
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் தற்போது 'தேனாண்டாள் ஸ்டுடியோஸ்' முரளி ராமசாமி தலைமையில் இயங்கி வருகிறது. இந்த சங்கத்திற்கான தேர்தல் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடந்து வரும் நிலையில், தற்போது 2023 - 2026 ஆம் ஆண்டுக்கான தேர்தல் வரும் 26.3.2023 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து தயாரிப்பாளர் கவுன்சிலின் உறுப்பினர்கள் கமல்குமார், சீனிவாசன் உள்பட எட்டு தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். அதில், மார்ச் 26 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை ரத்து செய்யக் கோரியும் உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்தல் அதிகாரியாக நியமித்து தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் நிர்வாகிகள் தேர்தலுக்கான இரண்டாவது தேர்தல் அலுவலராக ஓய்வுபெற்ற நீதிபதி வி.பார்த்திபனை நியமித்து உத்தரவிட்டார்.
இந்த நிலையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் ஏப்ரல் 30ஆம் தேதி நடக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்தலில் தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணியும் மன்னன் தலைமையில் ஒரு அணியினரும் போட்டியிடுகின்றனர்.