Skip to main content

"நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதைப் பார்த்துக்கொண்டே இருப்பார்" - சுனைனா

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

bfbf

 

நரமாமிசம் உண்ணும் காட்டுவாசி குழுவை மையமாக வைத்து காமெடி, அட்வெஞ்சர், த்ரில்லர் பாணியில், தமிழில் முதல் முறையாக உருவாகும் படம் 'ட்ரிப்'.

 

வரும் பிப்ரவரி 5ஆம் தேதி அன்று திரையரங்கில் வெளியாகவுள்ள இப்படத்தை டென்னிஸ் மஞ்சுநாத் எழுதி இயக்குகிறார். சாய் ஃபிலிம்ஸ் ஸ்டூடியோ சார்பில் ஏ.விஸ்வநாதன் மற்றும் ஈ.பிரவீன்குமார் இப்படத்தை தயாரிக்கிறார்கள். சுனைனா, யோகிபாபு, கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், பிரவீன் குமார், வி.ஜே சித்து, வி.ஜே ராகேஷ், கல்லூரி வினோத், ராஜேஷ் சிவா அதுல்யா சந்திரா, லக்‌ஷ்மி ப்ரியா, சத்யா, மேக் மணி, சதீஷ், அருண் ஆகியோர் நடிக்கும் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. அப்போது அதில் கலந்துகொண்ட நடிகை  சுனைனா இப்படம் குறித்து பேசியபோது...

 

"இயக்குநர் டென்னிஸ் மிகவும் கடின உழைப்பாளி. இப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் செய்துள்ளார். படப்பிடிப்பில் நான் பாதுகாப்பாக இருக்கிறேனா என்பதை உறுதிசெய்து என்னை வெகு இயல்பாகப் பார்த்துக்கொண்டார். படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டபோது, ஒரு நாயுடன் நடிக்கப் போவதாகக் கூறினார்கள். ஆனால், படப்பிடிப்பில் பார்த்தால் பிட்புல் இருந்தது. அதனோடு நடித்தது நல்ல அனுபவமாக இருந்தது. முதலில் என்னோடு நட்பாக இருக்குமா என்கிற சந்தேகம் இருந்தது. ஆனால் போகப்போக நாங்கள் நண்பர்களாக மாறிவிட்டோம். இருவரும் இணைந்து ஆக்‌ஷன் காட்சியில் நடித்துள்ளோம். படத்தில் உழைத்தவர்களுக்கும் பெரும் துணையாக இருந்த அனைவருக்கும் எனது நன்றி" என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“வெற்றிகரமான ஸ்பெயின் பயணம் இன்றுடன் நிறைவடைகிறது” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 06/02/2024 | Edited on 06/02/2024
The successful Spain tour ends today CM MK Stalin

தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஸ்பெயின் நாட்டில் உள்ள பல்வேறு முன்னணி நிறுவனங்களின் நிர்வாகிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள வலியுறுத்தி வருவதுடன், பல்வேறு முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து, ‘ஸ்பெயின் தமிழர்களுடன் முதல்வர்’ எனும் நிகழ்வில் ஸ்பெயின் நாட்டில் வாழும் தமிழர்களிடையே நேற்று முன்தினம் (04.02.2024) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசுகையில், “தமிழ்நாட்டில் இருக்கிறோமா அல்லது வெளிநாட்டில் இருக்கிறோமா என்று எனக்கு இப்போது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டிற்கு இப்போதுதான் நான் முதல்முறை வருகிறேன். ஆனால், பலமுறை வந்ததைப் போன்ற உணர்வைத் தரும் வரவேற்பை நீங்கள் அளித்திருக்கிறீர்கள். கடல் கடந்து வந்து வெளிநாட்டில் வாழும் உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் பிறந்த உங்களுடைய தாய் மண்ணான தமிழ்நாட்டிற்கு உங்களால் முடிந்த அனைத்து உதவிகளையும், செய்து கொண்டிருக்கிறீர்கள். செய்யப் போகிறீர்கள். செய்ய வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தனது ஸ்பெயின் பயணம் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைத்தளப் பதிவில், “ஸ்பெயினின் தொழில்துறை ஜாம்பவான்களான கெஸ்டாம்ப் (Gestamp), டால்கோ (Talgo) மற்றும் எடிபோன் (Edibon) ஆகிய தொழில்துறை நிறுவனத்தின் உயர்மட்ட நிர்வாகிகளுடன் உற்சாகமான பேச்சுவார்த்தைகளை முடித்துள்ளோம். எடிபோனுடனான ரூ. 540 கோடி என்ற மிகப்பெரிய முதலீட்டில் ஒப்பந்தத்தை இறுதி செய்ததில் மகிழ்ச்சியடைகிறேன். நோயெதிர்ப்பு சிகிச்சையில் ஆய்வு மற்றும் மேம்பாட்டில் ஈடுபட்டுள்ள மேப்ட்ரீ (Mabtree) என்ற நிறுவனத்துடன் பயனுள்ள விதமாக ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.

ஸ்பெயினுக்கான வெற்றிகரமான பயணம் இன்றுடன நிறைவடைகிறது. நான் நாளை ஸ்பெயினிலிருந்து புறப்படுகிறேன். சில நாட்களுக்குப் பிறகு உங்கள் அனைவரையும் பார்க்க ஆவலுடன் இருக்கிறேன். அதேபோன்று, ஸ்பெயினில் உள்ள தமிழ்ச் சமூகம் எனக்குக் காட்டிய அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு நான் நன்றியுள்ளவனாக இருப்பேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மருத்துவமனையில் சுனைனா திடீர் அனுமதி

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Sunaina suddenly admitted in  hospital

 

காதலில் விழுந்தேன் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான சுனைனா, நீர்ப்பறவை, தொண்டன், சில்லுக் கருப்பட்டி உள்ளிட்ட பல்வேறு படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். விஜய்யின் தெறி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் வந்த இவர் கடைசியாக ரெஜினா படத்தில் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெளியானது. 

 

இந்த பட ப்ரோமோஷன் நிகழ்ச்சி ஒன்றில், "நான் இப்போது என் சிறு வயது சுனைனாவை நினைத்துப் பார்க்கிறேன். ஒரு கட்டத்தில் இதுபோன்று நடப்பது கனவாக இருந்தது. அது இப்போது நனவாகி இருக்கிறது. ரொம்ப ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்" என நெகிழ்ச்சியுடன் பேசி மேடையிலே கண்ணீர் விட்டிருந்தார். இது பரவலாகப் பேசப்பட்டது. 

 

இந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது போல் ஒரு புகைப்படத்தை தனது சமுக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சுனைனா. விரைவில் வலிமையுடன் மீண்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். எதற்காக சிகிச்சை பெறுகிறார் என்ற காரணத்தை அவர் பகிரவில்லை. அதையும் விரைவில் பகிரவுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். திடீரென மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுனைனாவின் புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.