Skip to main content

“ஜெயிலர் 2 வேண்டாம் என நெல்சன் சொன்னார். ஆனால்...” - வசந்த் ரவி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
vasanth ravi about jailer 2

வித்தியாசமான கதைத்தேர்வு மூலம், தனித்த கதாபாத்திரங்களில் கவனம் செலுத்தி வருபவர் நடிகர் வசந்த்ரவி. ‘தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ என சீரியஸ் கதைக்களங்களில் நடித்தவர் அந்த ஜானரில் இருந்து வெளியே வந்து நடித்துள்ள படம்தான் ’பொன் ஒன்று கண்டேன்’. ஜியோ சினிமாஸில் இந்தப் படம் வெளியாகியுள்ளது. இந்தச் சூழலில் நாளை(ஏப்ரல் 18) வசந்த் ரவி பிறந்தநாள் காண்கிறார். இதை முன்னிட்டு பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
  
அவர் பேசியதாவது, “என்னுடைய முதல் படம் ‘தரமணி’யில் இருந்து எனக்கு ஆதரவு கொடுத்து வரும் மீடியா மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். அழைப்பை ஏற்று வந்தவர்கள் அனைவருக்கும் நன்றி. நீங்கள் கொடுத்த நிறை, குறைகள்தான் என்னை இந்த அளவுக்கு வளர்த்து கொண்டு வந்திருக்கிறது. நிறைய பேர் என்னிடம் ‘எப்போது ஜாலியான படம் செய்வீர்கள்? டான்ஸ் ஆடுவீர்களா?’ என்றெல்லாம் கேட்பீர்கள். அதற்கான பதிலாகத்தான் ஜியோ சினிமாவில் வெளியாகி இருக்கும் ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் வந்திருக்கிறது. நான் நடிகராக வேண்டும் என்று முடிவு செய்தவுடன் ரஜினி சாரிடம் சென்றுதான் அட்வைஸ் கேட்டேன். அதன் பின்பு அவருடனேயே ‘ஜெயிலர்’ படத்தில் நடித்தது எனக்கு மிகப்பெரிய பெருமை. ‘உன்னைப் போன்ற நடிகருடன் சேர்ந்து நடித்ததில் எனக்குப் பெருமை’ என்று ரஜினி சார் சொன்னார்.  அது உண்மையிலேயே பெரிய விஷயம். அடுத்து ‘வெப்பன்’ என்ற ஆக்‌ஷன் படத்திலும், ‘இந்திரா’ என்ற டார்க் ஜானர் படத்திலும் நடித்திருக்கிறேன். இரண்டுமே நன்றாக வந்திருக்கிறது. 

‘ஜெயிலர்2’ வருகிறது  என்ற விஷயம் எல்லோரும் பேசிக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால், அது எப்போது என்று  நெல்சன் சார்தான் சொல்ல வேண்டும். ‘ஜெயிலர்’ படத்தின் கதை, கிளைமேக்ஸ் என்ன என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். ஆனால், ‘ஜெயிலர் 2’ என்ன கதை எப்படி இருக்கப் போகிறது என்பது எனக்கு தெரியாது. ஆனால், ‘ஜெயிலர்’ கிளைமேக்ஸ் ஷூட் செய்தபோதே நெல்சன் சாரிடம் , ‘பார்ட் 2க்கான லீட் இருக்கு சார் என்று சொன்னேன். ஆனால், அதெல்லாம் வேண்டாம் என்று அப்போது சொன்னார். ஆனால், அது நடக்க வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்ப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ’தரமணி’, ‘ராக்கி’, ‘அஸ்வின்ஸ்’ படங்கள் ‘ஏ’ சர்டிஃபிகேட். படங்கள் ஆனால், ஃபேமிலி ஆடியன்ஸூக்கு ‘பொன் ஒன்று கண்டேன்’ படம் பிடித்திருப்பது மகிழ்ச்சி” என்றார்.

சார்ந்த செய்திகள்