கேரளா மாநிலத்திலுள்ள பாலக்காடு பகுதியில் காட்டு யானை ஒன்றுக்கு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டாசு வைக்கப்பட்ட அன்னாசிப்பழத்தைக் கொடுத்துள்ளனர். இதைச் சாப்பிட்ட யானையின் வாய்ப் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்ட காரணமாக அதனால் வேறு உணவை உட்கொள்ள முடியாமல் மிகவும் சிரமப்பட்டிருக்கிறது. வலியைப் பொறுத்துக்கொள்ள முடியாத யானை அருகே உள்ள ஆற்று நீரில் இறங்கி, உயிரிழந்துள்ளது. அந்த யானையை உடல் கூறாய்வு செய்த மருத்துவர்களுக்கு, யானை கர்ப்பமாக இருந்தது தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் விலங்கு நல ஆர்வலர்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதற்குப் பலரும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்தச் சம்பவம் குறித்து நடிகை வரலட்சுமி ட்விட்டரில் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில்... "நான் சொன்னது போல் மக்கள்தான் அரக்கர்கள். இந்தப் பாவப்பட்ட விலங்குகள் அல்ல.. கல்வியறிவுக்கும், மனித நேயத்துக்கும், பச்சாதாபத்துக்கும், சிறிதேனும் பொது உணர்வு இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்பதை இது நிரூபிக்கிறது. அருவருக்கத்தக்க நிகழ்வு இது. இந்த அரக்கர்களுக்கு கரோனா வந்து இறப்பார்கள் என்று நம்புகிறேன்." எனப் பதிவிட்டுள்ளார்.