இந்தியத் திரைத்துறையில் மிக முக்கிய விருதாகப் பார்க்கப்படும் தேசிய திரைப்பட விருது ஆண்டுதோறும் கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2021 ஆம் ஆண்டிற்கான 69வது தேசிய விருது அறிவிப்பு நேற்று முன்தினம் மாலை அறிவிக்கப்பட்டது. இதில் கடைசி விவசாயி படம் மட்டும் சிறந்த தமிழ் திரைப்படம் என்ற பிரிவில் வென்றுள்ளது. அதைத் தவிர்த்து திரைப்படம் சாராத பிரிவில், சிறப்பு விருதாக (ஸ்பெஷல் மென்ஸன்), 'கருவறை' என்ற ஆவணப்படத்திற்காக ஸ்ரீ காந்த் தேவாவிற்கும் 'கடைசி விவசாயி' படத்திற்காக மறைந்த நடிகர் நல்லாண்டிக்கும் அறிவிக்கப்பட்டது. மேலும் சிறந்த கல்வித் திரைப்படம் என்ற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படமும் சிறந்த பின்னணி பாடகி என்ற பிரிவில் இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற 'மாயாவா சாயவா...' பாடலுக்காக ஸ்ரேயா கோஷலுக்கு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழில் முக்கிய படங்களாகப் பார்க்கப்பட்ட சூர்யா - த.செ. ஞானவேல் கூட்டணியின் ஜெய் பீம், பா. ரஞ்சித் - ஆர்யா கூட்டணியின் சார்பட்டா பரம்பரை, மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணியின் கர்ணன் உள்ளிட்ட படங்கள் ஒரு விருதினைக் கூட பெறவில்லை. குறிப்பாக ஜெய் பீம் படத்திற்காகச் சிறந்த துணை நடிகர் விருது மணிகண்டனுக்கு கிடைக்கும் எனப் பலரும் எதிர்பார்த்தனர். இது தமிழ் ரசிகர்கள் மத்தியில் சற்று ஏமாற்றத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பலரும் தமிழ் சினிமாவை புறக்கணித்துவிட்டதாகத் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
அந்த வகையில் இயக்குநர் சுசீந்திரன், ஜெய் பீம் படத்துக்கு கிடைக்காதது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் "கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்திருப்பது ரொம்ப மகிழ்ச்சி. அற்புதமான ஒரு திரைப்படம். இயக்குநர் மணிகண்டனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். நீண்ட நாட்களாக கடின உழைப்பாளியாக இருக்கும் ஸ்ரீ காந்த் தேவாவுக்கு கருவறை திரைப்படத்திற்கு பின்னணி இசைக்காக தேசிய விருது கிடைத்திருக்கிறது. அவருக்கும் எனது வாழ்த்துக்கள். ஜெய் பீம் திரைப்படத்துக்கு விருது கிடைக்காமல் இருப்பது மிகுந்த ஆச்சரியத்தை உருவாக்கியிருக்கிறது. ஏன் என்று ஆயிரம் கேள்விகள் வருகிறது. இருப்பினும் 5 தேசிய விருதுகள் தமிழ் சினிமாவிற்கு கிடைத்தது மகிழ்ச்சி" எனப் பேசியுள்ளார்.
இதே போல் தி காஷ்மீர் ஃபைல்ஸ் படத்திற்கு தேசிய ஒருமைப்பாட்டுக்கான நர்கீஸ் தத் விருது அறிவிக்கப்பட்டது கடும் விமர்சனத்தை கிளப்பியுள்ளது. முதல்வர் மு.க. ஸ்டாலின் மலிவான அரசியலுக்காகத் தேசிய விருதுகளின் மாண்பு சீர்குலைக்கப்படக் கூடாது" என விமர்சனம் செய்திருந்தார். இதனைத் தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீ ராம், "தேசிய விருதுகளில் இந்த தசாப்தத்தின் மிக மோசமான தேர்வு தி காஷ்மீர் ஃபைல்ஸ்" என எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.