நடிகை வனிதாவிற்கும் பீட்டர் பால் என்பவருக்கும் கடந்த 27ஆம் தேதி நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் மத்தியில் திருமணம் நடைபெற்றது.
பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பீட்டர் பாலின் முதல் மனைவி தன்னை விவகாரத்து செய்யாமல் வனிதாவை திருமணம் செய்துள்ளதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள வனிதா, அவர் தங்களிடம் இருந்து பணம் பெறவே இத்தகைய செயலில் ஈடுபட்டுள்ளதாகவும், இதனைச் சட்டப்படி எதிர்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து நீண்ட அறிக்கை ஒன்றை நடிகை வனிதா வெளியிட்டுள்ளார். அதில், "உலகம் முழுவதுமிருருந்து வரும் உங்கள் அனைவரின் அன்பு, ஆசிர்வாதம் மற்றும் வாழ்த்துகளுக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.
நான் எனது கடந்தகாலத்தில் நிறைய எதிர்மறை விஷயங்கள் மற்றும் மோசமான காலகட்டத்தைத் தாண்டி வந்திருக்கிறேன் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். எனது இரண்டு இளம் குழந்தைகளுடன் நீண்ட நாட்கள் தனித்த போராட்டத்துக்குப் பிறகு, ஒரு வழியாக நான் எனது உண்மையான காதலையும், மகிழ்ச்சியையும் வாழ்க்கையில் கண்டறிந்திருக்கிறேன்.
பீட்டர் பால் கனிவான, அன்பான, நேர்மையான மனிதர். கடவுளின், எனது அன்பார்ந்தவர்களின் ஆசி இல்லாமல் ஒரு உறவில் இணைய நான் விரும்பவில்லை.
திருமணம் என்பது இரண்டு இதயங்களின், உண்மையான உணர்வுகளின், நிபந்தனையற்ற காதலின் சங்கமம். எனது பெயரைக் கெடுக்கவும், அவதூறு பரப்பவும், என்னிடமிருந்து பணத்தைக் கறக்கவும் நினைப்பவர்கள், சுத்தமாக அக்கறையில்லாதவர்கள் வன்மத்தை உருவாக்க முயல்கின்றனர்.
நான் ஒன்றைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். 7 வருடங்களாகப் பிரிந்து தனியாக வாழ்ந்து வந்த, அக்கறை செலுத்த யாரும் இல்லாத ஒரு மனிதரை நான் சந்தித்தேன். அவர் திடீரென ஊடக வெளிச்சத்தில் இருப்பதாலும், அவர் பெயர் பலருக்குத் தெரிந்திருப்பதாலும், (விஷமிகள்) அதைத் தங்கள் சுயநலத்துக்காகத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். நான் யாருடைய குடும்பத்தையும் பிரிக்கவில்லை. அப்படிச் செய்யும் எண்ணமும் இல்லை.
பீட்டர் பாலும், நானும், கடவுள் முன்னிலையில் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால், நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை என்பதால், அந்த எண்ணமும் இல்லையென்பதால், நாங்கள் எங்கள் திருமணத்தைப் பதிவு செய்யவில்லை. நாங்கள் ஒருவரை ஒருவர் பைத்தியக்காரத்தனமாகக் காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை.
நாங்கள் இருவரும் சேர்ந்து மிகச் சந்தோஷமாக இருக்கிறோம். நான் புனித பைபிளின் மீது செய்த சத்தியத்தின் பேரில், அவர் உடல்நிலை சரியில்லாதபோதும், ஆரோக்கியமாக இருக்கும்போதும், செல்வம் இருக்கும்போதும், இல்லாத நிலையிலும், அவருக்குத் துணை நிற்பேன். அன்பு செலுத்துவேன். மரணம் எங்களைப் பிரிக்கும் வரை நினைத்து மகிழ்வேன்.
தயவுசெய்து எந்த பொய்க் குற்றச்சாட்டுகளையும் நம்பாதீர்கள். இதுவும் கடந்து போகும்” என்று தெரிவித்துள்ளார்.