Skip to main content

“எய்ம்ஸ் மருத்துவமனையைக் கேரளாவிற்குக் கொண்டு வருவேன்” - சுரேஷ் கோபி

Published on 04/06/2024 | Edited on 04/06/2024
suresh gopi speech after his lok sabha elections victory

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04-06-24) எண்ணப்பட்டு வரும் நிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில், மதியம் 4.30 மணி நிலவரப்படி பா.ஜ.க கூட்டணி 295 இடங்களிலும், இந்தியா கூட்டணி 237 இடங்களிலும், மற்ற கட்சிகள் 17 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. 

இதில் மோலிவுட் நடிகர் சுரேஷ் கோபி, பா.ஜ.க. சார்பில் கேரளா திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சுனில் குமாரை விட 73 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம் கேரளாவில் முதல் முறையாக நாடாளுமன்ற வேட்பாளரை பா.ஜ.க. வென்றுள்ளது. இது குறித்துப் பேசிய சுரேஷ் கோபி, “நான் முற்றிலும் பரவசமான மனநிலையில் இருக்கிறேன். சாத்தியமில்லாத ஒன்று சாத்தியமாகியுள்ளது. இந்த வெற்றி வெறும் 62 நாள் நடந்த பிரச்சாரம் அல்ல, கடந்த 7 ஆண்டுகளாக நடந்த ஒரு உணர்ச்சிகரமான பயணம். நரேந்திர மோடி எனது அரசியல் கடவுள். நான் வெறும் தேர்தல் அறிக்கையை மட்டும் நம்பவில்லை. ஒட்டுமொத்த கேரளாவுக்காகவும் பாடுபடுவேன். முதல் விஷயமாக எய்ம்ஸ் மருத்துவமனையைக் கேரளாவிற்குக் கொண்டு வருவேன். 

திருச்சூர் தொகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பூத்துளில் எனது கட்சியினர் பணியாற்றினர். அவர்களுக்கு வாழ்த்துக்கள். பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்தும் ஏராளமான தாய்மார்கள், சகோதரிகள் எனக்காக பணிபுரிந்தனர். அவர்களில் பலர் மும்பை, மத்திய பிரதேசம் மற்றும் டெல்லியில் இருந்து வந்தவர்கள். அவர்களின் முயற்சி வெற்றி பெற்றது” என்றார். 

சுரேஷ் கோபி, கடந்த 2016 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். பின்பு அதே ஆண்டில் பா.ஜ.க.வில் இணைந்து கடந்த 2019ஆம் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்