/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/213_20.jpg)
நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சூழலில் நுரையீரல் பாதிப்புக்காக கடந்த வாரம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
விஜயகாந்த் உடல்நிலை குறித்து கடந்த 29 ஆம் தேதி மருத்துவ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், அவரது உடல் சீராக இல்லை எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் தமிழக அரசியல் களமும் பரபரப்படைந்தது. அவரது ரசிகர்களும் தேமுதிக கட்சித் தொண்டர்களும் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர் பூரண குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர். இதனிடையே வீடியோ வெளியிட்ட பிரேமலதா, விஜயகாந்துக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் நலமுடன் வீடு திரும்புவார் எனவும் பேசியிருந்தார். இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்க தலைவர், ஃபெப்சி தலைவர், தயாரிப்பாளர் சங்க தலைவர் என பல்வேறு திரையுலகினர் மருத்துவமனைக்கு சென்று பார்த்தனர். பின்பு “விஜயகாந்த் நன்றாக இருப்பதாகவும் கண்டிப்பாக திரும்ப வருவார் எனவும் செய்தியாளர்களிடம் கூறினர்.
இந்த நிலையில் விஜயகாந்த்திற்கு உறுப்பு தேவைப்பட்டால் நான் தர தயாராக இருக்கிறேன் என ஒரு தேமுதிக தொண்டர் வீடியோ வெளியிட்டுள்ளது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர் பேசியது, “விஜயகாந்திற்கு உடல்நிலை சரியில்லை என நியூஸில் பார்த்தேன். நான் குவைத் நாட்டில் இருக்கிறேன். தலைவருக்கு நுரையீரல் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருக்க வேண்டுமென சொல்லியிருக்காங்க. என் தலைவனுக்கு கிட்னி, கல்லீரல், நுரையீரல் என எந்த உறுப்புகள் தேவைப்பட்டாலும் நான் தர தயாராக இருக்கிறேன். நான் அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் உஞ்சினி கிராமத்தை சேர்ந்தவன். இப்போது குவைத்தில் வேலை பார்த்து வருகிறேன். உடனடியாக தேவைப்பட்டால் உடனே நான் அங்கு புறப்பட்டு வருகிறேன். மனப்பூர்வமாக தருகிறேன். இதை என்னுடைய முழு சம்மதத்தோடு சொல்கிறேன். இதை பிரேமலதாவிற்கு தெரியப்படுத்துங்கள். வாழ்க தேமுதிக” என கண்கலங்கிய படியே பேசியுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)