சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படம் வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாகக் கூறப்படுகிறது. இப்படத்தை தொடர்ந்து தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். இம்மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தாணு தயாரிப்பில் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படம் கைவசம் வைத்துள்ளார். இதனிடையே இந்தியில் ராகேஷ் ஓம்பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் ‘கர்ணா’ படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது.
திரைப்படங்களை தாண்டி தனது ரசிகர்கள் அல்லது ரசிகர் மன்றத்தில் இருப்பவர்கள் யாரேனும் மறைந்தால் அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதை வழக்கமாக வைத்துள்ளார் சூர்யா. கடந்த ஆண்டு மே மாதம் அமெரிக்காவில், வணிக வளாகம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு நடந்த நிலையில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐஸ்வர்யா என்ற பெண் இறந்துள்ளார். இவர் தீவிர சூர்யா ரசிகர் எனத் தெரிய வந்துள்ளதைத் தொடர்ந்து அவரது குடும்பத்தாருக்கு தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தார். மேலும் ஐஸ்வர்யாவின் புகைப்படத்தைச் சென்னையில் உள்ள தனது வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தினார் சூர்யா.
அதே போல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் சூர்யாவின் பிறந்தநாளை ஒட்டி ஆந்திர மாநிலம் நாசராவ் பேட்டையில் கல்லூரி மாணவர்களான வெங்கடேஷ், சாய் ஆகிய இருவரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சூர்யாவின் பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கி உயிரிழந்தனர். இறந்த மாணவர்களின் குடும்பத்திற்கு வீடியோ கால் மூலம் சூர்யா தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். மேலும் அவர்களுக்கான தேவைகளை செய்து தருவதாக உறுதியளித்தார். இதையடுத்து கடந்த ஆண்டு செப்டம்பரில் சென்னையை அடுத்த எண்ணூர் பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞர் சாலை விபத்தில் உயிரழந்தார். இவர் தீவிர சூர்யா ரசிகராகவும் சூர்யாவின் ரசிகர் மன்றத்திலும் உறுப்பினராகவும் இருந்துள்ளதையறிந்த சூர்யா எண்ணூரில் உள்ள அந்த ரசிகரின் இல்லத்திற்குச் சென்று அவரது புகைப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார்.
இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சூர்யா நற்பணி இயக்கத்தின் மாவட்ட தலைவரான மணிகண்டன் கடந்த 7ஆம் தேதி சாலை விபத்தில் மறைந்துள்ளார். இதனால் அவரின் வீட்டிற்குச் சென்ற சூர்யா, மணிகண்டன் புகைப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திவிட்டு, அவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார்.