தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அந்த வகையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் வருகிற டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதைத் தவிர்த்து 'தி ஐ' (The Eye) என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார். டாப்னே ஷ்மோன் என்ற பெண் இயக்குநர் இயக்கியுள்ள இந்த படத்தில் மார்க் ரவுலி கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஸ்ருதிஹாசன், பின்பு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்ருதிஹாசன், அவர் நடித்துள்ள ஹாலிவுட் படம் பற்றிக் கூறும்போது, "படம் முழுவதும் முடிந்துவிட்டது. இப்போது சர்வதேச பட விழாக்களில் இருக்கிறது. அது எனக்கு ரொம்ப பெருமையான விஷயம். அந்த படத்தில் ஒரு இந்திய பெண்மணியாக நடித்துள்ளேன். நம்முடைய இந்திய கலாச்சாரம் ஆங்கில கதையிலும் சிறிது தெரியும். அது எனக்கு பிடிச்ச ஒரு விஷயம். அதுமட்டுமல்லாது அந்த படத்தில் தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர் என அனைவரும் பெண்கள். அது மாதிரி ஒரு டீமுடன் முதல் முறையாக வேலை பார்த்தேன். அது அழகாக இருந்தது.
ஹாலிவுட் துறைக்கும் இந்திய துறைக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. சில விஷயங்கள் எங்களுக்கு சாதகமாக இருக்கு. சில விஷயங்கள் அவங்களுக்கு சாதகமாக இருக்கு. எல்லாரும் கதை சொல்கிறார்கள். எல்லாரும் உழைக்கிறார்கள். மொழி மட்டும் மாறுகின்றது" என்றார்.