30 வருடம் 50 வருடம் கழித்தும் தொடர்புடையதாக இருக்கும். இப்படத்திலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கு. 70 வருடம் கழித்து அதைக் கொண்டாட வேண்டிய இடத்தில் இருக்கோம் என்பது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார்.