Skip to main content

ஒரு மாத இடைவெளியில் அடுத்தடுத்து நான்கு படங்களை ரிலீஸ் செய்யும் நடிகர் சூர்யா!

 

bdsgsehs

 

எதிர்வரும் நான்கு மாதங்களில் நடிகர் சூர்யாவின் சொந்த பட நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் நான்கு படங்கள் நேரடியாக அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகின்றன. 'ஜெய் பீம்', 'உடன்பிறப்பே', 'ஓ மை டாக்', 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' ஆகிய படங்கள் தொடர்ந்து செப்டம்பர் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு படங்களாக வெளியாகவுள்ளது. அமேசான் பிரைம் வீடியோவும், 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வகையில், திரில்லர், சஸ்பென்ஸ், காமெடி, ஃபேமிலி டிராமா என பல்வேறு ஜானர்களில் படத்தைத் தயாரித்துள்ளனர். 

 

ஜோதிகா மற்றும் சூர்யா இணைந்து தயாரித்த இந்தத் திரைப்படங்களில் இந்தியாவின் தலைசிறந்த நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். 1 - பிரகாஷ்ராஜ், ரமேஷ் ராவ், லிஜாமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், மணிகண்டன் ஆகியோருடன் சூர்யா நடித்த 'ஜெய் பீம்' படம். 2 - சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, கலையரசன், நிவேதிதா சதீஷ், சித்து ஆகியோர் நடித்த குடும்ப ஃபேமிலி டிராமா ஜானரில் தயாரான 'உடன்பிறப்பே' படம். 3 - அருண் விஜய், அர்ணவ் விஜய், விஜயகுமார், மகிமா நம்பியார், வினய் ராய் நடித்த குழந்தைகளை மையப்படுத்திய 'ஓ மை டாக்’ என்ற படம். 4 - ரம்யா பாண்டியன், வாணி போஜன், மிதுன் மாணிக்கம், வடிவேல் முருகன் உள்ளிட்ட பலர் நடித்த நையாண்டி நகைச்சுவையை மையப்படுத்திய 'ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்' என்ற படம் உட்பட நான்கு படங்கள் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.

 

'அமேசான் பிரைம் வீடியோவில் தமிழ்த் திரைப்படங்களுக்கென மிகப்பெரிய நூலகம் ஒன்று எங்களிடம் உள்ளது' என அமேசான் பிரைம் வீடியோவின் இயக்குநரும், உள்ளடக்கத் தலைவருமான விஜய் சுப்பிரமணியம் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசுகையில்... "சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் உடன் நாங்கள் மேற்கொண்ட இந்த ஒப்பந்தம் திரையுலகில் புதிய மைல்கல் என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம். அத்துடன் மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் நான்கு திரைப்படங்களை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் நிறுவனத்திலிருந்து நேரடியாக உலகளாவிய திரைப்பட பார்வையாளர்களுக்கு எடுத்துச் செல்லவிருக்கிறோம். 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் 'சூரரைப் போற்று', 'பொன்மகள் வந்தாள்' ஆகிய படங்களுக்கு உலகளவில் பார்வையாளர்களிடமிருந்து எதிர்பார்க்காத அளவில் அன்பும், ஆதரவும் கிடைத்தது. 

 

அதனைத் தொடர்ந்து உள்ளூர் மொழியிலான திரைப்படங்கள் கடந்த வருடத்தில் 50 சதவீத பார்வையாளர்களை சென்றடைந்து புதிய சாதனையைப் படைத்திருக்கிறோம். இவர்கள் தமிழக எல்லையைக் கடந்த பார்வையாளர்கள் என்பது குறிப்பிடதக்கது. உள்ளூர் மொழியில் நேரடியாக படங்களை வெளியிடுவதன் மூலம் 20 சதவீதம் வரை சர்வதேச பார்வையாளர்கள் இருந்தனர் என்பதும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. 2டி என்டர்டெய்ன்மென்ட் போன்ற ஆக்கப்பூர்வமான பட நிறுவனத்துடனான எங்கள் வலுவான உறவு மேலும் தொடர்கிறது. இதன் காரணமாக உள்நாட்டு, உள்ளூர் மொழியில் தயாராகும் கதைகளை, அதற்கான பார்வையாளர்களைக் கண்டறிந்து அவர்களிடத்தில் எடுத்துச் சென்றடைய வைப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.

 

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரான நடிகர் சூர்யா இதுதொடர்பாக பேசுகையில்... "கடந்த ஆண்டு பெரும் மாற்றமாக அமைந்தது. முன்னோடிகள் இல்லாத சூழ்நிலையில், திரைப்பட வெளியீட்டின் பல்வேறு புதுமைகளை நாங்கள் மேற்கொண்டோம். 2டி நிறுவனத்தின் அண்மைய திரைப்பட வெளியீடுகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஸ்ட்ரீமிங் சேவையாக அமேசான் இருக்கிறது. 'பொன்மகள் வந்தாள்' முதல் 'சூரரைப் போற்று' வரை இந்தியாவில் மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் பார்வையாளர்களைச் சென்றடைந்தது. இதற்கு காரணமான அமேசான் பிரைம் வீடியோ உடன் தொடர்ந்து தொழில்ரீதியான ஒத்துழைப்பை நீட்டிப்பதில் நாங்கள் எல்லையற்ற மகிழ்ச்சி அடைகிறோம்'' என்றார்.

 

2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்றும் அதன் விவரங்களின் பட்டியல்கள் வருமாறு...

 

hrehejed

 

‘ஜெய் பீம்’ (நவம்பர் 2021) 


த.செ. ஞானவேல் இயக்கிய ‘ஜெய் பீம்’, ஒரு க்ரைம் திரில்லர் திரைப்படம். இது பழங்குடியின தம்பதிகளான செங்கேணி மற்றும் ராஜகண்ணு ஆகியோரின் வாழ்வியலை எடுத்துரைக்கிறது. அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் பாசத்துடனும், அன்புடனும் வாழ்ந்துவருகிறார்கள். ராஜகண்ணு போலீசாரால் பொய் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு, காவல் நிலையத்தில் இருந்து காணாமல் போகிறார். அவரது மனைவியான செங்கேணி தன் கணவனைத் தேடத் தொடங்குகிறாள். இது தொடர்பாக பிரபல உயர் நீதிமன்ற வழக்கறிஞரான சந்துருவின் உதவியை நாடுகிறாள். சந்துரு தனது முயற்சியில் வெற்றி பெறுகிறாரா..? என்பதே ‘ஜெய் பீம்’ படத்தின் கதை. ஒளிப்பதிவு - எஸ்.ஆர். கதிர்; இசை - ஷான் ரோல்டன்; கலை - கே. கதிர்; படத்தொகுப்பு - பிலோமின்; உடைகள் - பூர்ணிமா ராமசாமி.

 

hfhdnnh

 

‘உடன்பிறப்பே’ (அக்டோபர் 2021)


இயக்குநர் இரா. சரவணன் இயக்கிய திரைப்படம் ‘உடன்பிறப்பே’. கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்திருக்கும் உடன்பிறப்புகள் வைரவன் - மாதங்கி இருவருக்கும் இடையேயான நிபந்தனையற்ற அன்பின் முக்கியத்துவத்தை இத்திரைப்படம் வெளிப்படுத்துகிறது. நீதிக்காக வன்முறை வழியில் போராட வேண்டும் என வைரவனும், சட்ட விதிகளின்படி விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும் என மாதங்கியின் கணவர் சற்குணமும் வலியுறுத்துகின்றனர். பல ஆண்டுகளாக அவர்களுக்கிடையேயான விரிசலை நீக்கவும், குடும்பத்தை ஒன்றிணைப்பதற்காகவும் மாதங்கி எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் பயனற்றதாகிறது. இறுதியில் இந்தக் குடும்ப ஒற்றுமைக்காக மாதங்கி எடுக்கும் உணர்ச்சிகரமான முடிவுதான் ‘உடன்பிறப்பே’. இசை - டி. இமான்; ஒளிப்பதிவு - வேல்ராஜ்; படத்தொகுப்பு - ரூபன்; கலை இயக்கம் - முஜிபூர்; உடைகள் - பூர்ணிமா ராமசாமி.

 

bfhehdrh

 

‘ஓ மை டாக்’ (டிசம்பர் 2021)


அறிமுக இயக்குநர் சரோவ் சண்முகம் இயக்கிய இந்தத் திரைப்படம், குழந்தைகளின் உலகம், அவர்களின் ஆசை, துணிச்சல், தைரியம், நட்பு, நிபந்தனையற்ற அன்பு, விசுவாசம் ஆகியவை குறித்துப் பேசும் அற்புதமான திரைப்படம். பிறவிக் குறைபாடு காரணமாக ஒரு நாய்க்குட்டியை அதன் எஜமானர்களால் கொல்ல உத்தரவிடப்படுகிறது. ஆனால் அது இறுதியில் கொலையாளிகளிடமிருந்து தப்பிக்கிறது. ஒரு பையன் அனைவராலும் வெறுக்கப்படுகிறான். நல்ல மாணவன் அல்ல, அழகான பையனும் அல்ல. ஆனால் மிகவும் மகிழ்ச்சியான அதிர்ஷ்ட குழந்தை. நாய்க்குட்டியும், அந்தப் பையனும் சந்திக்கிறார்கள். அவர்கள் மற்றவர்களின் இதயங்களை வென்று தங்களைத் தகுதியுள்ளவர்களாக நிரூபிக்கிறார்களா என்பதே இப்படத்தின் கதை. ஒளிப்பதிவு - கோபிநாத்; இசை - நிவாஸ் கே பிரசன்னா; எடிட்டர் - மெகா; கலை - மைக்கேல்; உடைகள் - வினோதினி பாண்டியன்.

 

hfhrdhdr

 

‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ (செப்டம்பர் 2021)


இயக்குநர் அரிசில் மூர்த்தி இயக்கிய நகைச்சுவைத் திரைப்படம். இந்தியா முழுவதும் உள்ள அனைத்து தொலைக்காட்சி சேனல்களிலும் ஒரு கிராமத்தைப் பற்றிய செய்தி வெளியாகிறது. ஆனால், அந்தக் கிராம மக்களுக்கு டிவி பார்க்க மின்சாரம் இல்லை. குனிமுத்து 35 வயதான அப்பாவி, விவசாயி. கருப்பன், வெள்ளையன் என்ற தனது காளைகளை இழக்கிறார். அவருக்கும் அவரது மனைவி வீராயிக்கும் குழந்தைகளைப் போல் அந்தக் காளைகள் இருந்தன. அவர் தனது நண்பர் மாந்தினியுடன் தனது காளைகளைத் தேட தொடங்குகையில், அவர் தற்செயலாக நர்மதா என்ற நிருபரைச் சந்திக்கிறார். அவர் அவர்களுக்கு உதவுகிறார். பெரும் போராட்டத்தின் மத்தியில் காளைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். கிராமத்தையும் மேம்படுத்த வேண்டும். இது நடந்ததா? என்பதே இத்திரைப்படத்தின் கதை. ஒளிப்பதிவு - சுகுமார்; இசை - கிரீஷ்; படத்தொகுப்பு - சரவணன்; கலை - முஜிபூர்; உடைகள் - வினோதினி பாண்டியன்.

 

 

சார்ந்த செய்திகள்