பா.ரஞ்சித் - விக்ரம் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இப்படத்தின் கதை கர்நாடகாவின் கே.ஜி.எஃப். பகுதியில் வாழ்ந்த மக்களைப் பற்றி உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகன், பசுபதி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இப்படத்தின் ட்ரைலர் கடந்த மாதம் 7ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் தேதி இப்படத்தின் முதல் பாடலான ‘மினிக்கி மினிக்கி...’வெளியானது. அதில் உமா தேவி எழுதியிருக்க சிந்துரி விஷால் பாடியிருந்தார். இந்த பாடல் பழங்குடியின மக்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் வகையில் இருந்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இப்படத்தின் இரண்டாவது பாடலாக ‘லானே தங்கலானே...’ லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை ராப் பாடகர் தெருக்குரல் அறிவு எழுதி ஜி.வி. பிரகாஷுடன் இணைந்து பாடியுள்ளார். இப்பாடல் முழுக்க முழுக்க அப்பகுதியில் வாழும் மக்களின் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கேற்றவாறு, ‘செல்... போரிடு மொத்தம் மாறிட, வேல்... வாலோடு வஞ்சம் சீவிட, சொல்... யாரென அண்டம் கூறிட, நில்... ஆயிரம் வேங்கை நாமென, லானே தங்கலானே...’என்ற வரிகளும் இடம்பெற்றுள்ளது.