
விஜய்யின் மக்கள் இயக்கம், சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் தொடர்ந்து இயக்கத்தில் உள்ள பல்வேறு அணிகளை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகிறது. அந்த வகையில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில் நுட்ப அணி உள்ளிட்ட அணிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் அடுத்தடுத்து நடைபெற்றது.
கடைசியாக நடந்த தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனைக் கூட்டத்தில், மொழி, இனம், சாதி, மதம் என்ற வட்டத்துக்குள் சிக்கிக் கொள்ளாமல், நல்லிணக்கப் பாதையில் பயணிப்பதில் உறுதியாக இருக்க வேண்டும். சமூக ஊடகங்களில், அரசியல், சமூகத் தலைவர்கள், திரைத்துறை சார்ந்த கலைஞர்கள் குறித்து கருத்து பரிமாற்றம் மற்றும் தர்க்கங்கள் நாகரிகத்துடனும், ஆதாரங்கள் அடிப்படையிலும், கருத்தியலாகவும், கண்ணியமான வார்த்தைகளும் பயன்படுத்த வேண்டும் என அந்த இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியானது.
இந்நிலையில் அடுத்ததாக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சென்னையை அடுத்த பனையூரில் வருகிற 9 ஆம் தேதி நடைபெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் இதுவரை நடந்த கூட்டம் விஜய்யின் உத்தரவின் பேரில் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடந்த நிலையில், இந்த மகளிர் அணி கூட்டம் விஜய் தலைமையில் நடக்கவுள்ளதாகப் பரவலாகப் பேசப்படுகிறது.