Skip to main content

சித்தார்த்துடன் இணைய இதுவே காரணம்! -  இயக்குநர் அருண்குமார்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

S.U Arunkumar Exclusive Interview

 

எடகி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் சித்தார்த், நிமிஷா சஜயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சித்தா’. இதன் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் படம் உருவான விதம் மற்றும் சில முக்கிய விசயங்கள் குறித்து நம்மிடம் பேசினார்.

 

சித்தா படம் உருவாக சித்தார்த் தான் காரணம். நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ண முடிவு செய்திருந்து பின், சில காரணங்களால் தள்ளிப் போய்விட்டது. ஆனால், சித்தார்த் மறுபடியும் என்னை அழைத்து, "இந்த தடவை வித்தியாசமான ஒரு படம் பண்ணனும்" என்று கேட்டார். நானும் அந்த சமயம் வித்தியாசமான கதை களத்தில் படம் இயக்க திட்டமிட்டிருந்தேன். எனவே, நாங்கள் இருவரும் இணைய இந்த ஒரு புள்ளியும் காரணம்.

 

மேலும், சித்தார்த் அவர்களே படத்தை தயாரிக்க, கதை தயாராவதற்கு முன்பே எனக்கு அட்வான்ஸும் கொடுத்தார். பொதுவாகவே, எந்த காட்சியை எழுத நினைத்தாலும் விஜய் சேதுபதி அவர்கள் நினைவில் வருவார். ஆனால், இந்த படத்தில் சித்தார்த்தின் கதாபாத்திரத்தை மனதில் வைத்து கவனத்துடன் அனைத்துக் காட்சிகளையும் எழுதினேன். அதிலும், இருபது படங்களில் நடித்த சித்தார்த், இந்தப் படத்தை முதல் படமென கருதுவதாக பல மேடைகளில் பேசியது அவரின் பெருந்தன்மை தான். அதேபோல், சித்தா படத்தை எடுக்கையில், நிறைய 'நோ' சொல்லி, 'எஸ்' எது என்பதை அறிந்தேன். இதன் மூலம் நமக்கு எது தேவை என்பதனை எளிதில் கண்டறிய உதவும். ஒருவேளை இது ஒர்கவுட் ஆகலாம், இல்லை என்றால் அதனை பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டும். 

 

சித்தா படம் நிறைய கேள்விகளை எனக்குள் உண்டாக்கியுள்ளது. அதற்கான, விடைகளையும் எடுத்து வைத்துள்ளோம். அந்த வினாக்கள் என்னை நோக்கியதாகக் கூட இருக்கலாம். இந்த படத்தில் பெண்களுக்கான தளம் என்பது அனைத்து கதாபாத்திரத்தினுள்ளும் இருக்கும். மேலும், இதில் நடித்தவர்கள் மிகப்பெரிய பங்காற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது. விஜய்சேதுபதி, அவருக்கும் எனக்கும் நெருங்கிய உறவு இருக்கிறது. சேதுபதி படத்தில் வரும் காதல் காட்சியைக் கூட, "சமயலறையில் நடப்பது போல" முதலில் எழுதவில்லை. விஜய்சேதுபதி அவர்கள் தான் நான் எழுதிய காட்சியை வேறுமாதிரி முயற்சிக்கலாம் என ஆலோசித்தார். மேலும், சேதுபதி படத்தில் வரும் சில காட்சிகள் அவரின் அன்றாட வாழ்வில் நடந்தது தான். 

 

சித்தா படத்திற்கு இசையமைக்க திபு நினன் தாமஸை தேர்வு செய்ததற்கு அவரின் சவுண்டிங் தான் காரணம். அது பிடித்துப் போகவே, அவரை அழைத்து பேசினேன். மேலும், சித்தா படத்தின் ப்ரோமோ பாடலை சந்தோஷ் நாராயணன் இசையமைத்துக் கொடுத்தார். என்னை பொறுத்தவரை, இசையும் பாடலும் வாழ்க்கையோடு பின்னப்பட்டது என்று தான் பார்க்கிறேன். 

 

நான் இயக்கிய சிந்துபாத் படத்திற்கு கலவையான விமர்சனம் தான் கிடைத்தது. இது ஒரு விதத்தில் நல்லது எனவும் தோன்றியது. ஏனென்றால், நாம் இயக்கிய விதம் ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள வேண்டுமே. ஆனால், விஜய்சேதுபதி அவர்கள் இதனை மறந்துவிட்டு அடுத்த படம் எந்த மாதிரி பண்ணப் போகிறோம் எனப் பேச ஆரம்பித்தார். அதனால், வெற்றியும் தோல்வியும் திறமையை தீர்மானிக்காது.

 

தேர்ந்தெடுத்த கதை வேண்டுமானால் தோற்றுப் போகலாம், இயக்குநர் தோற்றுப்போக மாட்டார். தோல்வியில், இருந்து நாம் என்ன கற்றுக் கொள்கிறோம் என்பது தான் முக்கியம். எனவே, வெற்றிப்படம் தோல்விப்படம் எனப் பேசுவதிலே நிறைய சிக்கல் இருக்கிறது. மேலும், நாம் ஒரு மொக்கை காட்சியை படம் பிடித்திருப்போம். மாறாக, சிலர் அதனை சிலாகித்துப் பேசுவர். ஒருவேளை, அவர் அந்த காட்சியை வேறு கோணத்தில் பார்த்திருக்கலாம். அதேசமயம், நாமும் இதனை அடுத்த தடவை சரிசெய்து கொள்ளவேண்டும். நம்மீது ரசிகர்கள் நம்பிக்கை வைக்கிறார்கள் எனவே, நல்ல படத்தை தர வேண்டும் என்ற பொறுப்பு இயக்குநரிடம் உள்ளது. அதைத் தாண்டி ஒன்று இருப்பதாக நான் கருதவில்லை.

 

சித்தா படத்தில் ஒரு அழுகைக் காட்சியை சித்தார்த் அவர்கள் ஒரே டேக்கில் ஓகே செய்துவிடுவார். மேலும், நமக்கு தேவையான அவுட்புட்டை சித்தார்த் சிறப்பாக வெளிப்படுத்தினார். ஒருவேளை, நிறைய முறை ஒரு காட்சியை எடுக்க நேரிட்டால். நாம் சரியாக அவருக்கு சொல்லித் தரவில்லை என்று தானே அர்த்தம். பொதுவாகவே, எனக்கு அறிவுரை சொல்வதில் விருப்பம் இல்லை. எனவே, நாம் சரியான கேள்வியை கேட்கும் பொழுது, அதற்கான தீர்வை அவர்களே முடிவு செய்வர். அதனால், இந்தப் படத்தில் குழந்தை வளர்ப்பு குறித்தான கேள்வியை எழுப்பியுள்ளோம். அதிலும், குழைந்தைகள் மொபைல் போன் பயன்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. 

 

என்னை பொறுத்தவரை நான் படம்பிடிக்க நினைத்ததைத் தான் எழுதுவேன். எனவே, எடுக்க முடியாத காட்சிகளை எழுதுவதில்லை. திடீரென, ஒரு சிங்கம், புலி என கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் வைத்து எடுத்தால் இறுதியில் நாம் நினைத்தது வராது. அதேபோல, உணர்ச்சிகரமான காட்சிகளை சரியாக கொண்டுசேர்க்க முடியவில்லை என்ற இடத்தில் தோல்வியை சந்திக்கிறோம். அதனை, அடுத்த படத்தில் சரி செய்ய முயல்கிறோம். தொடர்ந்து, இந்தப் படத்தில் எழுதியதைத் தான் எடுத்திருக்கிறோம். பெரிதாக எந்த காட்சியையும் நீக்கவில்லை. அனைத்து நடிகர்களைப் போல, இந்தப் படத்தில் நடித்த குழந்தைகள் குறித்து நிச்சயம் பேசவேண்டும். இதில் நடித்த குழந்தை நட்சத்திரங்களுக்கு நாம் காட்சியின் ஆழத்தை சொல்லித் தான், நடிக்க வைக்க முடியும். ஏனென்றால் அவர்கள் வயதுடைய  நடிகர்களைப் போலல்லாமல். ஒரு செயலை செய்வதற்கான காரணத்தை நம்மிடம் கேட்கின்றனர். 


 

சார்ந்த செய்திகள்