ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்து, ஜெயம் ரவி, ராஷிக்கண்ணா இணைந்து நடித்துள்ள 'அடங்க மறு' படம் நாளை உலகமெங்கும் வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்ட் சிவா இப்படம் குறித்து நம்மிடம் பேசியபோது... "ஜெயம் ரவியின் உடலமைப்பும், கோபக்கார இளைஞன் தோற்றமும் சண்டைப் பயிற்சியாளர்களுக்கு ஒரு வரப்பிரசாதம். இது எனக்கு மட்டுமல்ல, அவருடன் முந்தைய படங்களில் பணியாற்றிய ஒவ்வொரு சண்டைக்கலைஞருக்கும் வரம். 'ஆக்ஷன்' என்பது ஜெயம் ரவி திரைப்படங்களின் ஒரு இன்றியமையாத பகுதியாக உள்ளது. இது சினிமாவில் அவருடைய ஆரம்ப கட்ட சினிமாக்களில் இருந்து எளிதாக கணக்கிட முடியும். இன்னும் குறிப்பாக, கடந்த ஒரு சில ஆண்டுகளில் வெளியான அவர் படங்களில் வந்த ஆக்ஷன் காட்சிகளை சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். இது 'அடங்க மறு' படத்தின் சண்டைக்காட்சிகளில் வித்தியாசமான மற்றும் தனித்துவமான விஷயங்களை வழங்கியே ஆக வேண்டிய சவாலை கொடுத்துள்ளது. கார்த்திக் தங்கவேலுவின் கதை, வித்தியாசமான விஷயங்களை அமைத்து கொடுக்கும் வாய்ப்பை கொடுத்தது.
படத்தின் முழு கதையும் நாயகனிம் புத்திசாலித்தனமான மற்றும் சுறுசுறுப்பான செயல்களை அடிப்படையாகக் கொண்டது. எனவே நாங்கள் திட்டமிட்டு அவற்றை செயல்படுத்தினோம்" என்றார். ஒரு குறிப்பிடத்தக்க உண்மை என்னவென்றால் ஸ்டன் சிவாவின் மகன்கள் - கெவின் குமார் மற்றும் இளைய மகன் ஸ்டீவன் குமார் ஆகிய இருவருமே கராத்தே சாம்பியன்கள். ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றவர்கள். படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி தற்காப்பு கலையை மையப்படுத்தி இருந்ததால், கெவினை அந்த காட்சிகளுக்கு உதவி சண்டைப்பயிற்சியாராக வைத்துக் கொள்ளும் யோசனையை அவர் கொண்டு வந்தார். ஸ்டன் சிவா தனது மூத்த மகன் கெவின், சண்டைப்பயிற்சியாளராக அறிமுகமாவதால் 'அடங்க மறு' அவருக்கு மிகவும் 'ஸ்பெஷல்' என கருதுகிறார். "ஆம், இது எனக்கு மிகவும் ஸ்பெஷல். என் இதயத்துக்கு நெருக்கமான படம். நானும், என் மூத்த மகன் கெவினும் இணைந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு சண்டை அமைக்கும் வாய்ப்பு கிடைத்தது" என்றார்.