சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ள இப்படம், அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் தற்போது படக்குழு புரொமோஷன் பணிகளில் பிஸியாக இருக்கின்றனர்.
அந்த வகையில் பிரபல ஆங்கில ஊடகத்திற்கு சூர்யா பேட்டி அளித்துள்ளார். அதில் சென்னையில் இருந்து மும்பையில் குடி பெயர்ந்தது குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், “ஜோதிகா தன்னுடைய 18 - 19 வயதில் மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து 27 வருடங்கள் ஆகிறது. அவர் எனக்காகவும் எங்கள் குடும்பத்துக்காகவும் இங்கேயே இருந்தார். அவருடைய கெரியர், மும்பை நண்பர்கள், சொகுசு வாழ்க்கை என அனைத்தையும் கைவிட்டார். கரோனோவிற்கு பிறகு ஒரு மாற்றம் தேவைப்பட்டது.
ஜோதிகா அடிக்கடி சவால்களை எதிர்கொள்வார். நான் எப்போதும் சிறந்த இயக்குநர்களுடன் படம் பண்ணும்போது, அவர் முதல்முறை இயக்குநர்களோடு படம் பண்ணுவார். ஆண்களைப் போலவே பெண்களுக்கும் விடுமுறைகள், நட்புகள், பொருளாதார சுதந்திரம், மரியாதை மற்றும் உடற்பயிற்சிக்கான நேரம் தேவை என்பதை நான் உணர்ந்து கொண்டேன். அவர் அவரது குடும்பத்துடன் இருப்பதை நாம் ஏன் தவிர்க்க வேண்டும். அவர் தற்போது மும்பையிலும் பெற்றோருடனும் நேரம் செலவிடுவதில் மகிழ்ச்சியாக இருக்கிறார். ஒரு நடிகையாக அவரது வளர்ச்சி எனக்கு மகிழ்ச்சியை கொடுக்கிறது. அவருக்கு இன்னும் நிறைய வாய்ப்புகள் வரும் என நினைக்கிறேன்” என்றார்.
சூர்யா - ஜோதிகா இருவரும் 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் முதன் முறையாக இணைந்து நடித்தனர். பின்பு இருவரும் காதலித்து 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு தியா என்ற மகளும் தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த சில வருடங்களுக்கு முன் தந்து குடும்பத்தினருடன் சூர்யா மும்பையில் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.