விஷால், எஸ்.ஜே. சூர்யா, ரித்து வர்மா உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மார்க் ஆண்டனி' படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று (15.09.2023) வெளியானது. வினோத் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தை எஸ்.ஜே. சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழு முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்களுடன் திரையரங்கில் வந்து பார்த்து ரசித்தனர். படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. குறிப்பாக எஸ்.ஜே. சூர்யா நடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர். இதையடுத்து எஸ்.ஜே. சூர்யா அவரது எக்ஸ் தள பதிவின் மூலம் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.
இதையடுத்து தற்போது படத்தின் வரவேற்புக்கு விஷால் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தள பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "இந்த பதிவு நான் செய்ய வேண்டிய கடமை. பார்த்துகிட்டு இருக்கிற தெய்வங்கள், மேலே இருக்கிற தெய்வங்கள், இவர்களுடைய ஆசீர்வாதம் இல்லாமல் எந்த படமும் ஜெயிச்சது கிடையாது. மார்க் ஆண்டனி, பெரிய வெற்றி பெற்றதற்கு ரொம்ப சந்தோசமாக இருக்குது. என்னை மட்டுமல்லாமல் எஸ்.ஜே சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் மற்ற நடிகர்கள் அனைவருக்கும் பாராட்டு வருவது மகிழ்ச்சி. நீங்க கொடுத்த காசுக்கு ரொம்ப சதோஷப்படுறீங்க என்று நம்புகிறேன்.
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா என எல்லா இடங்களிலும் ரொம்ப நல்ல வரவேற்பு. வசூல் ரீதியாக மட்டுமில்லாமல் மனதார பாராட்டியிருக்காங்க. இதை மனசில் வச்சுக்கிட்டு கண்டிப்பா அடுத்தடுத்து நல்ல நல்ல படங்கள் கொண்டு வருவேன். இந்த படத்துக்கு ஊக்கம் கொடுத்த என்னுடைய நண்பர்கள் கார்த்தி, வெங்கட் பிரபு, கார்த்திக் சுப்புராஜ் எல்லாருக்கும் நன்றி. யாரையாவது மிஸ் பண்ணியிருந்தா மன்னிகிச்சுக்கங்க. எல்லாரும் பாராட்டியதை காது பட கேக்கும் போது மனதுக்கு நிறைவா இருக்கு. ஒன்ரறை வருஷம் உழைச்ச உழைப்புக்கு பலன் கிடைச்சிருக்கு. கண்டிப்பா இன்னைக்கு நிம்மதியா தூங்குவேன். நான் முன்பே சொன்னது போல, ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாயை விவசாயிகளுக்கு கொடுக்க கடமைப்பட்டுள்ளேன்" என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
Thank You Very Much Everyone, God Bless pic.twitter.com/LnXb76qcSI— Vishal (@VishalKOfficial) September 16, 2023