நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர்.
இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார்.
இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.
இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.