
ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அவரது 25வது படமாக உருவாகியுள்ள படம் ‘கிங்ஸ்டன்’. இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இப்படத்தில் திவ்ய பாரதி கதாநாயகியாக நடித்துள்ளார். கடலை பின்னணியாகக் கொண்டு ஃபேண்டஸி அட்வென்சர் ஜானரில் இப்படம் உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் மார்ச் 7ஆம் தேதி வெளியாகவுள்ள படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் வெற்றிமாறன், பா.ரஞ்சித், அஷ்வத் மாரிமுத்து உள்ளிட்ட இயக்குநர்கள் கலந்து கொண்டு பேசினர். அப்போது வெற்றிமாறன் பேசுகையில், “ஜி.வி. பிரகாஷ் டயர்டே ஆகமாட்டார். எந்த நேரத்தில் படம் தொடர்பாக பேச கூப்பிட்டாலும் வருவார். வேலை செய்வதற்கு கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார். 10 வருஷம் மியூசிக் டைரக்டரா இருந்துட்டு திடீர்னு ஒரு நாள் எனக்கு போர் அடிக்குது, நான் நடிக்க போறேன்னு சொன்னார். உடனே எதுக்கு நடிக்க போறீங்கன்னு கேட்டேன். இல்ல நான் ட்ரை பன்னனும் என்றார். சரி பண்ணுங்கன்னு சொன்னேன். ஆனா உள்ளுக்குள்ள, ஒரு கம்போஸரா நல்லா ஒர்க் பன்னிட்டு இருக்காரு. ஏன் இப்ப நடிக்க போனும்னு தோனுச்சு. அப்புறம் அவர் நடிக்க ஆரம்பிச்சதும் அவருடைய மியூசிக் இன்னும் சிறப்பா இருந்துச்சு. ஒரு நடிகரா காட்சியை இன்னும் ஆழமாக புரிந்து கொள்ள அவருக்கு உதவியிருக்கு. அந்த அனுபவம் அவர் மியூசிக்கில் எதிரொலிச்சது. இன்னும் சூப்பர் கம்போஸராக அவர் உருமாறினார். அந்த மாதிரி தன்னுடைய ஒவ்வொரு ஒர்க்குலையும் தன்னை மெருகேற்றிக் கொள்ள முயற்சி செய்யுற ஒரு ஆள். நிறைய விஷயங்களை கத்துக்கிறார்.
கொஞ்ச நாள் முன்னாடி திடீர்னு ஃபோன் பண்ணி நான் புரொடியூசர் அக போறேன்னு சொன்னார். சரின்னு சொன்னேன். ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனேன். பயங்கரமா செட் போட்டு எடுத்துட்டு இருந்தாங்க. அதை பார்த்துட்டு பட்ஜெட் கேட்டேன். நான் நினைச்ச பட்ஜெட்டுல 10% தான் அவங்க சொன்னாங்க. அவ்வளவு கம்மியான பட்ஜெட்டில் இப்படி ஒரு செட் போட்டது ஆச்சரியமா இருந்துச்சு. ரொம்ப அழகாவும் இருந்துச்சு. அந்த செட்டுல நடிக்குறது ரொம்ப கஷ்டம். அந்த கஷ்டம் தான் நல்ல ரிசல்ட் கொடுக்கும். இந்தளவு ஒரு புரொடியூசர், கம்போஸரா, நடிகரா ஒர்க் பண்ற அளவுக்கு ஜி.வி. வளர்ந்திருப்பது சந்தோஷம்” என்றார்.