Skip to main content

“அவதூறு பரப்புகின்றனர், பட வாய்ப்புகளை தடுக்கின்றனர்” - விஷால் குற்றச்சாட்டு

Published on 19/01/2024 | Edited on 19/01/2024
vishal lyca case update

நடிகர் விஷால் நடிப்பது மட்டுமின்றி 'விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் சார்பாக 'கோபுரம் ஃபிலிம்ஸ்' அன்புச்செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றிருந்தார். பின்பு இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக்கொண்டு செலுத்தியது. இது தொடர்பாக லைகா நிறுவனம் விஷாலிடம் மேற்கொண்ட ஒப்பந்தத்தில், கடன் தொகையை முழுமையாகத் திருப்பிச் செலுத்தும் வரை விஷால் தயாரிக்கும் அனைத்து படங்களின் உரிமையும் லைகா நிறுவனத்திற்கு வழங்கப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டிருந்தது.

ஆனால் விஷால், கடன் தொகையைச் செலுத்தாமல் 'வீரமே வாகை சூடும்' படத்தை தமிழ் உள்ளிட்ட மற்ற மொழிகளில் வெளியிடும் பணிகளை மேற்கொண்டதாகவும், அந்தப் படத்தை வெளியிடவும், சாட்டிலைட், ஓடிடி ஆகியவற்றின் உரிமைகளுக்குத் தடை விதிக்கக் கோரியும் உயர்நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அதில் தங்களுக்கு செலுத்த வேண்டிய கடனை திரும்பச் செலுத்த விஷாலுக்கு உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ரூ. 21.29 கோடியில் ரூ. 15 கோடியை உயர் நீதிமன்றத்தில் விஷால் டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்தத் தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்தார் விஷால். 

இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். இதையடுத்து பல கட்டங்களாக இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, விஷால் தரப்பு, கடனை திரும்ப செலுத்தவில்லை என விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் அவதூறு பரப்புகிறது. விஷாலுக்கான பட வாய்ப்புகளை தடுக்க நினைக்கிறது. லைகா நிறுவனத்தை தவிர வேற எந்த நிறுவனத்திடமும் கடன் நிலுவையில் இல்லை. விஷாலுக்கும் லைகா நிறுவனத்துக்கும் இடையே நடந்த பண பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய வேண்டும். அதற்காக கணக்கு தணிக்கையாளரை நீதிமன்றம் நியமிக்க வேண்டும் என தெரிவித்தது. இதையடுத்து விஷால் தரப்பு கோரிக்கை குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் அடுத்த விசாரணையை வருகிற 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. 

சார்ந்த செய்திகள்

Next Story

பாடகி சுசித்ரா பேசத் தடை - நீதிமன்றம் அதிரடி

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
suchithra karthik kumar issue case

பிரபல வானொலி தொகுப்பாளினியாகவும் பின்னணி பாடகியாகவும் வலம் வந்தவர் சுசித்ரா. இவர் துணை நடிகர் கார்த்திக் குமாரை 2005ஆம் ஆண்டு, திருமணம் செய்துக் கொண்டார். பின்பு கருத்து வேறுபாடு காரணமாக 2017ஆம் ஆண்டு பிரிந்தார். அதே ஆண்டு இவரது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் கோலிவுட் நடிகர்கள் பார்டி செய்யும் புகைப்படங்கள் வெளியானது. இது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பின்பு அதற்கும் தனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை எனச் சுசித்ரா தெரிவித்திருந்தார். 

இதைத் தொடர்ந்து அவ்வப்போது நேர்காணலில் பல்வேறு அதிர்ச்சிக்குள்ளான தகவல்களைப் பகிர்ந்து வந்திருந்தார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில், தனது முன்னாள் கணவர் கார்த்திக் ஒரு ஒரினச்சேர்க்கையாளர் எனக் கூறியிருந்தார். இது பரபரப்பை உண்டாக்க, தான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதைச் சொல்வதில் எந்தத் தயக்கமும் படமாட்டேன் எனக் கார்த்திக் குமார் தெரிவித்திருந்தார். 

suchithra karthik kumar issue case

இதையடுத்து கர்த்திக் குமார் சுசித்ராவிடம் பேசும் ஒரு ஆடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதில் பட்டியலின பெண்கள் குறித்து சர்ச்சையாக அவர் பேசியது போல் இடம் பெற்றிருந்தது. இதற்குப் பலரும் கண்டனம் தெரிவிக்க அந்த ஆடியோ, தான் பேசியதில்லை எனக் கார்த்திக் தெரிவித்திருந்தார். இதனிடையே அவர் மீது அம்பேத்கர் மக்கள் இயக்க தலைவர் இளமுருகு முத்து தேசிய பட்டியலின ஆணையத்திடம் புகார் தெரிவித்திருந்தார். அதனடிப்படையில், தேசிய பட்டியலின ஆணை இயக்குநர் ரவிவர்மன் உடனடியாக நடவடிக்கை எடுத்து சைபர் கிரைம் ஏ.டி.ஜி.பி.க்கு, 15 நாட்களுக்குள் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனக் கடிதம் மூலம் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் குமார், ஆடியோ விவகாரம் தொடர்பாக மயிலாப்பூர் துணை ஆணையரிடம் புகார் மனு அளித்தார். மேலும் சுசித்ராவிற்கு தன்னைப் பற்றி பொய்யான கருத்து கூறியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினார். 

இதையடுத்து சுசித்ரா அளித்த பேட்டி, தன் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் மானநஷ்ட ஈடு வழங்க கோரியும் கார்த்திக் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும் தன்னை பற்றியும், தன்னுடைய குடும்பத்தினர் பற்றியும் அவதூறான கருத்துக்களைத் தெரிவிக்க பாடகி சுசித்ராவிற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த மனு விசாரணைக்கு வந்துள்ளது. மனுவை விசாரித்த நீதிமன்றம், கார்த்திக் குமார் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவிக்க சுசித்ராவிற்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. 

Next Story

பிரபல இயக்குநருடன் மீண்டும் கூட்டணி வைக்கும் விஷால் 

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
vishal next to team again with muthaiya

விஷால் கடைசியாக ஹரி இயக்கத்தில் ரத்னம் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர், கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்த படம் கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியானது. பட புரொமோஷனில் படக்குழு தீவிரமாக நடைபெற்றது. இயக்குநர் ஹரி கடை வீதிகளில் ஒவ்வொரு கடையாக சென்று தேர்தலுக்கு வாக்கு சேகரிப்பது போல புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டார். 

ஆனால் இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. கலவையான விமரசனத்தையே பெற்றது. இந்த நிலையில் விஷால் தற்போது அவர் இயக்குநராக அறிமுகமாகவுள்ள துப்பறிவாளன் பட பணிகளை கவனித்து வருகிறார். இதற்காக லண்டனில், அஜர்பைஜான் உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றதாக தெரிவித்திருந்தார். முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

vishal next to team again with muthaiya

இந்த நிலையில் விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே விஷாலை வைத்து மருது படத்தை இயக்கிய முத்தையா இயக்கத்தில் மீண்டும் விஷால் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஃபை ஸ்டார் கிரியேஷன் சார்பில் தயாரிப்பாளர் கதிரேசன் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இயக்குநர் முத்தையா, கடைசியாக ஆர்யாவை வைத்து 'காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்' படத்தை இயக்கியிருந்தார். இப்போது அவரது மகன் விஜய் முத்தையாவை கதாநாயகனாக படம் எடுத்து வருகிறார். மொத்த படப்பிடிப்பும் முடிந்துள்ளதாக கூறப்படும் நிலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.