இசையுலகில் தனது இனிமையான குரல் மூலம் இன்றும் ரசிகர்கள் மனதில் இருப்பவர் மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இன்றுடன் அவர் மறைந்து 3 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திருவள்ளூர் பொன்னேரியில் உள்ள பாலசுப்ரமணியம் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார்.
பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "இத்தனை வருஷங்கள் அப்பாவை வாழ வைத்த, அவரது பாடல்கள் மூலம் வாழவைத்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. அப்பாவுக்காக நான் என்ன செய்ய முடியுமோ அதை செய்து கொண்டிருக்கிறேன். அதை முடித்துவிட்டு அரசிடம் போகவுள்ளேன். ரசிகர்களின் ஆசைப்படி அரசாங்கம் மணிமண்டபம் கட்டினால் நல்லது தான். நேரடியாக அரசிடம் போய், மணிமண்டபத்துக்கு தொகை கொடுங்க என்று நான் கேட்பது சரியாக இருக்காது" என்றார்.
அப்போது எஸ்.பி.பியின் பாடல்களை அரசுடைமையாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், "எங்கிட்டே அப்படி யாரும் சொன்னதில்லை. அதெல்லாம் தேவையில்லை. யார் வேண்டுமானாலும் பாடலாம். எஸ்.பி.பி என்பது பொதுச் சொத்து. எல்லாரும் கேட்டு மகிழுங்கள்" என்றார்.