Skip to main content

மோடியை புகழ்ந்த விஷால்; ‘நடிச்சது போதும்...’ தக் லைஃப் செய்த பிரகாஷ் ராஜ்

Published on 03/11/2022 | Edited on 03/11/2022

 

Vishal praised Modi - prakash reply goes viral on internet

 

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால் அறிமுக இயக்குநர் வினோத் குமார் இயக்கும் 'லத்தி' படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் 'மார்க் ஆண்டனி' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. 

 

ad

 

இதனிடையே காசிக்குச் சென்றிருந்த விஷால் பிரதமர் மோடியைப் பாராட்டி அவருக்கு நன்றி தெரிவித்திருந்தார். இது தொடர்பாக விஷால், "அன்புள்ள மோடி ஜி, காசிக்கு சென்றிருந்த நான் அங்கு நல்ல தரிசனம் செய்தேன். கூடவே, கங்கை நதியின் புனித நீரைத் தொட்டேன். காசி கோவிலைப் புதுப்பித்து அதை இன்னும் அற்புதமாகவும் எல்லோரும் எளிதாக தரிசனம் செய்யும் வகையிலும் மாற்றம் செய்திருப்பதற்காக உங்களைக் கடவுள் ஆசீர்வதிப்பாராக. சல்யூட்." எனக் குறிப்பிட்டிருந்தார். விஷாலின் இந்த பாராட்டிற்கு மோடியும், "காசியில் உங்களுக்கு ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்ததில் மகிழ்ச்சி" எனப் பதில் ட்வீட் செய்திருந்தார். 

 

இந்நிலையில் விஷாலின் அந்த பதிவை நடிகர் பிரகாஷ்ராஜ் ரீ-ட்வீட் செய்துள்ளார். படப்பிடிப்பு தளத்தில் ஒரு காட்சி படமாக்கப்பட்டு முடிந்த பிறகு 'நடிச்சது போதும்..அடுத்த காட்சிக்கு ரெடி பண்ணுங்க' என்று ஒரு இயக்குநர் சொல்வது போல, "ஷாட் ஓகே..அடுத்து" எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் கிண்டலாக பதிலளித்துள்ளார். இந்த பதிவு தற்போது பலரது கவனத்தைப் பெற்று வருகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காலரைப் பிடித்து கேட்க வேண்டும்” - கிஷோர் கடும் விமர்சனம் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
kishore against pm modi speech regards mutton in sawan

18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு தங்களது வேட்பாளர்களுடன் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

அந்த வகையில் பிரதமர் மோடி, கடந்த 12ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் உதம்பூரில் தேர்தல் பேரணியில், இந்தியா கூட்டணி தலைவர்கள், ஆட்டிறைச்சி சாப்பிட்டதன் மூலம் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளை புண்படுத்தி உள்ளதாக குற்றம் சாட்டினார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோரின் பெயரை குறிப்பிடாமல் முகலாயர்களுடன் ஒப்பிட்டு பேசிய பிரதமர் மோடி, “நாட்டின் பெரும்பான்மையான மக்களின் உணர்வுகளைப் பற்றி காங்கிரஸ் மற்றும் இந்திய கூட்டணி மக்கள் கவலைப்படுவதில்லை. மக்களின் உணர்வுகளுடன் விளையாடி மகிழ்கிறார்கள்.

நீதிமன்றத்தால் தண்டனை பெற்று ஜாமீனில் இருக்கும் ஒருவர், அப்படிப்பட்ட குற்றவாளியின் வீட்டுக்குச் சென்று, சாவான் மாதத்தில் ஆட்டிறைச்சி சமைத்து மகிழ்ந்து, நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய வீடியோ எடுக்கிறார்கள். சட்டம் யாரையும் எதையும் சாப்பிடுவதைத் தடுக்கவில்லை ஆனால் இவர்களின் எண்ணம் வேறு. முகலாயர்கள் இங்கு தாக்கிய போது, கோயில்களை இடிக்கும் வரை அவர்களுக்கு திருப்தி ஏற்படவில்லை. அதனால் முகலாயர்களைப் போலவே சாவான் மாத வீடியோவைக் காட்டி நாட்டு மக்களைக் கிண்டல் செய்ய நினைக்கிறார்கள்” என்றார். கடந்த ஆண்டு செப்டம்பர் ராகுல் காந்தியும் லாலு பிரசாத் யாதவும் ஒன்றாக ஆட்டிறைச்சி சமைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் பிரதமரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் கிஷோர் பதிவிட்டுள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “ரஃபேல் முதல் தேர்தல் பத்திரம் வரை, மோடியும் அவரது கட்சியினரும், நம்முடைய பணத்தில் சாப்பிட்டுவிட்டு, யாரோ சாப்பிட்ட இறைச்சி குறித்து கேள்வி கேட்கின்றனர். மதவெறியையும், வெறுப்பையும் மட்டுமே பரப்பி, தேர்தல் நடத்தை விதிகளை மீண்டும் மீறியுள்ளனர். தேர்தலில் போட்டியிட அவருக்கும் அவரது கட்சிக்கும் என்ன தகுதி இருக்கிறது?

முதுகெலும்பில்லாத தேர்தல் கமிஷன், கைப்பாவை அமலாக்கத்துறை, சி.பி.ஐ., ஐ.டி அவருக்கு ஆதரவாக இருக்கின்றன. அவரின் காலரைப் பிடித்து நாம் கேட்காத வரை, அவர் எளிதில் மதவெறியையும், வெறுப்பையும் பரப்புவார்” என கடுமையாக விமர்சித்துள்ளார். ஏற்கெனவே விவசாயிகளின் போராட்டத்தின் போது, அவர்களுக்கு ஆதரவாக கிஷோர் குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

Next Story

“சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம்” - முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆவேசம்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இத்தகைய சூழலில் தனியார் ஆங்கில நாளிதழில் நாடாளுமன்ற மக்களவை தொகுதிகள் மறுவரையறை செய்வது குறித்து கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் மக்களவை தொகுதியில் மாநிலங்களுக்கான தற்போதைய தொகுதிக்கான இடங்கள் கடந்த 1971 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் உள்ளது. வரும் 2026 ஆம் ஆண்டுக்கான மக்கள்தொகையின் அடிப்படையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட்டால், சில மாநிலங்கள் கூடுதல் இடங்களைப் பெறவும், சில மாநிலங்கள் தற்போது இருக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை விட குறையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கட்டுரையை சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “பாஜக ஏன் வரவே கூடாது?. தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்கும் மோடியின் அப்பட்டமான சதித்திட்டம். இப்போது விழித்திருக்காவிட்டால் எப்போதும் விடியல் இல்லை. பா.ஜ.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டுக்கு ஏற்படப் போகிற பாரதூரமான பாதகம் – தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் இந்தியாவின் நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்துவது. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாடு உட்பட மக்கள் தொகையைச் சிறப்பாகக் கட்டுப்படுத்திய மாநிலங்களைத் தண்டிப்பதற்கு போடப்பட்டிருக்கிற அச்சாரம். புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் 888 பேர் அமரக்கூடிய வகையில் மக்களவை இருக்கைகள் போடப்பட்டிருப்பது நம் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கிற கத்தி. மக்கள்தொகை கட்டுப்பாட்டைச் சிறப்பாகக் கடைப்பிடித்துள்ள மாநிலங்களுக்குத் தண்டனையும் - கடைப்பிடிக்காத மாநிலங்களுக்கு இரு மடங்காக தொகுதிகளை உயர்த்துவதும் என்ன நியாயம்?. சிறப்பாகச் செயல்பட்டதற்காக நம்மை தண்டிப்பது ஜனநாயகத்துக்கு ஆபத்து இல்லையா!?. 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

தமிழ்நாட்டின் கோரிக்கைகளை, உரிமைக்குரலை இப்போதே மோடி அரசு மதிப்பதில்லை. அடிப்படை உரிமைகளுக்காகக்கூட உச்ச நீதிமன்றத்தை ஒவ்வொரு முறையும் நாடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம். இதில், மக்களவையில் நமது பிரதிநிதித்துவம் மேலும் குறைந்தால், தமிழர்களை பா.ஜ.க. அரசு செல்லாக் காசாக்கி விடும்!. வரிப்பகிர்வில் ஏற்கெனவே பாரபட்சமான அநீதியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். அரசியல் உரிமைகளைப் பறித்து, தமிழ்நாட்டின் அறிவார்ந்த குரலை ஒடுக்கி, இரண்டாம் தரக் குடிமக்களாக்கும் சர்வாதிகார மோடி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். மோடியின் பா.ஜ.க.வுக்கு வாக்களிப்பதற்கும், எடப்பாடி பழனிசாமியின் அ.தி.மு.க.வுக்கு வாக்களிப்பதற்கும் வித்தியாசம் ஒன்றும் இல்லை. ஒருவரும் வெற்றிபெற மாட்டார்கள். 

We will put an end to the dictatorial Modi regime CM MK Stalin

மக்களவையில் தமிழ்நாட்டின் பலத்தைக் குறைக்க மாட்டேன் எனத் தேர்தலுக்காகப் பொய்யாகக் கூட மோடி வாக்குறுதி கொடுக்க மாட்டார். இத்தனை வெளிப்படையாகத் தமிழ்நாட்டை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வையும், அவர்களின் மறைமுகக் கூட்டாளிகளான அ.தி.மு.க.வையும் புறக்கணிப்போம்!. பாசிசத்தை வீழ்த்த - ஜனநாயகத்தையும் தமிழ்நாட்டையும் காக்க இந்தியா கூட்டணிக்கு வாக்களியுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.