ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதல் பாடலான 'ஜரகண்டி' மற்றும் இரண்டாவது பாடலான ‘ரா மச்சா மச்சா’ மற்றும் மூன்றாவது பாடலான ‘நானா ஹைரானா’ஆகியவை இதுவரை வெளியாகியுள்ளது. மேலும் படத்தின் டீசரும் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் வருகிற 21ஆம் தேதி அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், வெளியீட்டுக்கு முந்தைய நிகழ்ச்சியை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் புஷ்பா பட இயக்குநர் சுகுமார், சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். சுகுமார் மற்றும் ராம் சரண் கூட்டணி கடந்த காலத்தில் ‘ரங்கஸ்தலம்’ எனும் நல்ல ஹிட் படத்தை வழங்கினார்கள். இதையடுத்து ராம் சரணின் 17வது படத்தை சுமார்தான் இயக்கவுள்ளார்.