வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான மாநாடு திரைப்படம் கடந்த 25ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநாடு படம் தொடங்கும்போதே வி மிஸ் யூ சார் என்று எஸ்.பி.பியின் புகைப்படமும் வாலியின் புகைப்படமும் காட்டப்பட்டன. எஸ்.பி.பி-யையும் வாலியையும் வெங்கட் பிரபு ஏன் மிஸ் செய்கிறார்?
பாரம்பரியமிக்க இசைக் குடும்பத்தில் இருந்து வந்த இயக்குநர் வெங்கட் பிரபு சென்னை 600028 படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குநராக அறிமுகமானார். சிவா, ஜெய், பிரேம் ஜி என இளைஞர்கள் பட்டாளம் நிரம்பியிருந்த இப்படம் மிகப்பெரும் வெற்றிபெற்றதோடு, வெங்கட் பிரபுவின் இயக்குநராக திரை வாழ்க்கை வலுவான என்ட்ரி அமைத்துக் கொடுத்தது. சென்னை 600028 படத்தை எஸ்.பி.பியின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலமாக அவருடைய மகன் சரண் தயாரித்திருந்தார். வெங்கட் பிரபுவும் சரணும் சிறு வயதிலிருந்தே நெருங்கிய நண்பர்கள். 90களின் மத்தியில் வெங்கட் பிரபு, பிரேம்ஜி, சரண் இணைந்து நெக்ஸ்ட் ஜெனரேஷன் என்று இசைக்குழுவும் நடத்தியுள்ளனர். அந்த வகையிலும், கங்கை அமரனின் மகன் என்ற வகையிலும் எஸ்.பி.பிக்கும் வெங்கட் பிரபு மிக நெருக்கம். அதேபோல கவிஞர் வாலியுடனும் வெங்கட் பிரபு நல்ல நெருக்கம் கொண்டிருந்தார். வெங்கட் பிரவுவின் ஆரம்பக்கால படங்கள் தொட்டு தான் இறக்கும்வரை வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களுக்கும் வாலி பாடல்கள் எழுதினார். சென்னை 600028 படத்தில் 'யாரோ யாருக்குள் யாரோ...' என்ற பாடலை வாலி எழுத, எஸ்.பி.பி. பாடியிருப்பார்.
அதனைத் தொடர்ந்து, சரோஜா படத்தில் இடம்பெற்ற 'தோஸ்த் படா தோஸ்த்...', கோவா படத்தில் இடம்பெற்ற டைட்டில் ட்ராக், 'அடிடா நையாண்டி...', 'ஊரு நல்ல ஊரு...', ஆகிய பாடல்களை வாலி எழுதியிருந்தார். அதேபோல கோவா படத்தில் இடம்பெற்றிருந்த 'வாலிபா வா வா...' என்ற பாடலை இளையராஜாவுடன் இணைந்து எஸ்.பி.பி பாடியிருப்பார். மங்காத்தா படத்திலும் மச்சி ஓபன் தி பாட்டில் பாடல் உட்பட மூன்று பாடல்களை வாலி எழுதியிருந்தார். பிரியாணி படத்தில் இடம்பெற்ற 'மிசிஸ்ப்பி...', 'நானா நானா...' ஆகிய பாடல்களே வெங்கட் பிரபுவின் படத்திற்காக வாலி எழுதிய கடைசி பாடல்களாகும். பிரியாணி திரைப்படம் வெளியாவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பாகவே கவிஞர் வாலி காலமானார்.
அதன் பிறகு வெங்கட் பிரபு இயக்கிய மாசு என்கிற மாசிலாமணி, சென்னை 600028 - 2, பார்ட்டி, மாநாடு ஆகிய படங்களில் பிற கவிஞர்களையே வெங்கட் பிரபு பயன்படுத்திவருகிறார். அவருடைய இன்றைய படங்களில் உள்ள பாடல்கள் வெற்றிபெற்றாலும்கூட வாலியையும் அவருடைய வரிகளையும் வெங்கட் பிரபு மிகவும் மிஸ் செய்கிறார்போல... சென்னை 600028, கோவா படத்திற்கு பிறகு வெங்கட் பிரபுவின் படங்களில் எஸ்.பி.பி. பாடல்கள் பாடாவிட்டாலும்கூட தனக்கு முதல் வாய்ப்பு கொடுத்தவர் என்கிற வகையிலும், தன்னுடைய தனிப்பட்ட நெருக்கம் காரணமாகவும் எஸ்.பி.பியை மிகவும் மிஸ் செய்கிறார்போல... அந்த வெளிப்பாடாகவே வி மிஸ் யூ சார் என்ற அந்த வரிகள் மாநாடு படத்தின் தொடக்கத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும்.