மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் உள்ளிட்ட பல்வேறு முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள பொன்னியின் செல்வன் படம் வருகிற 30 ஆம் தேதி திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இதனையொட்டி தீவிரமாக ப்ரோமோஷன் பணிகளில் படக்குழு முழு வீச்சில் ஈடுபட்டு வந்தது. சென்னை, பெங்களூரு டெல்லி ஹைதராபாத் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளை நடத்தி முடித்துவிட்டுப் மீண்டும் சென்னை திரும்பிய படக்குழு இன்று மீண்டும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியது.
அதில் பேசிய விக்ரம், "பொன்னியின் செல்வன் படத்திற்கு தமிழகத்தை போலவே இந்தியாவின் மற்ற மாநிலங்களில் பெரும் வரவேற்பு இருக்கிறது. நம்முடைய சோழர்களை பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள். அது தொடர்பான கேள்விகள் நிறைய கேட்கிறார்கள். படம் வெளியாவதற்கு முன்பே பாசிட்டிவாக வரும் விமர்சனங்களை பார்த்து சந்தோசமாக இருந்தாலும், அதே சமயத்தில் கொஞ்சம் பயமாகவும் உள்ளது. இந்த நேரத்தில் திரையரங்கு உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோளை வைக்கிறேன். பொன்னியின் செல்வன் படத்தை மூன்று தலைமுறையினரும் பார்க்க திரையரங்கிற்கு வருவார்கள். அதிலும் வயதானவர்கள் இந்த அப்படத்தை அதிகம் பார்க்க வருவார்கள். அதனால் அவர்களுக்கு ஏற்ற உதவிகளை செய்யுங்கள், அவர்களுக்கு எந்த தொந்தரவும் இல்லாமல் படத்தை பார்ப்பதற்கு உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனென்றால் நானும் என் அம்மாவுடன் தான் படத்தை பார்க்க திரையரங்கிற்கு வரப் போகிறேன்" என தெரிவித்துள்ளார்.