Skip to main content

'2 காட்சி மெல்ல மெல்ல என் இரவைக் கொல்கிறது' - மாமன்னன் குறித்து வசந்த பாலன்

Published on 04/08/2023 | Edited on 04/08/2023

 

vasantha balan about maamannan

 

மாரி செல்வராஜ் இயக்கத்தில் ரெட் ஜெயண்ட் தயாரிப்பில் உதயநிதி, கீர்த்தி சுரேஷ், வடிவேலு, ஃபகத் ஃபாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மாதம் 29 ஆம் தேதி வெளியானது 'மாமன்னன்' படம். உதயநிதி நடிப்பில் கடைசிப் படமாக வெளியாகியுள்ள இப்படம், வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. தமிழில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியானது.

 

முன்னதாக இப்படத்தைப் பார்த்த முதல்வர் மு.க. ஸ்டாலின், திருமாவளவன் எம்.பி, நல்லகண்ணு, சி. மகேந்திரன் மற்றும் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பாராட்டினார்கள். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், தனுஷ், பா. ரஞ்சித் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் பாராட்டினர். அண்மையில் தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கம் ஆகியோருக்கு சிறப்பு திரையிடல் திரையிடப்பட்ட நிலையில், படத்தைப் பார்த்து ஆர்.கே. செல்வமணி, ஆர்.வி. உதயகுமார் உள்ளிட்ட பலர் பாராட்டு தெரிவித்திருந்தனர்.

 

இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 27 ஆம் தேதி ஓடிடியில் வெளியான நிலையில், ஃபகத் ஃபாசில் நடித்த ரத்தினவேல் கதாபாத்திரம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, அது தொடர்பான காட்சிகள் எடிட் செய்யப்பட்டு ட்ரெண்டிங்கில் இருந்தது. மேலும் தங்கள் சமூகத்தைச் சார்ந்தவர் எனப் பலரும் அவர்களது சமூகம் தொடர்பான பாடல்களை எடிட் செய்து பகிர்ந்து வந்தனர். இது தவறான போக்கு என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் அவர்களது கருத்துகளை முன்வைத்தார்கள். இதையடுத்து ஃபகத் ஃபாசில் மனைவி கதாபாத்திரத்தில் நடித்த ரவீனாவையும் ரசிகர்கள் எடிட் செய்து வரவேற்பை அளித்தனர். 

 

இந்நிலையில் பி.சி. ஸ்ரீராம் பாராட்டியுள்ளதாக இயக்குநர் மாரி செல்வராஜ் ட்விட்டரில் தெரிவித்திருந்தார். அந்த பதிவில், "மாமன்னன் திரைப்படம் நாம் பார்க்க மறுக்கும் உண்மையை பிரதிபலிக்கின்றது. இயக்குநர் மாரி செல்வராஜ் நாம் எதை பார்த்தே ஆகவேண்டுமோ அதை படம்பிடித்து காண்பித்துள்ளார். தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு அற்புதம். படத்தில் நடித்த அத்தனை நடிகர்களின் நடிப்பும் நமக்கு அத்தனை நெருக்கமாக இருக்கிறது" என பி.சி. ஸ்ரீராம் கூறியதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. 

 

இதையடுத்து இயக்குநர் வசந்த பாலன் பாராட்டு தெரிவித்துள்ளதாக ஒரு போஸ்டரை மாரி செல்வராஜ் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மாமன்னன் ஒரு முக்கியமான தனித்துவமான அரசியல் திரைப்படம். இந்த அரசியல் கதையில் நடிக்க, தயாரிக்க, சம்மதித்த உதயநிதி பெரிய முன்னெடுப்பு செய்துள்ளார். காட்சிகளில் தன் குற்றவுணர்வை, கையாலாகாத்தனத்தை, காலங்காலமாக அடி வாங்கிய வலியை, அடிமைத்தனத்தை பல்வேறு உடல் மொழிகளில் வெளிப்படுத்திய வடிவேலு அவர்கள் தான் திரை முழுக்க நிறைந்து நிற்கிறார். மாரியின் பரியேரும் பெருமாள் திரைப்படத்தில் பரியன் தந்தை அவமானத்தை சந்திக்கும் இடம் திரையுலகம் பார்க்காத நிஜம். அதுபோல இந்த திரைப்படத்தில் வருகிற கிணற்றில் பள்ளி மாணவர்கள் குளிக்கிற காட்சி, உதய்யை நாற்காலியில் அமரச் சொல்கிற காட்சி எனப் பிறப்பால் ஒதுக்கப்படுகிற மனிதர்களின் வலியைத் திரையில் பார்க்கும் போது மெல்ல மெல்ல என் இரவை நான் அமர்ந்திருக்கிற நாற்காலி கொல்கிறது. நாற்காலியில் அமர அனுமதி மறுக்கப்படுகிறவர்கள், நாற்காலியில் அமர முயலும் கதையே மாமன்னன். காலம் கொண்டாடும்" என வசந்த பாலன் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

 

 


 

சார்ந்த செய்திகள்