சிம்புவின் 'போடா போடி' படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன், கடைசியாக விஜய் சேதுபதியை வைத்து 'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தை எடுத்தார். பின்பு கடந்த சில வருடங்களாக காதலித்து வந்த நடிகை நயன்தாராவை கரம் பிடித்தார்.
இதையடுத்து அஜித்தின் 62வது படத்தை லைகா தயாரிப்பில் இயக்க கமிட்டானார். ஆனால் சில காரணங்களால் அதிலிருந்து விளக்கப்பட்டார். அஜித்தை இயக்கும் வாய்ப்பை தவறவிட்ட விக்னேஷ் சிவன் அடுத்ததாக 'லவ் டுடே' புகழ் பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் பண்ண முயற்சித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அனிருத் இசையமைக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த நிலையில், போதைப் பழக்கத்திற்கு எதிராக பெருநகர காவல்துறை ஒருங்கிணைத்த குறும்பட போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய விக்னேஷ் சிவன், நிகழ்ச்சியை முடித்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த விக்னேஷ் சிவனிடம் ஏகே 62 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த விக்னேஷ் சிவன், "இந்த நிகழ்ச்சிக்கு சம்பந்தமில்லாத கேள்வி. இந்த நிகழ்ச்சி தொடர்பாக கேள்வியை கேளுங்கள் பதிலளிக்கிறேன். தேவையில்லாத கேள்வி" என பதிலளித்தார்.