சூர்யாவின் '2டி எண்டர்டெய்ன்மென்ட்' தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள படம் 'விருமன்'. இப்படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்க, பிரகாஷ் ராஜ், ராஜ்கிரண், சூரி, கருணாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் வரும் 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சமீபத்தில், மதுரையில் நடைபெற்ற இசை வெளியிட்டு விழாவில், "1000 கோவில் கட்டுவதைவிட, 1000 அன்ன சத்திரம் கட்டுவதை விட ஒருவரை படிக்க வைப்பது பல நூறு ஆண்டுகள் பேசும். அதை சூர்யா அண்ணன் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்" என்று பேசியிருந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
இந்நிலையில் இப்படத்தை பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய சூரி, "மதுரையில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் 1000 கோவில்கள் கட்டுவதை விட ,ஏழைக்கு ஒரு கல்வி கொடுப்பது இன்னும் சிறப்பானது என்று சொல்லியிருந்தேன். நான் அதை யாரும் மனதையும் புண்படுத்த வேண்டும் என்று சொல்லவில்லை. கோவில்களுக்கு எதிரானவன் நான் இல்லை. நான் சாமி கும்பிடுறவன்தான். மதுரை மீனாட்சி அம்மனோடு தீவிர பக்தன். அதனால்தான் என்னுடைய ஹோட்டல்கள் அனைத்திற்கும் அம்மன் பெயரையே வைத்திருக்கிறேன். அப்படி இருக்கையில் நான் எப்படி கோவில்களை பற்றி தவறாக பேசுவேன்.
அன்றைக்கு கல்வியை ஒரு சிறப்பான விஷயம் என்று சொல்வதற்காக தான் அப்படி பேசினேன். ஆனால் அதை சிலருக்கு தவறாக புரியப்பட்டுருக்குன்னு நினைக்கிறேன். யாரும் என்னை தவறாக நினைக்க வேண்டாம். நான் எந்த கோவிகளுக்கும் எதிரானவன் அல்ல. நான் படிக்காதவன் எனக்கு படிப்பு கம்மி, படிக்காதவன் என்றதால நிறைய இடங்களில் எனது கருத்து தவறாக புரிந்துகொள்ளப்படுவதால் மனசு உடைந்து போகிறேன். அதனால் எல்லாரும் நல்லா படிக்கணும். இதை நான் சொல்லவில்லை, அன்று கல்வியின் உள் நோக்கத்தை உணர்ந்து மகாகவி பாரதியார் சொன்னார். அதைத்தான் மதுரையில் நானும் சொன்னேன். என்னை தவறாக நினைக்காதீர்கள். நானும் சாமி கும்புடுறவன்தான். நான் இப்பவும் சொல்றேன் அனைவருக்கும் கல்வி வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.