மாரி செல்வராஜ் இயக்கி உதயநிதி, வடிவேலு, ஃபகத் ஃபாசில், கீர்த்தி சுரேஷ் நடித்து கடந்த ஜூன் 29 ஆம் தேதி வெளியான 'மாமன்னன்', வெற்றிகரமாக 50 நாளை கடந்துள்ளது. இதனைக் கொண்டாடும் விதமாக சென்னையில் வெற்றி விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரஹ்மான், வடிவேலு, மாரி செல்வராஜ், கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று பேசினர்.
வடிவேலு பேசுகையில், "இதுவரை ஏராளமான படங்களில் வடிவேலு நடித்திருந்தாலும். மாமன்னன் என்ற ஒற்றைப் படம் தனக்கு எல்லா வகையிலும் பெரிய பெயரை வாங்கிக் கொடுத்தது. இதனை என் வாழ்நாளில் மறக்க முடியாது. இயக்குநர் மாரி செல்வராஜ், என்னை அணுகும் பொழுது குடும்ப உறுப்பினரைப் போலவும். அதேசமயம் 20 படங்களை இயக்கியவர் போல அவரது வேலைப்பாடுகளும் இருந்தது. உதயநிதிக்கு நன்றி. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை இந்தப் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது. அதிலும், என்னை பாடவைத்த பாடலால் இன்றுவரை பட்டி தொட்டியெங்கும் ஹிட் ஆகியுள்ளது. அவருக்கு நன்றி. மாமன்னன் திரைப்படத்தில் சில காட்சிகள் தன்னை மிகவும் நெகிழ வைத்துவிட்டது' என்றார்.
பின்பு அந்தந்த காட்சிகளை ஒவ்வொன்றாக மேடையில் அடுக்கிக் கொண்டே போனார். தொடர்ந்து, படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் ஜீவன் இருப்பதாக தெரிவித்தார். படம் இந்தளவுக்கு வெற்றியடைய முக்கிய காரணமாக உதயநிதி இருந்ததாக குறிப்பிட்டார். மேலும் இதுபோன்ற படங்களை தயாரிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார். இதுவரை ரெட் ஜெயன்ட் நிறுவனத்தில் நடித்த இரண்டு படங்களுமே வெற்றி பெற்றுள்ளதை பெருமைப்பட சொன்னார். முடிவில், "மாரிசெல்வராஜ் வெவ்வேறு கதைக்களத்தில் படம் எடுக்கவேண்டும்... இதே வட்டத்துக்குள் சுற்றாமல்... காமெடி படங்களும் இயக்க வேண்டும்" எனவும் கேட்டுக் கொண்டார்.