Skip to main content

அஞ்சாமை படத்தின் ட்ரைலர் அப்டேட் 

Published on 27/05/2024 | Edited on 27/05/2024
vidharth vani bhojan anjaamai trailer update

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்துள்ளார். இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். 

இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக், திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது. படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு வாரியம். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை (28.05.2024) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நீட் தேர்வு பாதிப்பின் தாக்கத்தினை உண்டாக்கியதா? - ‘அஞ்சாமை’ விமர்சனம்!

Published on 07/06/2024 | Edited on 07/06/2024
Anjaamai movie review

மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வால் தமிழகத்தில் பல்வேறு தற்கொலைகள் இப்பொழுதும் நிகழ்ந்த வண்ணம் இருக்கத்தான் செய்கிறது. மாநில ஆளுங்கட்சிகள் நீட் தேர்வை எதிர்த்தும், மத்தியில் நீட் தேர்வை ஆதரித்தும் தேர்வுகள் நடைபெற்று வரும் இந்த சூழலை மையமாக வைத்து இதனால் ஏழை எளிய மாணவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள். நீட் தேர்வு அவசியமா? அதனால் நடக்கும் குளறுபடிகளால் எவ்வளவு பிரச்சனைகள் ஏற்படுகிறது? என்ற மையக்கருத்தை வைத்து உருவாகி இருக்கும் அஞ்சாமை திரைப்படம் எந்த அளவு பார்ப்பவருக்கு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பார்ப்போம்.

திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில் விதார்த், வாணி போஜன் தம்பதியினர் அவர்களுடைய மகன், மகளுடன் வாழ்ந்து வருகின்றனர். நாடக நடிகராக இருக்கும் விதார்த் தன்னைப் போலவே தன் மகனும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக தன் சொத்து சுகத்தை எல்லாம் விற்று மகனை படிக்க வைக்கிறார். மகன் கார்த்திக் மோகன் பத்தாம் வகுப்பில் மாநிலத்தில் முதன் மாணவனாக தேர்ச்சி பெறுகிறார். அவருக்கு தான் நன்றாக படித்து டாக்டராக வேண்டும் என்று ஆசை. அதற்காக மிகவும் கஷ்டப்பட்டு படிக்கிறார். மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு அவசியம் என்ற விஷயம் அவர்களுக்கு தெரிய வர மகன் கார்த்திக் மோகனை மிகப் பெரிய இன்ஸ்டிடியூட்டில் சேர்த்து நீட் கோச்சிங்கில் படிக்க வைக்க கையில் இருக்கும் மொத்த பணத்தையும் செலவு செய்து டியூஷன் படிக்க வைக்கிறார் விதார்த். இதற்கிடையே மகனும் நல்ல மதிப்பெண் எடுத்து பாஸ் செய்ய அவர் நீட் தேர்வுக்காக அந்த இன்ஸ்டிடியூட் மூலம் விண்ணப்பிக்கிறார்.

இவருக்கு தேர்வு மையம் ஜெய்பூரில் உறுதி செய்யப்படுகிறது. இதனால் மிகவும் கஷ்டப்பட்டு பசி, தூக்கம் என்று பாராமல் கையில் சிறிது பணத்துடன் தந்தை விதார்த்தும், மகன் கார்த்திக் மோகனும் ரயிலில் ஜெய்ப்பூருக்கு விரைகின்றனர். அங்கே பல்வேறு சிக்கல்களும், கொடுந்துயரங்களும் நடந்தேறுகிறது. அதனால் வெகுண்டு எழும் மாணவன் கார்த்திக் மோகன் நீட் தேர்வு அதிகாரிகளின் குளறுபடிகள் தான் காரணம் என எண்ணி போலீஸ் அதிகாரி ரகுமான் உதவியுடன் தமிழக அரசின் மீது வழக்கு தொடுக்கிறார். இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வருகிறது. இதையடுத்து இந்த வழக்கில் யார் வெற்றி பெற்றார்கள்? மாணவன் கார்த்திக் மோகனுக்கு நியாயம் கிடைத்ததா, இல்லையா? என்பதே இப்படத்தின் மீதி கதை.

மருத்துவப் படிப்பு சேர விரும்பும் மாணவர்களுக்கு நீட் அவசியமா என்ற கருத்தை மையமாக வைத்துக் கொண்டு இன்றைய சூழலில் சமூகத்திற்கு மிக அவசியமான ஒரு படத்தைக் கொடுத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார் இயக்குநர் எஸ்.பி சுப்பராமன். அதிகார வர்க்கத்தின் அலட்சியப் போக்கால் நீட் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை மையமாக வைத்து அதன் மூலம் மாணவ, மாணவிகள் எந்த அளவு துயரங்களை சந்திக்கின்றனர் என்ற கதைக் கருவை விதார்த் குடும்பத்துடன் இணைத்து மிக சுவாரசியமாக கதை சொல்லி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். 

ஒரு பின் தங்கிய கிராமத்திலிருந்து நன்றாக படிக்கும் மாணவன் அவன் குடும்பம் எந்த அளவு கஷ்டப்பட்டு அவனை படிக்க வைக்கின்றனர். அதற்காக அவர்கள் படும் அள்ளல்கள், துன்பங்கள் என வெறும் துயரங்களை மட்டும் காட்டி சீரியல் போல் படத்தை கொடுக்காமல் மனதுக்கு நெருக்கமாக எதார்த்தமான சினிமாவாக இப்படத்தை கொடுத்து இருக்கிறார். குறிப்பாக முதல் பாதி மிகவும் யதார்த்தமாகவும் அதே சமயம் ஜனரஞ்சகமான குடும்பப் படமாக நகர்ந்து இரண்டாம் பாதி முழுக்க முழுக்க கோர்ட் டிராமாவில் பயணம் செய்து இறுதியில் எதிர்பாராத திருப்பத்துடன் படம் முடிவடைந்து இருக்கிறது. 

தமிழக மக்கள் நீட் தேர்வை ஏன் எதிர்க்கின்றனர் என்ற கேள்விகளுக்கு விடையாக அமைந்திருக்கும் இத்திரைப்படம் அதற்குரிய நியாயத்தையும் செய்திருக்கிறது. ஒரு நுழைவுத் தேர்வால் எந்த அளவு மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருக்கிறது திரைப்படம். அதே சமயம் நீட் தேர்வு அவசியமா இல்லையா என்ற விஷயத்தைத் தாண்டி அப்படி நுழைவுத் தேர்வு வைக்கும் பட்சத்தில் அதற்கான முன்னேற்பாடுகள் எந்த அளவு மிகவும் தெளிவாகவும் அனைத்து மாணவர்களும் உபயோகப்படும்படியும் இருக்க வேண்டும் என்ற மையக்கருத்தை மிக ஆழமாகவும் அழுத்தமாகவும் இத்திரைப்படம் கொடுத்து அதையும் ரசிக்கும்படி அமைந்திருப்பது படத்தை கரை சேர்த்திருக்கிறது. 

படத்தின் நாயகன் விதார்த் ஏழை விவசாய குடும்பத்தின் அப்பாவாக அப்படியே கண்முன் வாழ்ந்திருக்கிறார். இவரின் எதார்த்த நடிப்பு பாடத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. குறிப்பாக தந்தைக்கும் மகனுக்குமான இவரது கெமிஸ்ட்ரி மிக மிக சிறப்பாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் எத்தனையோ நடிகர்கள் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்து கைதட்டல் பெற்று இருந்தாலும் அதை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் என ஒற்றை கையில் தட்டி விடும்படியான ஒரு சிறப்பான நடிப்பை மிக நேர்த்தியாகவும் அதே சமயம் உணர்ச்சிபூர்வமாகவும் நடித்து தான் ஒரு தேர்ந்த நடிகர் என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்து தமிழின் சிறந்த நடிகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் நடிகர் விதார்த். 

மகனுக்கு அம்மாவாக நடித்திருக்கும் வாணி போஜன் மிக மிகச் சிறப்பாக நடித்து கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் வலு சேர்த்து இருக்கிறார். இவருக்கு படத்தில் அதிக வேலை இல்லை. குறிப்பாக முதல் பாதியிலேயே இவரது கதாபாத்திரம் முடிந்து விடும்படி இருந்தாலும் தான் இருக்கும் வரை அந்த கதாபாத்திரத்திற்கு என்ன நியாயம் செய்ய வேண்டுமோ அதை மிக மிக சிறப்பாக செய்து பார்ப்பவர்களை கலங்கடிக்க செய்திருக்கிறார். படத்தின் இன்னொரு நாயகன் போலீஸ் ஆபீஸர் ரகுமான். முதல் பாதையில் போலீஸ் ஆகவும் இரண்டாம் பாதியில் வக்கீலாகவும் அவதாரம் எடுக்கும் இவர் அந்த கதாபாத்திரத்திற்கு எந்த அளவு நடிப்பு தேவையோ அதை சிறப்பாக கொடுத்து இருக்கிறார். இவர் மாணவர்கள் மேல் காட்டும் கரிசனம் படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சிறிய கதாபாத்திரத்தில் வந்தாலும் ராமர் மனதில் பதிகிறார். அதேபோல் ரேகா நாயரும் சிறப்பாக நடித்திருக்கிறார். மற்றபடி உடன் நடித்த முக்கிய கதாபாத்திரங்களும் அவரவர் வேலை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

அறிமுக ஒளிப்பதிவாளர் கார்த்திக் ஒளிப்பதிவில் கிராமம் மற்றும் நீதிமன்றம் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. முதல் படத்திலேயே இவரது ஷார்ட் டிவிசன்ஸ் மற்றும் லைட்டிங் சிறப்பாக அமைந்திருக்கிறது. ராகவ் பிரசாத் இசையில் பாடல்களைக் காட்டிலும் பின்னணி இசை மிகச் சிறப்பாக அமைந்திருக்கின்றன. பட்த்தொகுப்பாளரும், கலை இயக்குநரும் தங்களது பணிகளை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களை காட்டிலும் நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் மற்றும் ஏன் இவ்வளவு எதிர்ப்பு இருக்கிறது என்ற கேள்விக்கு பதிலாகவும், அதேசமயம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அதில் இருக்கும் குளறுபடிகளால் எந்த அளவு இன்னல்கள் ஏற்படுகிறது என்ற உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டி இருப்பது போன்ற நிதர்சனத்தை மிக யதார்த்தமாக காட்டி இருக்கிறார் இயக்குநர் சுப்புராமன். இதற்காகவே அஞ்சாமை படத்தை கண்டிப்பாக குடும்பத்துடன் சென்று பார்க்கலாம். 

அஞ்சாமை - அவசியம்!

Next Story

“இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம்” - விதார்த்

Published on 03/06/2024 | Edited on 03/06/2024
vidharth speech in anjaamai press meet

விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசு தயாரித்திருக்க அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார். இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் 7ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்துக் கொண்டனர்.

இதில் வாணி போஜன் பேசுகையில், “அஞ்சாமை எனக்கு ரொம்பவே முக்கியமான படம். நமக்கு ரொம்பவே நெருக்கமான, உயிருக்கு உயிரானவர்களை பற்றி அடிக்கடி விசாரிப்போம். அப்படி ஒரு உயிருக்கு உயிரான படம்தான் அஞ்சாமை. இந்த படத்தை ரொம்பவே நேசித்திருக்கிறேன். எந்த படத்தில் வேலை பார்க்கச் சென்றாலும் இந்த படம் பற்றிய ஞாபகம் வந்துவிடும். அந்த அளவிற்கு உயிரைக் கொடுத்து வேலை பார்த்திருக்கிறோம். இரண்டு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருக்கிறீர்களே என்று பலரும் கேட்டார்கள். அப்படி ஒரு கதாபாத்திரத்தை நான் பண்ணவில்லை என நினைத்தால் நான் நடிகையாக இருப்பதற்கு அர்த்தமே இல்லை என நினைக்கிறேன். எனக்கு இப்படி ஒரு படம் கிடைத்தது ரொம்ப ரொம்ப சந்தோசமான விஷயம். எனக்கு நடிக்க தெரியும் என இயக்குநரிடம் கூறினாலும் உங்களிடமிருந்து எங்களுக்கு என்ன கிடைக்கும் என நாங்கள் ஒரு ஆடிஷன் செய்து கொள்கிறோம் என இயக்குநர் கூறினார். அப்போதே இது ஒரு நல்ல படமாக இருக்கும் என எனக்கு தோன்றியது. ஒரு நடிகையாக, ஒரு சமூக பொறுப்புணர்வு உள்ள ஒரு மனிதராக, இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என சொல்ல மாட்டார்கள்.. 100% என்னுடைய உழைப்பை கொடுத்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். 

விதார்த் பேசுகையில், “நடிப்புத்துறைக்கு வந்ததில் இந்த படத்தை பண்ணியதற்காக நான் பெருமைப்படுகிறேன். இந்த கதையை எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தான் கேட்க ஆரம்பித்தேன். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே அழ ஆரம்பித்து விட்டேன். இந்த படத்தில் நான்கு விதமான காலகட்டங்களில் நான்கு விதமான கெட்டப்புகளில் நடிக்க வேண்டி இருந்தது. அதனால் திண்டுக்கல்லில் இதன் படப்படிப்பையும் இடைவெளி விட்டுவிட்டு நடத்தினோம். படத்தின் புரொடக்ஷனிலும் உதவியாக இறங்கினேன். இதில் மம்முட்டியை நடிக்க வைப்பதற்காக அவரை நேரில் சென்று பார்த்து கதை சொல்லி அவருக்கும் பிடித்து போனது. ஆனால் தேதிகள் ஒத்து வராததால் அவரால் நடிக்க முடியவில்லை. அவருக்குப் அதற்கு பதிலாக அடுத்ததாக ரகுமான் சார் வந்தார். ரொம்பவே பிரமாதமாக பண்ணி உள்ளார். நான் நடித்ததிலேயே கொஞ்சம் அதிக பொருட்செலவு ஆன படம் இது. அதன் பிறகு ட்ரீம் வாரியர்ஸ் இந்த படத்தை பார்த்த அன்றே இதை தங்கள் வசம் எடுத்துக் கொண்டார்கள்.

நடிகராக இருப்பதற்கு நான் ஏன் பெருமைப்படுகிறேன் என்றால் மன்னரிடம் மக்கள் தங்கள் குறையை முதன்முதலாக நடனம், நாடகத்தின் மூலமாக தான் சொல்ல ஆரம்பித்தார்கள். நான் நடிக்க துவங்கியதே கூத்துப்பட்டறையில் தான். மக்களின் பிரச்சனைகளை நாடகங்களாக போட ஆரம்பித்தோம். சிறுவயதில் அம்மாவுடன் சென்று சாமி படங்களை பார்க்கும் போது மக்கள் சிலர் சாமி வந்து ஆடுவதை பார்க்க முடிந்தது. ஆரம்பத்தில் இசைக்காக ஆடுகிறார்கள் என்று நினைத்தேன். ஆனால் நாடகத் துறைக்கு வந்ததும் தான் சினிமா மக்களை ஒருங்கிணைக்கிறது என்பது தெரிய வந்தது. இந்தப் படம் பார்க்கும்போது அனைவருமே தங்களை இதனுடன் தொடர்புபடுத்தி கொள்வார்கள். இது இந்தியாவில் உள்ள அத்தனை மனிதர்களுக்குமான படம். அப்படி ஒரு பிரச்சனையை என் படம் மூலமாக சொல்ல எனக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது” என்றார்.