Skip to main content

"நான் உடைந்துபோய் நின்றபோது கைகளைப் பிடித்த ஜி.வி. பிரகாஷ்" - நெகிழ்ந்த வசந்தபாலன்!

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

Vasantha Balan

 

வசந்தபாலன் இயக்கத்தில், ஜி.வி. பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்’ திரைப்படம், வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படக்குழுவினருடனான பத்திரிகையாளர் சந்திப்பு அண்மையில் நடைபெற்றது. 

 

இந்த நிகழ்வில் பேசிய இயக்குநர் வசந்த பாலன், "எமனோடு கைகுலுக்கிவிட்டு இந்த இடத்தில் வந்து நிற்பதாக நினைக்கிறேன். ஐ.சி.யு. வார்டுக்குள் சென்றபோது நிச்சயம் மீண்டு வந்துவிடுவேன் என நம்பினேன். அதற்குக் காரணம் கலை. ஐ.சி.யு. வார்டில் இருந்தபோது தொடர்ந்து எழுதிக்கொண்டே இருந்தேன். கலை ஒரு மனிதனை விடுதலை செய்யும் என்பதைப் புத்தகத்தில் படித்துள்ளேன். அதை முதன்முறையாக ஐ.சி.யு. வார்டில் நான் உணர்ந்தேன். இந்தப் படம் வெளியாகும் என்று நான் நம்பவேயில்லை. இந்தப் படத்தை ஒருகட்டத்தில் நான் மறந்துவிட்டேன். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு ஒரு வலியை சுமந்துகொண்டே அலைய முடியாது. ஒவ்வொரு தயாரிப்பாளரிடம் போகும்போதும் அந்தப் படம் எனக்கு நடக்காது. யார் தடுக்கிறார்கள் என்றே தெரியாது. கடந்த ஆறு வருடங்கள் பெரும் போராட்டமாக இருந்தது. அந்தப் போராட்டங்களுக்கு நடுவேதான் பி.டி. செல்வகுமார் சாரை சந்தித்தேன். அவர்தான் இந்த வாய்ப்பை ஸ்ரீதரன் சாரிடம் இருந்து எனக்கு வாங்கிக்கொடுத்தார். எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் ஓ.எம்.ஆர். பற்றி எனக்குக் கதை எழுதிக்கொடுத்தார். அந்தக் கதையைப் படமாக்குவதற்காக அந்த வீதிகளுக்குச் சென்றேன். அந்த வீதியின் ஒருபுறம் சொர்க்கம் போல இருக்கும். மறுபுறம் நரகம்போல இருக்கும். வானுயர இருக்கின்ற கட்டடங்களை நாம் அழகு என்று கொண்டாடுகிறோம். ஆனால், அந்தக் கட்டடத்தை உருவாக்கிய ஆதிக்குடிகள் அந்த நகரத்தைவிட்டு குப்பைபோல தூக்கி வீசப்படுகிறார்கள். இது சென்னையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் நடந்துகொண்டிருக்கிறது. 18 வயது சிறுவன் பிக்பாக்கெட் அடித்தான் என்ற செய்தியை நீங்கள் இனி எளிதாக கடந்துவிடக்கூடாது என்பதை இந்தப் படத்தில் பேசியுள்ளேன். நகரோடி என்ற புது வார்த்தையைத் தமிழுக்கு அறிவு கொண்டுவந்துள்ளார். நாடோடி, ஊரோடி, காலோடி ஆகிய வார்த்தைகள் தமிழில் இருந்தாலும் நகரோடி என்ற வார்த்தை புதியது. 

 

ad

 

ஐ.சி.யு.வில் நான் இருந்தபோது ‘ஐ காண்ட் ப்ரீத்’ என்று நர்ஸிடம் கூறினேன். அந்தக் குரல் ஐ.சி.யு. வார்டு முழுவதும் கேட்டுக்கொண்டே இருந்தது. அப்போதுதான் புரிந்தது, இது நோயாளியின் குரல் அல்ல; விடுதலையின் குரல் என்று. உடனே இதை ஐ.சி.யு.வில் இருந்தே எழுதி ஜி.வி. பிரகாஷிற்கு அனுப்பினேன். ‘சார் நீங்க ஐ.சி.யு.வில் இருக்கீங்க’ என்றார். ‘இந்த வேலையைச் செய்தால் நான் மகிழ்வேன்’ என்று கூறியதும் உடனே மெட்டமைத்து எனக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார். அதை உடனே அறிவுக்கு அனுப்பினேன். இந்தப் பாடலை அவரால்தான் எழுத முடியும். 

 

‘ஜெயில்’ என்று பெயர் வைத்தவுடன் ஜெயிலைப் பற்றிய படமா என்று கேட்டார்கள். ஜெயிலைப் பற்றி படம் எடுத்தால் ஜெயில் என்று பெயர் வைக்க வேண்டியதில்லை. ‘ஜெயில்’ என்பது படிமம். நீங்கள் எங்கெல்லாம் அதிகாரத்தை எதிர்த்து கேள்வி கேட்கிறீர்களோ அங்கு உங்கள் காலடியில் புது ஜெயில் முளைக்கிறது. 

 

15 ஆண்டுகளுக்கு முன்பு ஜி.வி.யின் விரல்களைப் பிடித்து இந்த மேடைக்கு நான் அழைத்துவந்தேன். இன்று ஜி.வி. அடைந்துள்ள உயரம் மிகமிகப் பெரியது. கதாநாயகன் இல்லாமல் நான் உடைந்துபோய் நின்றபோது என் கைகளைப் பிடித்த ஜி.வி.யின் கைகளை நண்பனின் கைகளாக நான் பார்த்தேன். இந்தப் படத்திற்கு அவர் கொடுத்த உழைப்பும் ஒத்துழைப்பும் மிக அவசியம். சில காட்சிகளில் அவர் நடித்ததைப் பார்க்கும்போது மிகச்சிறந்த நடிகனை கண்டுணர்ந்ததுபோல இருந்தது" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அந்த கதாபாத்திரமாகத் தோற்றமளிக்கிறார்கள்” - வசந்த பாலன் பாராட்டு

Published on 03/04/2024 | Edited on 03/04/2024
vasantha balan praised gv kalvan movie

ஜி.வி. பிரகாஷ், பாரதிராஜா, இவானா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் கள்வன். டில்லி பாபு தயாரித்துள்ள இப்படத்தை பி.வி. ஷங்கர் இயக்கியுள்ளார். ஜி.வி. பிரகாஷ் இசைப் பணிகளையும் மேற்கொண்டுள்ளார். படத்தின் இசை மற்றும் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி பலரது கவனத்தை பெற்றது. ட்ரைலரை பார்க்கையில் காட்டு யானைகளால் பாதிக்கப்படும் மலைவாழ் மக்களின் வாழ்வியலை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிந்தது. இப்படம் வருகிற ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது. 

இப்படத்தின் சிறப்பு திரையிடல் நடந்து முடிந்த நிலையில் படம் பார்த்த பிரபலங்கள் படக்குழுவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். அந்த வகையில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு உள்ளிட்டோர் படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தற்போது இயக்குநர் வசந்த பாலன் படக்குழுவை பாராட்டியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதளப் பதிவில், “நேற்று கள்வன் திரைப்படம் பார்த்தேன். இரண்டு திருடர்களின் வாழ்வில் பாரதிராஜா சாரும் யானையும் நுழையும் போது என்னாகிறது? என்கிற கதையில் கிராமம், அசலான கிராமத்து மனிதர்கள் என திரைப்படம் சுவாரஸ்யமாக நகர்கிறது. ஜி.வி பிரகாஷும் பாரதிராஜா சாரும் அந்த கதாபாத்திரமாக தோற்றமளிக்கிறார்கள்” என குறிப்பிட்டுள்ளார். 

vasantha balan praised gv kalvan movie

ஆர்யா, “டார்லிங் ஜி.வி ப்ரகாஷ் நடித்துள்ள கள்வன் படம் சுவாரசியமான பின்னணியில் ஒரு பொழுதுபோக்கு படமாக இருக்கிறது. எமோஷ்னலாக பெரிதளவு கனெக்ட் ஆகிறது. பாரதிராஜா சார் அற்புதமாக நடித்துள்ளார். ஜி.வி பிரகாஷுடன் அவரின் கெமிஸ்ட்ரி ரசிக்கும்படியாக இருக்கிறது. நெகட்டிவ் ஷேடில் ஜி.வி பிரகாஷ் நடித்திருப்பது எதிர்பாராத ஒன்று. அதை சரியாக பண்ணியுள்ளார்” என எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ்,அவரது எக்ஸ் பக்கத்தில் “கள்வன் ஒரு யதார்த்தமான த்ரில்லர், ஆரம்பம் முதல் இறுதி வரை உங்களை சுவாரஸ்யமாக்கும். ஜி.வி பிரகாஷ் மீண்டும் அருமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக யானையோடு அவர் துரத்தும் காட்சி சிறப்பாக உள்ளது” எனக் குறிப்பிட்டு படக்குழுவை பாராட்டியுள்ளார்.

Next Story

“வீரப்பன் குற்றவாளி என்றால்... காவல்துறையின் கொடூரம்?” - வசந்த பாலன்

Published on 20/12/2023 | Edited on 20/12/2023
vasantha balan about koose munisamy veerappan series

பிரபாவதி ஆர்.வி., ஜெயச்சந்திர ஹாஷ்மி, வசந்த் பாலகிருஷ்ணன் ஆகியோரின் உருவாக்கத்தில் ஷரத் ஜோதி இயக்கத்தில் தயாராகியுள்ள டாக்குமெண்டரி சீரிஸ் ‘கூச முனுசாமி வீரப்பன்’. இதை தீரன் ப்ரொடக்‌ஷன் சார்பாக பிரபாவதி ஆர்.வி. தயாரித்துள்ளார். இசைப் பணிகளை சதீஷ் ரகுநாதன் மேற்கொண்டுள்ளார். இந்த சீரிஸ், வீரப்பனின் வாழ்க்கையை அவரே விவரிக்கும் விதமாக உருவாகியுள்ளது. மேலும் அவர் பேசும் ஒரிஜினல் வீடியோ பிரத்யேகமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸ் கடந்த 14 ஆம் தேதி தமிழ், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தியில் ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

மொத்தம் 6 எபிசோடுளைக் கொண்டுள்ள இத்தொடரில் நக்கீரன் ஆசிரியர், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், மூத்த பத்திரிகையாளர் என். ராம், வழக்கறிஞர் ப.பா. மோகன், நிருபர் சுப்பு என்ற சுப்ரமணியன், அலெக்சாண்டர் ஐபிஎஸ், நடிகை ரோகிணி, நிருபர் ஜீவா தங்கவேல், சமூக ஆர்வலர் மோகன் குமார், வழக்கறிஞர் தமயந்தி உள்ளிட்டோர் வீரப்பனை பற்றிய அனுபவங்களையும் அவர்களது கருத்துகளையும் பகிர்கின்றனர். சீசன் 2 விரைவில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தொடர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. ஐஎம்டிபி ரேட்டிங்கில் 9.1 புள்ளிகள் பெற்றுள்ளது. மேலும் திரைப் பிரபலங்கள் ராஜேஷ் கண்ணா, சினேகன் உள்ளிட்டோர் படக்குழுவை வெகுவாகப் பாராட்டியிருந்தனர். 

அந்த வகையில் இயக்குநர் குமரன், சின்னத்திரை பிரபலம் ராஜு ஜெயமோகன், நடிகர் பால சரவணன் மற்றும் நடிகை வாணி போஜன் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குநர் வசந்த பாலன் இப்படக்குழுவிற்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஃபேஸ்புக் பதிவில், “ஜீ5-ல் வெளியாகியுள்ள வீரப்பன் தொடர் மிகவும் காத்திரமாக, நடுநிலையோடு, துணிச்சலாக எடுக்கப்பட்டுள்ளது. குரலற்ற, பாதிக்கப்பட்ட, உண்மையான மனிதர்களின் பேட்டியைக் காணும்போது தொடர் என்பதை மறந்து கண் கலங்குகிறது. ஹண்ட் ஃபார் வீரப்பன் (Hunt for veerappan) தொடர் ஒரு சார்பானதாகவும் அது ஒரு அரசியல் என உணர முடிந்தது. இந்த தொடர் வெளிவந்தது நல்தருணம். இந்த தொடரில் வீரப்பன் எழுப்பும் பல கேள்விகளுக்கு பதில் இல்லை நம்மிடம்.

நடிகனுக்கு இந்த தமிழ்நாட்டுக்காரனுங்க ஏன் ஓட்டு போடுறானுங்க. அரசியலைப் பத்தி அவங்களுக்கு என்ன தெரியும் என்று வீரப்பன் கேள்வி கேட்கும்போது, அத்தனை ஆண்டுகள் கழித்தும் விடை தெரியா சிரிப்பு கேள்வி. காட்டுக்குள் இருக்கும் முறையான படிப்பறிவு இல்லாத ஒருவனின் கேள்வி முக்கியமானது. இந்த தொடரைக் காணும்போது வீரப்பன் நல்ல கதைச் சொல்லியாகவும் நல்ல மேடை நடிகனாகவும் தோற்றமளிக்கிறான். வீரப்பன் குரல் பிசிறு இல்லாமல் பேட்டியில் வெளிப்படும்போது அவனிடம் இருந்த ஆளுமை வெளிப்படுகிறது. ஏகே 47 துப்பாக்கியை வைத்துக் கொண்டு அவன் நடித்துக் காட்டுவதையும் நடனம் ஆடுவதையும் பார்க்கும்போது சன்னதம் கொண்டாடும் வனதேவனைப் பார்ப்பது போல உணர்ந்தேன்.

வீரப்பன் யானைகளைக் கொன்று தந்தங்களை திருடியவன். சந்தன மரங்களைக் கடத்தியவன். அவன் குற்றவாளி என்றால் வாங்கியவன் யார்? வீரப்பன் தேடுதல் வேட்டையில் வனத்துறை அதிகாரிகளையும் காவல்துறை அதிகாரிகளையும் தன்னைக் காட்டிக் கொடுத்த கிராமத்தினரையும் கொன்றது மகா குற்றம் என்றால் தேடுதல் வேட்டையில் காவல்துறை மலைவாழ் மக்களைக் கொடூரமாகச் சித்திரவதைச் செய்ததையும், பெண்களை வன்புணர்வு செய்து தடாவில் சிறையில் அடைத்த கொடூரத்திற்கு என்ன பெயர் சூட்டுவது? முன்பே நக்கீரன் பத்திரிகையிலும் இணையத்தில் வந்திருந்தாலும் இணையத் தொடராக பார்க்கும்போது இலங்கையில் மட்டுமல்ல நம் தமிழகத்தில் நடந்த இனப் படுகொலைக்கு எந்த அரசும் செவி கொடுக்கவில்லை என்பது அநீதி. சதாசிவம் கமிஷன் அறிக்கை வெளியான பிறகும் நிவாரணத் தொகை இன்றைய தேதி வரை பாதிக்கப்பட்ட பலருக்கு சென்று சேரவில்லை என்ற தகவலை கேட்கும்போது கவலையளிக்கிறது.

வீரப்பன் தேடுதல் வேட்டையில் பாதிக்கப்பட்ட இரு தரப்பினரின் வீடியோ வெளியானது. இருபக்க நியாயங்களையும் எடுத்து கூறியது இந்த இணையத் தொடரின் சிறப்பு. நக்கீரன் பத்திரிகை நிருபர்களுக்கும், நக்கீரன் ஆசிரியருக்கும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இத்தொடரின் படக்குழுவினரான ஜெயச்சந்திர ஹாஷ்மி, பிரபாவதி ஆர்.வி., வசந்த் பாலகிருஷ்ணன், ஷரத் ஜோதி உள்ளிட்ட படக்குழுவினரைப் பாராட்டினார்.