ஒரு வெற்றிகரமான நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து நடிப்பிலும் களம் கண்டுள்ள விஜே ஆஷிக் ஹுசைன் ‘Shoot the குருவி’ படத்தில் நடித்துள்ளார். அவருடன் ஒரு ஜாலியான நேர்காணல் நக்கீரன் ஸ்டூடியோ சார்பாக எடுக்கப்பட்டது. அதில் அவர் பேசியவை பின்வருமாறு...
இத்தனை நாள் தொகுப்பாளர் அனுபவத்தில் 150 நடிகைகளின் நம்பராவது வைத்திருப்பேன் என்று நினைக்கிறேன். முதன் முதலில் நடிப்பதற்கு வாய்ப்பு வந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் திரையில் ஒரு தொகுப்பாளராக இருப்பதற்கும் நடிகராக இருப்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. எனவே நடிப்பதை முடிந்த அளவுக்குத் தவிர்த்தே வந்தேன். இதற்காக ஷூட்டிங்குக்கு போகாமல் லீவு எல்லாம் போட்டேன். அதன் பிறகு என்னை நடிப்பதற்கு அழைப்பதையே நிறுத்தினார்கள். அதன் பிறகுதான் நடிப்பு குறித்து கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிந்துகொள்ளத் தொடங்கினேன்.
இந்தப் படத்தின் ட்ரைலர் அனைத்து இடங்களுக்கும் நல்ல ரீச் ஆகியுள்ளது. குறிப்பாகத் திரையுலகிலிருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், சிவகார்த்திகேயன் சார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் என்று சினிமா உலகில் பலரும் இந்த ட்ரைலரைப் பார்த்துப் பாராட்டியுள்ளனர். சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் படத்தில் கொங்கு வட்டார வழக்கில் பேசி நடித்துள்ளேன். கொங்குத் தமிழ் வித்தியாசமானது. அதைக் கற்றுக்கொண்டு பேசி நடித்தது நல்ல அனுபவம்.
தலைவர் ரஜினி அழைத்தபோது நான் வெளியூரில் இருந்தேன். அதனால் என்னால் படக்குழுவோடு அவரைப் பார்க்கச் செல்ல முடியவில்லை. வருத்தமாக இருந்தது. ஆனால் நான் இருக்கும் படத்தின் ட்ரைலரை அவர் பார்த்துவிட்டார் என்று நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.