Skip to main content

“வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுகிறார்; இது அண்ணனாக நான் எடுக்கும் முடிவு” - இயக்குநர் பாலா

Published on 04/12/2022 | Edited on 04/12/2022

 

“Suriya Quits Vanangan; This is my decision as a brother” - Director Bala

 

'எதற்கும் துணிந்தவன்' படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா பாலா இயக்கத்தில் 'சூர்யா 41' நடித்து வந்தார். இப்படத்தில் கதாநாயகியாக கிரித்தி ஷெட்டி நடிக்க, சூர்யாவின் தங்கை கதாபாத்திரத்தில்  மலையாள நடிகை மமீதா பைஜூ நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்க, சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்கிறது. 

 

பாலாவின் பிறந்தநாளில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அதில் இப்படத்திற்கு வணங்கான் எனப் பெயரிடப்பட்டது. இந்நிலையில் வணங்கான் படத்திலிருந்து சூர்யா விலகுவதாக பாலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.

 

அதில், “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து 'வணங்கான்' என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால் இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது.

 

என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் தம்பிக்கு ஒரு அண்ணனாக என்னால் ஒரு சிறு தர்மசங்கடம்கூட நேர்ந்துவிடக்கூடாது என்பது என் கடமையாகவும் இருக்கிறது.

 

எனவே 'வணங்கான்' திரைப்படத்திலிருந்து சூர்யா விலகிக்கொள்வது என நாங்கள் இருவரும் கலந்து பேசி, ஒருமனதாக முடிவெடுத்திருக்கிறோம். அதில் அவருக்கு மிகவும் வருத்தம்தான் என்றாலும் அவரது நலன் கருதி எடுத்த முடிவு இது.

 

'நந்தா'வில் நான் பார்த்த சூர்யா, 'பிதாமகன்-இல் நீங்கள் பார்த்த சூர்யா போல் வேறு ஒரு தருணத்தில் உறுதியாக இணைவோம். மற்றபடி 'வணங்கான்' படப்பணிகள் தொடரும்..” எனக் கூறியுள்ளார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

பாலா மீதான விமர்சனம் - விளக்கமளித்த மமிதா பைஜு

Published on 01/03/2024 | Edited on 01/03/2024
mamitha baiju about bala ragards his vanangaan movie statement

பாலா தற்போது இயக்கி வரும் படம் 'வணங்கான்'. இதில் முன்பு சூர்யா கமிட்டாகி நடித்து வந்த நிலையில், சில காரணங்களால் விலகிவிட்டார். மேலும் கதாநாயகியாக க்ரித்தி ஷெட்டியும் ஒப்பந்தமாகியிருந்த நிலையில் அவரும் விலகிவிட்டார். இதையடுத்து சூர்யாவுக்கு பதிலாக அருண் விஜய்யை வைத்து பாலா இயக்கி வந்தார். கன்னியாகுமரியில் படப்பிடிப்பு தொடங்கி, பல்வேறு கட்டங்களாக பல இடங்களில் நடந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் நடந்தது.

இப்படத்தை சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா இணைந்து தயாரிக்க கதாநாயகியாக ரோஷிணி பிரகாஷ் நடித்துள்ளார். சமுத்திரக்கனி, மிஷ்கின் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கும் இப்படத்தில் அனைத்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி கவனம் பெற்ற நிலையில் கடந்த டிசம்பர் மாதம் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டது. சமீபத்தில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 

இந்த நிலையில் இப்படத்தில் நடித்தபோது பாலா அடித்ததாகவும் அதன் காரணத்தால் படத்தை விட்டு வெளியேறியதாகவும் மலையாள நடிகை மமிதா பைஜு சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். அவர் பேசியதாவது, “படத்தில் வில்லடிச்சான் மாடன் என்ற கலை இருந்தது. அந்த கதாபாத்திரம் அனுபவமுள்ள ஒரு கலைஞராக எழுதப்பட்டுள்ளதா என்று கேட்டேன். அனுபவம் வாய்ந்ததாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் கூறினார். அப்படி இருக்கும்போது, அந்த கதாபாத்திரத்தின் நுணுக்கங்களை சரியாக நடிக்க வேண்டுமல்லவா? டிரம் வாசித்து கொண்டே பாட வேண்டும். அதுவும் ஒரு குறிப்பிட்ட பாணியில் செய்ய வேண்டும். 

அதனால் என்னை ஒரு வில்லடிச்சான் மாடன் பெண் கலைஞரிடம் அழைத்து போய், அவர் செய்வதைப் பார்க்கச் சொன்னார் பாலா. நான் பார்த்தவுடனே, அவர் டேக் போய்விடலாம் என்று சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகிவிட்டது. டேக் போகிற அளவிற்கு நான் தயாராக கூட இல்லை. அவர்கள் என்ன பாடுகிறார்கள் என்பது கூட எனக்குப் புரியவில்லை. அதை தெரிந்துகொள்ள மூன்று டேக்குகள் எடுத்தேன். அதற்கு நடுவில் என்னை பலமுறை அவர் திட்டினார். முன்னதாகவே, நான் திட்டுவேன் அதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று பாலா என்னிடம் அறிவுறுத்தினார். இருந்தாலும் அந்த நேரத்தில் அவர் திட்டியது என்னை காயப்படுத்தியது. அதனால், படப்பிடிப்பில் இருக்கும்போதே இதற்கு மனதளவில் தயாராகி வந்தேன். பாலா என்னை அடிப்பதும் உண்டு. சூர்யா சாருக்கு பாலாவை பற்றி முன்பே தெரியும். ஏனென்றால் அவர்கள் முன்பு ஒன்றாக படம் பண்ணியிருக்கிறார்கள். ஆனால் நான் புதிது. இத்தகைய அனுபவம் தான் என்னை படத்திலிருந்து வெளியேறச் செய்தது” என்றார். இது கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியது. மேலும் பாலாவை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சனம் செய்துவந்தனர். 

இந்த நிலையில் மமிதா பைஜூ, இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை என தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “தமிழ் திரைப்படத்தில் நான் நடித்தது தொடர்பாக இணையத்தில் பரப்பப்படும் செய்திகள் முற்றிலும் ஆதாரமற்றவை. திரைப்பட ப்ரொமோஷன் நேர்காணலின் போது ஒரு பகுதி, சொல்லவந்த அர்த்தத்தை எடுத்துவிட்டு, பொறுப்பற்ற தலைப்பின் மூலம் தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. பாலா சாருடன் ப்ரீ புரொடக்‌ஷன் மற்றும் தயாரிப்பு பணிகள் உட்பட ஒரு வருடத்திற்கு மேல் பணியாற்றியிருக்கிறேன். நான் சிறந்த நடிகையாக மாறுவதற்கு அவர் எப்போதும் என் மேல் கருணை காட்டினார். நான் மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ அல்லது வேறு எந்த விதமான துஷ்பிரயோகத்தையும் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது, அனுபவிக்கவில்லை. இதை மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிற தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் காரணமாகவே, அந்தப் படத்திலிருந்து விலகிவிட்டேன். வெளியிடும் முன் செய்தியை சரிபார்க்க என்னை தொடர்பு கொண்ட ஊடக நிறுவனங்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

பாலாவின் செயலால் கண் கலங்கிய மாற்றுத்திறனாளி

Published on 29/02/2024 | Edited on 29/02/2024
bala helped specially abled person

சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். கடந்த மாதம், மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார். 

இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். அண்மையில் தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கு மருத்துவ சேவைக்காக இலவச ஆட்டோ சேவையை வழங்கினார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மற்றும் பலதரப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது பாராட்டைப் பெற்று வருகிறது. கடந்த மாதம் திருப்பத்தூர் மாவட்டத்தில் வாணியம்பாடி அருகேயுள்ள நெக்னாமலை என்ற கிராமத்தில் ஆம்புலன்ஸ் வழங்கினார். 

இந்த நிலையில், தனது சொந்த பணத்தில் மாற்றுத் திறனாளி ஒருவருக்கு மூன்று சக்கர வாகனம் பரிசாக வழங்கியுள்ளார். அவரது வீட்டிற்கே சென்று வாகனத்தை வழங்கிய பாலா, அவருக்கு நிதியுதவியும் வழங்கியுள்ளார். இதனைக் கண் கலங்கியபடியே நெகிழ்ச்சியுடன் அந்த மாற்றுத் திறனாளி ஏற்றுக் கொண்டுள்ளார். அந்த மாற்றுத் திறனாளி மேற்படிப்பு படித்துவிட்டு வேலைக்குச் செல்ல முடியாமல் கஷ்டத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் நிலையில் அவருக்கு உதவியுள்ளார் பாலா. இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பாலாவிற்கு பாராட்டுகள் குவிந்து வண்ணம் உள்ளன.