Skip to main content

"தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு" - நடிகர் பாண்டு குறித்து விஜய் வசந்த் உருக்கம்

Published on 06/05/2021 | Edited on 07/05/2021

 

ugfugfug

 

பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டுவுக்கு கரோனா மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டதில், அவருக்கு கரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து, அவர் சென்னை கிண்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில், இன்று (06/05/2021) சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார், அவருக்கு வயது 74. 

 

பாண்டுவின் இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் எம்.பியுமான விஜய் வசந்த் இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அதில், "இழப்புகள் நேரிடும் தமிழ்த் திரை உலகத்திற்கு மற்றுமொரு இழப்பு. நம்மை என்றும் சிரிக்க வைத்த நடிகர் பாண்டு அவர்கள் இன்று நம்மைக் கலங்க வைத்துள்ளார். அவரது இழப்பால் துயரில் வாடும் குடும்பத்திற்கும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்" எனப் பதிவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஏன் அவரது படம் மட்டும் சர்ச்சைக்கு ஆளாகிறது என்று தெரியவில்லை” - எம்.பி. விஜய் வசந்த் பேட்டி

Published on 07/07/2023 | Edited on 07/07/2023

 

 'I don't know why only his film is facing controversy'-M.P. Interview with Vijay Vasant

 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலி கான், பிரியா ஆனந்த், இயக்குநர்கள் மிஷ்கின், கௌதம் மேனன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடிக்கின்றனர். இப்படம் வருகிற அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

 

விஜய்யின் பிறந்தநாளான கடந்த 22 ஆம் தேதி, இப்படத்தின் முதல் பாடலான ‘நா ரெடி’ பாடலின் லிரிக் வீடியோ வெளியானது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற இப்பாடல் சில விமர்சனத்தையும் எதிர்கொண்டது. பாடல் முழுவதும் விஜய் புகைபிடித்துக் கொண்டே நடனமாடியது மற்றும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருந்ததாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் இருந்தது. இதனைக் கண்டித்து பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்கப்பட்டது. இது பரபரப்பை கிளப்பிய நிலையில், எதிர்ப்புகளின் எதிரொலியாக 'புகைப் பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும்; உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகத்தை இணைத்தது படக்குழு.

 

தொடர்ந்து இப்பாடலுக்கு எதிராக டி.ஜி.பி அலுவலகத்தில் அனைத்து மக்கள் அரசியல் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா புகார் மனு கொடுத்துள்ளார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "விஜய்க்கு 2 வயது உள்ள சிறு குழந்தைகளும் ரசிகர்களாக இருக்கிறார்கள். அதனால் கூடுதலான தாய்மை உணர்வு எனக்கு இருக்கத்தான் செய்யும். விஜய் சிகரெட் பிடிப்பதை 3 வயது சிறுவன் பார்க்கும் போது தானும் பெரிய ஆளாகி அவரை போல் சிகரெட் பிடிக்க நினைத்தால் யாராவது தடுக்க முடியுமா? என ஆவேசமாகப் பேசியிருந்தார்.

 

இந்த நிலையில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் செய்தியாளர்களிடம் பேசுகையில், ''லியோ படத்தின் முதல் வீடியோ வந்தது. அது பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்தது. ஆனால் பல மில்லியன் வியூவ்ஸை தாண்டி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மீண்டும் அவர் நடித்த காட்சிகளை வைத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று ஒரு புகாரை கொடுத்துள்ளார்கள். எனக்கு புரியவில்லை என்ன காரணத்தை வைத்து அப்படி சொல்கிறார்கள் என்று. எல்லோரும் ஒரு அரசியல் நோக்கத்தோடு அல்லது விளம்பர நோக்கத்தோடு செயல்படுகிறார்கள். விஜய் படங்களுக்கு மட்டும் ஏன் இப்படி வருகிறது. அவர் அரசியலுக்கு வரலாம் என்று இருப்பதால் திசை திருப்ப பயன்படுத்துகிறார்களா என்று தெரியவில்லை. மெர்சலில் இருந்து தொடர்ந்து விஜய் படங்கள் ஏதாவது ஒரு சர்ச்சைக்கு ஆளாகிறது. கண்டிப்பாக திரைப்படத்தை திரைப்படமாக பாருங்கள் என்பது தான் என்னுடைய கோரிக்கை'' என்றார்.

 

 

Next Story

“விஜய் உடன் கூட்டணி வைக்கத் தயார்” - காங்கிரஸ் எம்.பி

Published on 20/06/2023 | Edited on 20/06/2023

 

Congress MP Vijay Vasanth has said that he is ready to form an alliance with Vijay

 

விஜய், நடிப்பதைத் தாண்டி தனது விஜய் மக்கள் இயக்கம் மூலமாகப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். அவ்வப்போது அரசியலிலும் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த சனிக்கிழமை தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைக் கௌரவிக்கும் வகையில் அவர்களை நேரில் சந்தித்து ஊக்கத் தொகையும் சான்றிதழ்களும் வழங்கினார்.

 

கல்வி விருது விழா என்ற பெயரில் நடைபெற்ற இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், மாணவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளைக் கூறினார். அப்போது, மாணவர்கள் பாடப்புத்தகங்களைத் தாண்டி நிறையப் படிக்க வேண்டும். முடிந்த வரைக்கும் எல்லா தலைவர்களையும் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள். குறிப்பாக அம்பேத்கர், பெரியார், காமராஜர் உள்ளிட்ட தலைவர்களைப் பற்றிப் படியுங்கள் என்று கூறியிருந்தார். இது அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் விழாவில் இன்றைய மாணவர்கள்தான் நாளைய வாக்காளர் என்று விஜய் பேசியிருந்தது அரசியல் காரணத்திற்காகத்தான் இந்த விழா நடத்தப்பட்டது என்று பலரும் கூறி வருகின்றனர். 

 

இந்த நிலையில் விஜய் உடன் கூட்டணி வைக்கத் தயார் என்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி விஜய் வசந்த் கூறியுள்ளார். செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதுபற்றி கூறும்போது, “விஜய் தற்போதுதான் தனது முதல் புள்ளியை தொடங்கியிருக்கிறார். மாணவர்களின் கல்விக்கு உதவி செய்கிறார். விஜய் முன்பிருந்தே அரசியலில் ஆர்வம் காட்டி வருகிறார். ஆனால் தற்போதுதான் அதனை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளார். வரும் காலங்களில்தான் இதைப் பற்றி சொல்ல முடியும்” என்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யுடன் திமுக, காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு பதிலளித்த விஜய் வசந்த், “அதைப் பற்றி எல்லாம் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுதான். அவர் அப்படி வருவதாக இருந்தால் விஜய் உடன் கூட்டணி வைக்கத் தயாராக இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார்.