trouble in vignesh shivan regards lic movie title issue

இயக்குநர் விக்னேஷ் சிவன், அஜித்தின் 62வது படத்தை இயக்க கமிட்டான நிலையில் சில காரணங்களால் அதிலிருந்து விலக்கப்பட்டுவிட்டார். இதையடுத்து பிரதீப் ரங்கநாதனை ஹீரோவாக வைத்து ஒரு படம் இயக்கவுள்ளார். கதாநாயாகியாக தெலுங்கு இளம் நடிகை கிரித்தி ஷெட்டி நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யா, மிஷ்கின், யோகிபாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். லலித் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

Advertisment

இப்படத்தின் அறிவிப்பு நேற்று பூஜையுடன் பணிகள் ஆரம்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபட்டு வெளியானது. படத்திற்கு ‘எல்.ஐ.சி’ (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) எனத்தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. பூஜை நிகழ்ச்சி புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றது. இப்படத்தில் நயன்தாரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் படக்குழு அது பற்றி குறிப்பிடவில்லை.

Advertisment

இந்த நிலையில் இயக்குநர் மற்றும் இசையமைப்பாளர் எஸ்.எஸ். குமரன், எல்.ஐ.சி தலைப்பு என்னுடையது என்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடுப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு எல்.ஐ.சி என்று பெயரிட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலும் அடைந்தேன். காரணம் எல்.ஐ.சி என்கிற பெயரை 2015ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸின் வாயிலாகப் பதிவு செய்து வைத்திருக்கிறேன்.

இதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர்மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் எல்.ஐ.சி என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச் சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்த தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக இந்த தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.

Advertisment

அப்படி இருந்தும் இந்த தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது. அவரின் இந்த செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். எல்.ஐ.சி என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால்அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.